சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2016

நிரம்பல்




நான் எழுதுவது கடிதம் அல்ல !! 
உள்ளம் அதில் உள்ளவைதான் எழுத்தும் அல்ல !! எண்ணம் .....
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள !! 





கணிணியுகம் நம் வாழ்வை ஆக்ரமிப்பதற்கு முன்பு வரை, இன்னும் எளிமையாகச்  சொல்வதானால் "ஈமெயில்", "வாட்ஸப்", "ட்விட்டர்", "முகநூல்" ஆகியவை நம் வாழ்வை பின்னிப்பிணைப்பதற்கு முன்பு வரை கடிதம் எழுதுவதும், வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகளின் வழி பறிமாறிக்கொள்வதுமே புழக்கத்தில் இருந்து வந்தது.  தூரத்திலிருந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும் கூடவே "பேனா நட்பு" எனும் பெயரில் நட்பை பகிர்ந்துகொள்ளவும் கடித பரிவர்த்தனை பெரும் பங்காற்றியது. .இந்தப் பதிவு பேனா நட்பு மாற்றியமைத்த ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம்.

அவ‌ந்திகா, ஐந்து பிள்ளைகள் கொண்ட‌ குடும்பத்தில் மூன்றாவதாய் பிற‌ந்த பெண். வயது இருப‌துக்கு மேல், ஆள் பார்க்க சற்று மாநிறமாய் காட்சியளித்தாலும் மிகவும் களையான முகத்தோற்றம் கொன்ட அழகான பெண். வடிவழகும், பெரிய கூர்மையான விழிகள், மை தீட்டாமலேயே அடர்ந்த கருமையான புருவங்கள், எடுப்பான நாசி, சற்றே பெரிய இதழ்கள் என பார்க்கும் எவரையும் மறுபடியும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி.

அவந்திகா தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்று இடைநிலைப்படிப்போடு கல்விக்கு விடைகொடுத்துவிட்டு ஒரு மின்சார சாதனங்கள் உருவாக்கும் தொழிற்சாலையில் அலுவலகப்பிரிவில் பணியிலமர்ந்தாள். கலகலப்பாக பேசும் தன்மையினாலும், சிறப்பாய் பணியாற்றும் திறமையினாலும் அங்கே பணிபுரியும் எல்லோருக்கும் அவள் நெருக்கமாகிப்போனாள், நிறைய நண்பர்கள், தோழிகள் எனினும் அவள் மனங்கவர்ந்த வாலிபன் யாரையும் அந்த நண்பர் குழாமில் அவளால் அடையாளம் காண முடியவில்லை.

அவர்கள் குடும்பம் வாழ்ந்த‌து அவளின் தந்தை வழித்தாத்தா விட்டுச் சென்ற சொந்த‌நிலத்தில் அமைந்த வீட்டில், பலகையால் எழுப்பப்பட்ட வீடுதான் என்றாலும் "வாடகை" எனும் பிக்கல் பிடுங்கல் இல்லாத நிம்மதியான வசிப்பிடம் அவர்களுடையது. வீட்டிற்கு அருகாமையில் மீன்கள் துள்ளும் ஒரு சிறு அல்லி குளம், அழகு சொறியும் பூக்களும், உணவிற்கு தேவையான காய்கறிகள் விளையும் பசுமை நிறைந்த தோட்டம், ஆடு, மாடு, கோழி என கால் நடைகள் வளர்ப்பு என உணவுக்கு தேவைப்படும் பெரும்பாலானவற்றை அவள் தாய் சொந்தமாகவே வீட்டைச் சுற்றி ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

அவள் தந்தை மோட்டார் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார், அவந்திகாவின் மூத்த இரண்டு அண்ணன்களும், இளைய இரண்டு தம்பிகளும் இடைநிலைப்படிப்போடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அருகாமையிலிருந்த தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். ஆளாளுக்கு கையில் தாராள‌மாய் பணப்புழக்கம் என்பதால், வீட்டில் பணத்தேவை என்ற பிரச்சனை எப்பொழுதுமே எழுவதில்லை. அவர்களின் தாயின் சேமிப்பில் வங்கியில் நிறைய பணமும், தேவைக்கு மேல் தங்க ஆபரணங்களும் கைவசமிருந்தன. பருவ வயதடைந்துவிட்ட பெண்ணையும், வாலிப வாசலில் நிற்கும் மகன்களையும் மணமுடித்துவைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர் அவர்களின் பெற்றோர். அங்கே இங்கே என்று சொல்லி தங்கள் தகுதிக்கேற்ப தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர் பெற்றோர்.

அவந்திகா தன் பெற்றோர்களின் ஏற்பாடுகள் எதிலும் கவனம் கொள்ளாது தன் தொழிலிலேயே அதிக கவனம் செலுத்தி நாட்களைக் கடத்தி வந்தாள்.அவளது தோழியரில் மாலா எனும் பெண் நன்கு எழுதும் திறமையை கொண்டிருந்தாள். நாளிதழ்களில் பிரசுரமாகும் தனது எழுத்துப் படிவங்களை தன் நண்பர்களிடம் காட்டி பெருமிதம்கொள்வாள் மாலா.

அவந்திகா அவளிடம் நெருக்கமாக இருந்ததால் அவளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தானும் நாளிதழ்களுக்கும், மாத இதழ்களுக்கும் துணுக்குகளும், கேள்விகளும் அனுப்ப ஆரம்பித்தாள். தனது கேள்விகளும், துணுக்குகளும் பிரசுரமாகும் பட்சத்தில் தனக்கு நெருக்கமான அனைவரிடமும் காட்டி அகமகிழ்ந்து போனாள். நாளடைவில் வருட சந்தா கட்டி நாட்டில் பிரபலமாக வெளியாகும் ஓரிரு நாளிதழ்களும், மாத இதழ்களும் தனக்கு வாடிக்கையாக கிடைக்கும்படி செய்து கொண்டாள். அவ்வூரில் இயங்கி வந்த வாசகர் வட்டத்திலும் இணைந்து செயல்பட ஆரம்பித்தாள்.

வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற‌வை வாழ்வை ஆக்ரமிப்பதற்கு சற்று முன்பான காலக்கட்டம் அது என்பதால் அப்போது படித்த இளையோர்களிடையே "பேனா நட்பு" மிகவும் பிரபலம். தற்போதைய தொழில் நுட்பங்கள் தாண்டியும் இன்னமும் பேனா நட்பு உயிருடன் மாத இதழ்களின் தயவால் வலம்வந்துகொண்டுதானே இருக்கிறது. நமது கதாநாயகி அவந்திகாவிற்கும் பேனா நட்பு வேண்டும் எனும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது. உடனே புகழ்பெற்ற ஒரு வார சஞ்சிகையில் தனது அழகான புகைப்படமொன்றை விலாசத்துடன் பேனா நட்பு பகுதிக்கு அனுப்பிவைத்தாள்.

அவள் அனுப்பிய மறுவாரமே பேனா நட்புப் பகுதியில் அவளின் புகைப்படம் விலாசத்துடன் வெளிவந்தது. அவளுக்கு பல ஆண்கள், சில பெண்கள் என பலரிடமிருந்து நிறைய‌ கடிதங்கள் வரத் துவங்கின. கிடைத்த கடிதங்களில் தனக்குப் பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து பதில் அனுப்பினாள். அவளின் நட்பு வட்டத்தில் பேனா நண்பர்களும் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அவந்திகா அம்மா தந்த சூடான தேனீரைச் சுவைத்தபடியே தனக்கு வந்திருந்த கடிதங்களை ஆவலுடன் பிரித்து படிக்க ஆரம்பித்தாள். இறுதியாக நேர்த்தியான கையெழுத்துக்களால் தன் விலாசம் தாங்கி வந்திருந்த அந்த கடிதத்தை பிரித்தவள் மணிமணியான கையெழுத்துக்கள் தாங்கி மலர்ந்திருந்த அந்த மடலின் அழகான எழுத்துக்களில் சொக்கிப் போனாள் .

வசந்த் எனும் நபர் அவளிடம் பேனா நட்புக்கோரி  அவளுக்கு அனுப்பிய கடித‌ம் அது. ஓர் ஆணின் கையெழுத்து இத்தனை அழகாய் இருக்க முடியுமா ? பிரமிப்பாய் இருந்தது அவளுக்கு. அச்சடித்ததைப் போன்று முத்து முத்தான கையெழுத்துக்களை கோர்வையாய் தாங்கி, கண்ணியமாய் எழுத‌ப்பட்ட மடல் அது.

ஒரு தொழிற்சாலையில் தான் மேலாளர் (மானேஜர்) எனவும், நடுத்தர வயது திருமணமாகாத ஆண் என்றும் தன்னைப்பற்றிய சுருக்கமான குறிப்புகளுடன் அவளை சஞ்சிகையில் வெளிவந்த பேனாநட்புப் பகுதியில் கண்டதாகவும், அவளிடம் பேனா நட்புக் கொள்ள தாம் விரும்புவதாகவும் அதில் எழுதியிருந்தது.

அவந்திகாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை, முத்து முத்தான கையெழுத்து, பிழையில்லாத தமிழ், நேர்மையான விண்ணப்பம். முதல் வேலையாய் அக்கடிதத்திற்கு தன்னைப்பற்றிய மேலும் விவரங்களுடன் பதில் மடல் வரைந்தாள், விரைந்து அதை அஞ்சலில் சேர்ப்பித்தாள். அவள் எதிர்பார்த்தைப்போலவே வசந்திடமிருந்து அதிவிரைவில் பதில் கடிதம் வந்துசேர்ந்தது.....


தொடரும்.....

புதன், 21 அக்டோபர், 2015

ஆண்பாவம் (நிறைவு)

வருடங்கள் உருண்டோடின, எங்களின் இனிய வாழ்விற்கு அடையாள‌மாய் ஒன்றன் பின் ஒன்றாய் 6 குழந்தைகள் பிறந்தனர். திருமணமானது முதல் ரேவதியை வேலைக்கு அனுப்பாது வீட்டிலேயே வைத்திருந்தேன். அவள் மனம் மகிழ அவள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிவைத்தேன். கிடைக்கும் சம்பள‌த்தை என் அவசிய தேவைகளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதப்பணம் அத்தனையும் அவள் கையில் கொடுத்துவிடுவேன். குடும்பம் பெருகிய பின் தேவைகள் அதிகரித்து வருமானப் பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. இரவு பகல் சளைக்காது வேலை செய்தும் வீட்டுச் செலவுகளில் துண்டு விழுந்தது.

ரேவதி இதை சாக்காய் வைத்து அதிகம் சம்பாதிக்க அயலூருக்கு செல்லலாம் என நச்சரித்து, கெடாவிலிருந்த என்னை மலாக்காவிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே அவளின் நெருங்கிய உற‌வினர்கள் பலர் வாழ்ந்துவந்தனர். என் உறவுகளிடமிருந்து பிரிந்த‌து எனக்கு வருத்தமே. என்ன செய்வது, வாழ்வைத் தொடரவேண்டுமே, அதற்கு அதிகப் பணம் மிக முக்கியமல்லவா ?

நிறைய முயற்சிகளுக்குப்பின் ஒரு பெரிய தொழிற்சாலையில் அனுபவத்தை முன்வைத்து நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. குடும்பத்தைக் கரையேற்ற அல்லும் பகலும் அயராது உழைக்க ஆரம்பித்தேன்.

குடும்பத்துடன் செலவிடும் நேரம் சொற்பமானது, வேலை மட்டுமே என் கவனமானது, கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்தேன். கை நிறைய சம்பளத்தை ரேவதியின் கையில்  கொடுத்து அவள் முகம் மலரும் அழகைக் கண்டு மகிழ்வேன். எல்லாப் பொறுப்புகளையும் அவளே முன்வந்து கவனிக்க, கவலையற்று வேலையில் முழுக்கவனம் செலுத்தினேன். என் உடல் சோர்ந்து, அலுப்படையும் நேரங்களில், ரேவதி நாம் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து வைத்திருப்பாள். கூடிய விரைவில் அந்தப் பண‌த்தைக்கொன்டு ஒரு சிறு வியாபாரம் துவங்கி, செளகரியமாக தொழில் செய்ய வேண்டும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என மனக்கோட்டைகள் கட்டியவாரே வேலை செய்வேன். மனம் உற்சாகமடைய அலுப்பும் போன இடம் தெரியாது.

என் மூத்த குழந்தைகளுக்கு பதின்ம வயதானது. இடிவிழுந்தாற்போல என் தொழிற்சாலை திடீர் நக்ஷ்டத்தில் மூடப்பட்டது. நிலைகுலைந்துபோனேன் நான். இருப்பினும் மனைவியின் சேமிப்பில் இருக்கும் பணத்தைக் கொன்டு நாம் விரும்பிய வியாபாரம் துவங்கலாம் எனும் எண்ணத்துடன் வீடு திரும்பி ரேவதியிடம் நடந்ததைக் கூறினேன். கலங்கிய எனக்கு ஆறுதல் கூறி அரவணைப்பாள் என ஓடோடி வந்த என்னை நான் நிலை குலையும் வண்ணம் கோப முகங்காட்டி ஆத்திரத்துடன் பேசினாள். அவள் நடவடிக்கை எனக்கு ஆச்சரியத்தைத் தர, என் சம்பளப்பணத்தில் சேமிப்பைப்பற்றி அவளிடம் வினவ ஆரம்பித்தேன். அதற்கு அவள் கூறிய பதில் எனக்கு ஆயிரம் இடிகள் என் தலையில் ஒரே சமயத்தில் இற‌ங்கிய வேதனையைத் தந்தது. கொஞ்சமும் சேமிக்காமல் ஊதாரியாய் எல்லாப் பண‌த்தையும் செலவழித்தும் தன் உறவுகளுக்கு தாரை வார்த்தும் முடித்துவிட்டாள் என் மனைவி. இவை யாவும் என் கவனத்திற்கு வராமல் அத்தனை சாமர்த்தியமாய் செயல்பட்டிருக்கிறாள் என் அருமை மனைவி.
ஆத்திரத்தில் கண்மறைக்க முதல் முதலாய் அவளுக்கும் எனக்கும் ஆரம்பித்தது சண்டை. அன்று ஆரம்பித்தது எனக்கு கலிகாலம். அநாகரீகமாய் சத்தமிட்டு சண்டையிடத்துவங்கிய என் மனைவி சத்தம் கேட்டு விழித்த குழந்தைகளைக் கண்டதும் அழுது புலம்பி மாய்மாலம் செய்யத் துவங்கினாள். என் குழந்தைகள் திகைப்புடன் எங்களை நோக்கினர். ரேவதியின் கொடூரமான மறுபக்கம் ஆரம்பமானது....

என் வாழ்வின் வேதனையான காலக்கட்டம் ஆரம்பித்துவிட்டது என்பதை உண‌ர்ந்தேன். பல இடங்களில் வேலை தேடியும் வயதும், கல்வித் தேர்ச்சிக் குறைவும் சேர்ந்து எனக்கு திருப்திகரமான சம்பளத்துடன் வேலை அமையவில்லை. வீட்டில் என்னை மிகவும் மரியாதை குறைவாக நடத்தத் தொடங்கினாள் என் மனைவி. வேண்டா வெறுப்புடன் அவள் விட்டெறியும் நகைகளை விற்று குடும்பம் தட்டுத் தடுமாறி தள்ளாடி நடக்க ஆரம்பித்தது.
குழந்தைகளுக்கு நல்ல உணவு இல்லை. இளைய குழந்தைகளுக்கு பால் இல்லை. எனக்கோ வீட்டில் மரியாதையும், அன்பும் இல்லை...!

நான் எவ்வளவோ சம்பாதித்துக் கொடுத்தேன், என் மனைவியின் ஊதாரித்தனத்தினால் இன்று வறியனாகி வேதனையில் வாடி நின்றேன்.
என் மனைவி என்னைப்பற்றி ஓயாது வாசித்த புகார்ப்பட்டியல் என் குழந்தைகள் என்னை மதிக்காமலும், என்பால் அன்பில்லாமலும் ஆக்கிவிட்டிருந்தது. கொஞ்சமும் வாய் கூசாது என்னை குடிகாரன் என்று குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் என் மனைவி.

சோகம் என்னை சூரையாடியது. என் பெற்றோர், உடன்பிறந்தோரின் மீது ஏக்கம் பிறந்தது. வேலை, வேலை என்று என் வாழ்வின் பெரும்பகுதியை தொலைத்தவன் நான், அதில் சொல்ல முடியாத ஒரு மாபெரும் பாவத்தையும் செய்திருந்தேன். ஆம் சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் தாய் இறைவனடி எய்தினார். எத்தனை சுயநலக்காரன் நான் ? என்னை சீராட்டி, பாலூட்டி வளர்த்த என் தாயின் இறுதிச் சடங்கிற்கும் வேலையைக் காரணங்காட்டி நான் செல்லவில்லை.இன்று அதை நினைத்து வருந்தி அழுதேன், ஆண்மகன் அழக்கூடாது என்கிறார்கள். ஆனால் என் நிலை என்னை கலங்கடித்து கண்ணீர் விடச்செய்தது. என் உடன் பிற‌ந்தவர்கள்  மன்னிப்பார்களா ? எனக்கு உதவுவார்களா ? ஆதங்கத்துடன் போன் செய்தேன். அண்ணன் பேசினார். சுருக்கமாக என் நிலையை விவரித்தேன். உடனே புறப்பட்டு வருமாறு அண்ணன் அழைத்தார். இரத்த பந்தத்தின் வலிமையை எண்ணி மகிழ்ந்தேன். வீட்டிற்கு வந்து புறப்படுவதற்கு தயாரானேன். என் குடும்பத்தினரை காண‌ச் செல்வதாக ரேவதியிடம் கூறி அனுமதி வாங்க முடியாது. நான் அவளுக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தம், என் உழைப்பு முழுமையும் அவர்களையே சேர வேண்டும், எந்த நிலையிலும் நான் என் குடும்பத்தினருடன் இணைந்துவிடக்கூடாது என்பது அவள் எண்ணம். இதை அறிந்திருந்ததால் குழந்தைகளிடம் வேலை விடயமாய் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டேன்.

என் உற‌வுகளிடம் சென்று சேர்ந்தேன், என் தோற்றத்தையும், நிலையையும் கண்டு அவர்கள் கலங்கினர். பாலைவனத்தில் பெய்த மழைபோல் வறுமையாலும், சோகத்தாலும் வரண்டு போயிருந்த என் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது, தாயின் படத்திற்கு முன் அழுதேன். நோயுற்றிருந்த என் தந்தையின் கரங்களைப் பற்றி ஈரமான என் கண்களில் ஒற்றிக்கொண்டேன், ஒரு தந்தையின் நிலையிலிருந்து என் தந்தையின் உழைப்பையும், தியாகத்தையும் உணர்ந்து முதன் முறையாய் வருந்தினேன். உற‌வுகள் அனைத்தையும் ஒருங்கே சந்தித்து மகிழ்ந்தேன், அவர்கள் அன்பில் நெகிழ்ந்தேன். தாயின் நிலையிலிருந்து வீட்டுப் பெண்மணிகள் விரும்பியதைச் சமைத்துப் பறிமாறி உபசரித்தனர். நாட்கள் நகர்ந்ததே தெரியாமல் மூன்று நாட்கள் கரைந்தது, நான் திரும்ப வேண்டிய நாளும் வந்தது, அண்ணன் பண‌ உதவி செய்தார். கூடிய விரைவில் குடும்பத்துடன் திரும்பி வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தினார். எனக்கும் அதுவே சரியான வழியாய்ப்பட்டது.

மனம் நிறைய மகிழ்வுடன், கை நிறைய பணத்துடன் வீடு திரும்பினேன், நிச்சயமாய் இந்தப் பண‌த்தை ஊதாரியான என் மனைவி ரேவதியிடம் கொடுக்கக் கூடாது, நாமே நல்ல விதத்தில் குடும்பத்திற்கு அவசரத்திற்கான சேமிப்பாய் வைத்துகொள்வோம் எனும் எண்ணத்தில் பணத்தை வங்கியில் சேமித்துவிட்டு வீடு திரும்பினேன். விபரீதம் உண‌ராமல் !

 நான் என் சொந்தங்களை சென்று கண்டதை ரேவதியின் உற‌வினர் யாரோ அவளுக்குத் தெரியப்படுத்தியிருக்க, கடும் கோபத்தில் அவள் இராட்சசியாய் மாறியிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கையில் கிடைத்த ஒரு பொருளை என்னை நோக்கி வீசினாள், மிகச்சரியாக அது என் தலையில் மோதி, என் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. ஆவேசமான நானும் திருப்பி அவளைத் தாக்க ஆரம்பித்தேன். உடனே என் மூத்த பிள்ளைகள் மிகவும் மூர்க்கமாக என்னைத் தாக்க ஆரம்பித்தனர். யாருக்காக இரவு, பகல் பாராது உழைத்தேனோ, யாருடைய மகிழ்ச்சிக்காக, என், உடல், பொருள், ஆவி, உழைப்பு அத்தனையும் சமர்ப்பண‌ம் செய்திருந்தேனோ அவர்கள் என்னை அடித்துத்துவைத்துக் கொன்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாக நான் மயங்கிச் சரிந்தேன்.

கண் விழித்துப் பார்க்கும்போது என் வீட்டின் ஒரு இருட்டறையில் என் கை கால்கள் கட்டப்பட்டு நான் கிடந்தேன். உடலில் ஆங்காங்கே இரத்தம் உறைந்த காயங்கள். உடலைவிட மனதில் அதிக வலி. வெகுவாய் பிரயத்தனப்பட்டுக் கொன்டு என் கட்டுக்களை அவிழ்த்து என்னை விடுவித்துக்கொண்டேன். கையிலும் காலிலும் பலத்த அடி, சரிவர நட‌க்க இயலவில்லை. வீடு நிசப்தமாயிருந்தது. அனைவரும் உற‌ங்கிவிட்டனர் போலும். மெல்ல அங்கிருந்து கிள‌ம்பினேன். விதியை நொந்தவாறு தாங்கித் தாங்கி நடந்தேன். என்னைக் கொஞ்சம் சரி செய்துகொண்டேன் பின்னர் அருகாமையிலிருந்த காவல்துறை அலுவலகத்திற்குச் சென்றேன். என் நிலையை அங்கே பதிவு செய்தேன். என் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொன்டு விடை பெற்றேன். என செயல் சரியா, தவறா ? எனக்குப் புரியவில்லை. அங்கிருந்து விடைபெற்று என் காயங்களும், அதில் வழியும் குறுதியும் மட்டுமே என்னுடன் தொடர‌, பொழுது புலர இன்னும் கொஞ்சம் நேரமிருக்க, அந்த பின்னிரவில் திசை இழந்து தொடர்கிற‌து எனது பயணம்.......

@"மன்னன்" மாத இதழில் வெளிவந்த‌ படைப்பு




 
















 

 




















வியாழன், 24 செப்டம்பர், 2015

ஆண்பாவம்

வணக்க‌முங்க, என் பேரு ராஜசேகர் என்ற ராஜா. சாதனையாள‌ர்கள் மத்தியில் சாமானியனான என் வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ளவே இந்த படைப்பு. பெண்பாவம் பொல்லாதுன்னு சொல்றாங்க, அப்ப ஆண் பாவமே இல்லையா? தொடர்ந்து படிங்க....

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கெடாவில் உள்ள ஓர் இரப்பர் தோட்டத்தில். உடன் பிறந்தோர் 11 பேர். நான்தான் கடைக்குட்டி, ஏகத்துக்கு செல்லம். படிப்பு ஒழுங்காய் ஏற‌வில்லை, இருந்தும் ஓரளவு படித்தேன். பெற்றோரும் உடன்பிறந்தோரும் என் போக்கிலேயே விட்டனர். பாலப்பருவம் பாகாய் இனித்தது. நண்பர்கள், ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம் என வாழ்க்கை நகர்ந்தது, படிப்பு முடிந்து, பதின்ம வயது கடந்து வாலிபனாய் வலம்

வரலானேன்.

காலப்போக்கில் நாட்டின் முன்னேற்றம் தோட்டங்களை நாகரீகம், நவீனம் எனும் பெயரில்  கபளீகரம் செய்யத்துவங்கியது. இந்தியர்களின் எதிர்காலத்தை/வாழ்வாதாரத்தை அது வெகுவாகப் பாதித்தது. சூரைத்தேங்காயாய் சிதறிய தோட்டத்து மக்கள் வாழ்வு தேடி பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

நானும் எனது குடும்பமும் அருகாமையிலிருந்த நகருக்கு குடிபெயர்ந்தோம். எனது சகோதர சகோதரிகள் அருகாமையிலிருந்த தொழிற்சாலைகளில் வேலைசெய்ய ஆரம்பித்தனர். அதன்பின்னர் ஒருவர் பின் ஒருவராய் மணமுடித்து அவரவர் இல்லற வாழ்வை ஆரம்பித்தனர்.

கட்டிளங்காளையாய் வலம் வந்து கொண்டிருந்த நானும் அருகாமையிலிருந்த சர்க்கரைத்தொழிற்சாலையில் பணிபுரிய ஆரம்பித்தேன்.
விளையாட்டுத்தனமும், வேடிக்கையும், நகைச்சுவை உண‌ர்வும் நிறைந்திருந்தாலும் கூடவே நிறைவாய் பணிபுரியும் திறமையும் எனக்கு வாய்த்திருந்தது. நல்ல பெயர், நிறைய நண்பர்கள், நல்ல வருமானம் என வாழ்க்கை மேலும் இனிக்க ஆரம்பித்தது. அங்கே என் வாழ்வின் அடுத்தக்கட்டம் அரங்கேற‌த் துவங்கியது.

நான் வேலை செய்யும் பகுதியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ரேவதியின் வரவுதான் அதற்குக் காரணம். ரேவதி என் உள்ள‌த்தில் திருமண ஆசை எழக் காரணமானாள். நல்ல எழுமிச்சம் நிற‌த்தில், வடிவழகுடன், இலட்சணமான முகத்தோடும், இடைவரை கூந்தலோடும் மிகவும் அழகாகக்
காட்சியளித்தாள். நிறைய ஆண்களின் கண்கள் அவளை மொய்க்க அவள் கவனமோ என் மேல் இருப்பதை அவள் தோழியின் வழி அறிய வந்தபோது என் உள்ளம் உவகையில் கூத்தாடியது.

கவர்ச்சியான கருமை நிறம், களையான முகம், உயரமான தோற்ற‌ம், கம்பீரமான குரல், கூடவே நல்ல சுறுசுறுப்பும், கடுமையான உழைப்பாளியாகவும் நான் விளங்குவதாகவும் அதனால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதை அவளின் தோழியின் வாயிலாக அறிந்துகொன்டேன்.

ஒரு நாள் தனிமையில் சந்தித்து இதயத்தை இடம் மாற்றிக்கொன்ட நாங்கள் காதல் வானில் சிறகடித்துப்பறந்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். ரேவதியின் குடும்பத்தினர் முழு சம்மதத்தையும் தந்தனர்.

நான் எதிர்பார்த்தபடியே என் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. உறவினர் பெண்ணை நான் மண‌முடிக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. இருப்பினும் என் மனதைப் புரிந்துகொன்டு ரேவதியையே எனக்கு மனமுடித்துவைக்க முன்வந்தனர்.

சீரும் சிறப்புமாய் திருமணம் நடந்தேறியது, அழகுதேவதையாய் மணவறையில் ஜொலித்தாள் என் இதயராணி ரேவதி. ஆரம்பத்தில் திருமணத்திற்கு தடை சொன்னதால் என்னவோ என் பெற்றோர் எங்களுக்கு தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்துவிட்டு என் சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

ரேவதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. என்னையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள். திருமண வாழ்க்கை கட்டிக்கரும்பாய் இனித்தது. உலகிலேயே மிகவும் அதிர்க்ஷ்டசாலியான மனிதன் நானே என அகமகிழ்ந்தேன். எல்லாம் கொஞ்சகாலமே....

அடுத்த பதிவில் நிறைவடையும்....

@"மன்னன்" மாத இதழில் வெளிவந்த‌ படைப்பு



   














       




















   

புதன், 17 ஜூன், 2015

உங்க காலை வெட்டிரலாமா சார் ?


நடிகர் விஜயகாந்த் நடித்த "ரமணா" திரைப்படத்தில் ஒரு மருத்துவமனைக்காட்சி, இறந்து போன‌ ஏழை ஒருவரை தனியார் மருத்துவமனையில், உயிருக்குப் போராடுகிறார் எனக்கூறி மருத்துவமனையில் சேர்ப்பார் கேப்டன். அவரிடம் அந்த மனிதர் இறந்து போனதற்கான அரசாங்க அத்தாட்சி கைவசமிருக்கும். அதை அறியாத அந்த தனியார் மருத்துவமனையினர் நிகழ்த்தும் நாடகங்களைக் கண்டு இறந்தவரின் மனைவி மட்டுமல்ல நாமும் அதிர்ச்சியாகிவிடுவோம்.

இப்படியாக மக்களிடமிருந்து முடிந்த மட்டிலும் பணத்தைக் கறக்க தனியார் மருத்துமனைககள் நிகழ்த்தும் சாகசங்களை பக்கம் பக்கமாக எழுதலாம், பண‌த்திற்காக அவர்கள் பாமரர்களை படுத்தும்பாடு வார்த்தைகளில் வசப்படுவதில்லை. எப்படியிருந்தாலும் பல சமயங்களில் அஜாக்கிரதையின் உறைவிடமாய் திகழும் பொது மருத்துவமனைகளைவிட, உடனடி நிவாரண‌ம் தேடி மக்கள் அடைக்கலமாவது தனியார் மருத்துவமனைகளே.

இந்த தனியார் மருத்துவமனைகளின் புண்ணியத்தாலேயே நாட்டில் காப்புறுதி நிறுவனங்கள் கொழுத்துப்பெருக்கின்றன. மக்கள் காப்புறுதி, மெடிக்கல் கார்ட் என சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்கின்றனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவம் வெற்றியடையா பட்சத்தில் இதற்கு மேல் எங்களால் முடியாது நீங்கள் பொது மருத்துவமனைக்கு கொன்டு செல்லுங்கள் எனக் கூறிவிடுவர். தோற்றுப்போன தங்கள் சிகிச்சைக்கும்  கொஞ்சமும் வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல் மொத்த மருத்துவ செலவையும் வசூலித்துவிடுவர்.

உயிர் மிச்சமிருக்கும் நோயாளி மீண்டும் வேறொரு தனியார் மருத்துவமனையையோ அல்லது கையில் பசை தீர்ந்துவிட்டால் பொது மருத்துவமனையையோ நாடுவதுதான் வாடிக்கை.

அந்த மனிதருக்கு பிராயம் 60க்கு மேலிருக்கும், ஒரு விபத்தில் சிக்கி மனைவி மக்களால் அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பருத்த அஜானுபாகுவான தோற்றம் கொன்ட அவருக்கு கழுத்தில் விபத்து (hairline crack ) ஏற்பட்டிருந்தது. படுத்த படுக்கையாய் கழுத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் அவர் உடலில் நீர்பிரியாத நிலை ஏற்படவே, மருத்துவர்கள் அவருடைய ஒரு காலில் மூன்று நீளமான காயங்களை ஏற்படுத்தி நீர்வடியச் செய்தனர். தொடர்ந்த சிகிச்சையில் கழுத்து குண‌மாகியது, ஆனால் காலில் செயற்கையாய் ஏற்படுத்திய அந்தக் காயங்கள் மிகவும் பெரிதாகின. முழங்காலுக்குக் கீழ் முக்கால்வாசியை அகன்ற செந்நிற காயங்கள் ஆக்ரமித்து அவதிப்படுத்தத் துவங்கின. தனியார் மருத்துவமனை ஆன செலவைக் கணக்குப்போட்டு கறந்துகொன்டு மேற்கொன்டு சிகிச்சை அளிக்க முடியாது என‌ கைவிரித்துவிட்டது, கவலையுடன் குடும்பத்தினர் பொது மருத்துவமனையில் அந்த மனிதரை கொன்டு வந்து சேர்த்தனர்.

பொது மருத்துவமனையில் பகலில் அவருடைய மனைவி அவருக்கான உதவிகளையும் இரவில் அவர‌து புதல்வர் அவருடன் தங்கியும் அவரைக் கவனித்துக்கொன்டனர்.

நாட்கள் நகர்ந்தன, அவருடைய கால் புண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் சீனர். அவருக்கு அந்த மனிதரை அங்கிருந்து வெளியேற்றவும் அடிக்கடி தமது புண்களுக்காக அவர் மருத்துவமனை சிகிச்சையை நாடாமல் இருக்கவும் ஒரு வழி புலப்பட்டது. அந்த மனிதரின் காலை முழங்காலோடு வெட்டி எடுத்துவிடுவது என்பதுதான் அது..! அதை நிறைவேற்ற இன்னொரு இந்திய மருத்துவரை வைத்து கூட்டு ஆலோசனை நடத்தினார். ஒரு தமிழனின் கழுத்தை அறுக்க இன்னொரு தமிழனை உபயோகிக்கும் திற‌மை அந்த மருத்துவருக்கு தெரிந்திருக்கின்றது.

என்ன கொடுமை...!  அந்த பெண் மருத்துவரும் அதற்குச் சம்மதித்தார். நோயாளிகளின் அங்கங்களை துண்டிப்பது மருத்துவத்தில் ஒன்றும் புதிதல்ல ஆனால் அது முற்றிய நீரிழிவு நோயாளிகளுக்கும் முற்றாக உறுப்புகள் சிதைந்தவர்களுக்குமே பொருந்தும்.  காயங்களுக்கெல்லாமா காலை வெட்டி எடுப்பது ?

அவர்களின் திட்டப்படி அந்த பெண் மருத்துவர்,  நோயாளியின் பிள்ளைகள் யாரும் அருகில் இல்லாத சமயத்தில், சர்வ‌ சாதாரண‌மாய் கைலி அணிந்து வெற்றிலை போட்டுக்கொன்டு நோயாளிக்கு சிருஷைகள் செய்துகொன்டிருக்கும் அவர் மனைவியை அணுகி பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.

அந்த மருத்துவர் தன் முன் காட்சியளித்த அந்த 50 வயது பெண்மணியை படிக்கத்தெரியாத பாமரப் பெண்மணி, தமது ஏற்பாடுகளுக்கு எளிதில் இண‌ங்கிவிடுவார் என முடிவு செய்து கொன்டார், அவர் அறியாதது என்னவென்றால் அந்தப் பெண்மணி ஒரளவு படிக்கத்தெரிந்தவர் கூடவே நிறைய உலக அனுபவமும் சாதுரியமும் மிக்கவர் என்பது.   

டாக்டரம்மா அந்தப் பெண்மணியிடம் பேச ஆரம்பித்தார், தமிழில் "அம்மா என ஆரம்பித்து, உங்கள் கணவர் அளவுக்கு மீறி குடித்து உடலெல்லாம் விக்ஷமாகிப் போய்விட்டது, இவர் கால் புண்கள் என்றுமே ஆறப்போவதில்லை, அவர் உயிருக்கும் ஆபத்து வந்துவிட்டது எனவே அவர் முழங்காலை துண்டித்துவிட்டால் உயிர் காப்பாற்ற‌ப்பட்டு எல்லாச் சிரமங்களும் தீர்ந்துவிடும், அறுவைச்சிகிச்சைக்கு இந்தப் பாரத்தில் ஒப்புதல் கொடுங்கள் என லாவகமாக தமது வழிக்கு கொன்டுவரப்பார்த்தார். நீங்கள் சம்மதித்துவிட்டால் இன்று இரவே காலை துண்டித்துவிடலாம், அவசரப்பட்டார் டாக்டர், இதில் அவருக்கு என்ன ஆதாயமோ புரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது நோயாளியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல.

அவர் கூறியதை மிகவும் கவனமாகக் கேட்ட அந்தப் பெண்மணி ஒருகண‌ம் திகைத்தார். காரணம் அவர் கணவர் மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ வேறெந்த தீயப் பழக்கங்களும் இல்லாதவர். முந்தைய சிகிச்சைகளின் வழி திட‌காத்திரமான அவருக்கு நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற எந்த நோய் பிரச்சனைகளும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

உடனே அந்தப் பெண்மணி நான் என் குழந்தைகளுடன் பேசி முடிவு செய்கிறேன் எனக்கூறி முடிவாக ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சிலமுறை வற்புறுத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள் அந்த மருத்துவர்.

அதன் பின்னர் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு கண‌மும் அந்தப் பெண்மணிக்கு நெருப்பாய் தகிக்க ஆரம்பித்தது. உடனே கையிலிருந்த சில்லரைகளை கொன்டு பொதுத் தொலைபேசி வழி மகனுக்கு நடந்ததைத் தெரிவித்து உடனே புறப்பட்டு வரச் செய்தார். மகன் வழி மற்ற பிள்ளைகள் உற‌வினர்கள் என அனைவருக்கும் செய்தி தீயாய் பரவ, கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையின் ஆண்கள் பிரிவுக்கு முன் கூட்டம் கூடிவிட்டது.

அந்தக் குடும்பத்து ஆண் மக்கள் அந்த சீன டாக்டரை முற்றுகையிட்டு ஆரவாரமாக கேள்விக்கனைகள் தொடுக்க, நடுங்கிப்போன டாக்டர் நாக்குழறி தடுமாறியது அவன் செயலின் அநியாயத்தைச் சொல்லாமல் சொல்லியது. கடும் எச்சரிக்கையுடன் அந்த டாக்டரை விட்டுவிட்டு அவர்கள் நோயாளியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச்சென்ற‌னர். தொடர்ந்த சொந்த சிகிச்சைகளிலேயே முற்றாகத் தேறி இன்று காயத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ஆரோக்கியமாக வலம் வருகிறார் அந்தப்பெரியவர்.

காலை வெட்டியிருந்தால் கடைசிக்காலம் வரை அந்த மனிதர் எத்துனை அவதிகள் பட்டிருப்பார் ? மனைவியின் துரித நடவடிக்கையால் அன்று அவர் தப்பித்தார். சும்மாவா சொன்னார் தெய்வப்புலவர்...

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

என்று....

அழகான வாசமலர்களிடையே கொடிய பூநாகங்கள் குடியிருப்பதைப் போல நல்ல மருத்துவர்களிடையே இதுபோன்ற பிற‌ர் நலம் கருதா தீயகுணமிக்க மருத்துவர்களும் இருப்பது வேதனையே.....  






 

  


   





ஞாயிறு, 14 ஜூன், 2015

சொல்வேந்தர் சுகி.சிவம் கொடுத்த பதிலடி




"மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு" ‍என்று தன்னைப் பற்றி விவரிக்கும் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் உரைகளை செவிமடுத்தவர்கள் அவரின் கூற்றிலுள்ள உண்மையை நிச்சயம் மறுதலிக்கமுடியாது.


கலைமாமணி விருது பெற்ற சுகி.சிவம் அவர்கள்  நாவன்மை மிக்கவர். சுவாரசியமாக உரையாற்றக்கூடியவர், சிற‌ந்த எழுத்தாளர். ஆழமான விக்ஷயங்களையும் மிகவும் எளிதாக மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துச்சொல்லக்கூடிய திற‌மைசாலி.

புராதணம், புராணம், வேதம், ஆகமம், மதம், இறை, மனித வாழ்வு நெறிகள் குறித்த இவரது விரிவான  விள‌க்கங்கள் மனிதம் விலகி கணிணி வாழ்வுக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் இன்றைய மாந்தர்களுக்கு மிகமிக அவசியமானவையாகும். இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிப்பீடியாவில் உள்ள இந்தப் பதிவு உதவும் http://ta.wikipedia.org/wiki/சுகி._சிவம்

இவரின் உரைகளையும், நூல்களையும் ஓரளவு படித்ததுண்டு, இவரின் நேர்த்தியான கருத்துகளைக் கேட்டும், படித்தும் வியந்ததுண்டு. அவை யாவற்றையும் மீறி ஒரு சிரிப்பும் தோன்றுவதைத் தடுக்க முடிவதில்லை, அதற்குக்காரண‌ம் ஒன்று உண்டு....

சிங்கையில் வாழ்ந்த காலம், அப்போது சிங்கையின் பிரபலமான ஒரு அரங்கில் ஒரு நடிகரின் நூல் வெளியீட்டு விழாவும், சில பிரமுகர்களின் இலக்கியப் பேருரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொன்ட சிங்கையைச் சேர்ந்த‌ தோழி ஜைனாப் பேகமும் அந்த நிகழ்வில் கலந்து கொன்டோம்.


ப‌ட்டிமன்ற ஆசான் திரு.சாலமன் பாப்பையா அவர்களும், ஒரு பிரபல கவிஞரும், திரு.சுகி.சிவம் அவர்களுமே அந்த நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்த பேருரையாளர்கள், சாலமன் பாப்பையா ஐயா வந்து அருமையாக பேசிவிட்டு சென்றார்.

அவருக்குப்பின் புகழ்பெற்ற அந்தக் கவிஞர் மிடுக்காக எழுந்தார், ராஜ நடை நடந்து ஒலிப்பெருக்கியை நெருங்கினார். தனக்கேயுரிய பாணியில் பேசினார், பேசினார், பேசிக்கொன்டே இருந்தார். :)

நேரம் கடந்து கொன்டிருந்தது, கூட்டம் பரிதாபமாக விழித்துக்கொன்டிருந்தது. நாமும்தான் ! சுகி.சிவம் அவர்கள் அமைதியாக யாவற்றையும் பார்த்துக்கொன்டிருந்தார். கவிஞர் பேச வேண்டிய தலைப்பில் காதல் என்ற‌ வார்த்தை இருந்தாலும் இருந்தது, அது அவர் வாயில் சிக்கி படாதபாடு
ப‌ட்டுக்கொன்டு தவித்தது.  :) ஆனால் கவிஞரோ நகைச்சுவையாகப் பேசுகிறோம் என நினைத்துக்கொன்டு காமத்தை வாரி வாரி வார்த்தைகளில் வழியவிட்டுக்கொன்டிருந்தார்.

காதல் குறித்து புதிய கண்ணோட்டத்தில் பலப்பல‌ பொன்மொழிகளை உதிர்த்தார்...!? அதில் ஒரு வரி " நாற்பதிலும் ஒருமுறை காதல் வரும், சேலை தேடச் சொல்லும் ,ரசித்துப்பார்" எனும் தொனியில்....!  

கூட்டத்தினரை அவர் உரையால் படாத பாடு படுத்திவிட்டு அவர் பேருரையை! முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார், அதற்குள் நேரம் வெகுவாக கடந்துவிட்டிருந்தது. அடுத்துப் பேச சுகி சிவம் அவர்கள் ஒலிப்பெருக்கியை நெருங்கினார். அதற்குள் ஏற்கனவே கேட்ட பேருரையால் மெர்சலாகிப் போயிருந்த மக்களில் பலர் நாளைக்கு வேலை எனும் சாக்கோடு எழுந்து புறப்பட ஆரம்பித்தனர்.

சிகி.சிவம் சுற்று முற்றும் தமது பார்வையை ஓடவிட்டார். தமது ஆழமான கணீரென்ற குரலில் "ஒரு மனிதனுக்கு 20 வயதில் காதல் வரவில்லையென்றால் அவனுக்கு உடலில் பிரச்சனை, ஒரு மனிதனுக்கு நாற்பது வயதிலும் ஒரு காதல் வருகிறதென்றால் அவனுக்கு மனதில் பிரச்சனை" என்று போட்டார் பாருங்கள் ஒரு போடு !(நிச்சயமாக இது திருமணமானவர்களுக்குத்தான்)

அவ்வளவுதான் !  அதுவரை தூங்கி வழிந்த அரங்கமே சடாரென விழித்துக்கொன்டதுபோல் அப்படி ஒரு ஆரவாரமும்  கரவொலியும் அப்பொழுது அங்கே எழுந்தது, அவருக்கு முன் பேசிய கவிஞர் முகத்தில் ஈயாடவில்லை. வீடு திரும்ப எத்தனித்து எழுந்தவர்களும் அப்படியே அமர்ந்து மிகவும் சிறப்பாக அமைந்த அவர் உரையை முழுதாகச் செவிமடுத்த பின்னரே கலைந்து சென்றனர்.

இன்றும் அவரின் சாதுரியமும், சாமர்த்தியமும் மிளிரும் பேச்சுக்களை மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு எனினும். அன்று அவர் அந்தக் கவிஞ‌ருக்குக் கொடுத்த பதிலடி இருக்கிறதே, அது இன்றும் நினைவில் நின்று சிரிக்க வைக்கின்றது...! சொல்வேந்தர் சொல்வேந்தர்தான்....!

சுகி.சிவம் க்கான பட முடிவு
 


  பி.கு : கவிஞரின் பெயரை இங்கே குறிப்பிடாவிட்டாலும் பலர் அவர் யாரென்பதை யூகித்திருக்கக்கூடும். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பதால் எனக்கும் அவரைப்பிடிக்கும். அன்றைய அவரது உரையைத்தவிர :)


   




சனி, 30 மே, 2015

ஆரம்பப்பள்ளி பரிசளிப்பு விழாவும் சிலப்பதிகார நாடகமும்...!

ஆரம்பப்பள்ளி வாழ்க்கை. மிகவும் மகிழ்ச்சியாக கவலை மறந்து திரிந்த காலம். ஆண்டின் ஆரம்பம் முதற்கொண்டு படித்துக் களைத்துப்போன மாண‌வர்களுக்கு,    ஆண்டின் இறுதி வரப்பிரசாதமாக மாறிவிடும் ஆம் "பள்ளியின் பரிசளிப்பு விழா" ஏற்பாடுகள் அப்போது தொடங்கிவிடும். மாணவர்களுக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் உற்சாகம் கரைபுரண்டோடும். ஏற‌க்குறைய பள்ளியின் திருவிழா என்றே அந்நிகழ்வை கூறிப்பிடலாம்.

அப்பொழுது ஆசிரிய ஆசிரியைகள் மிகவும் பிரயத்தனத்துடன் இயக்குனர்களாகவும், இசையமைப்பாள‌ர்களாகவும், நடனமணிகளாகவும் அவதாரமெடுத்து பாட்டு, நடனம், நாடகம் என பல நிகழ்ச்சிகளை கலையம்சத்துடன் தொகுத்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர்.

சிங்கம்போல சீற்றத்துடன் எப்பொழுதும் கையில் பிரம்புடன் உலா வரும் தலைமை ஆசிரியரும் மாண‌வர்களிடம் சிரித்துப்பேசும் அதிசயமும் அவ்வ‌ப்போது அங்கே நிகழும்.

பரிசளிப்பு விழாவன்று மாண‌வர்கள் அழகாய் உடுத்தி, வண்ண உடையணிந்து, ஒப்பனைகளோடு ஆர்வ‌த்துடன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்வர். பெற்றோரும், மற்றோரும் அரங்கத்தினை நிறைத்து ஆரவாரத்துடன் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பர். கைதட்டல்களுக்கும் ஆரவார ஒலிகளுக்கும் பஞ்சமே இராது. நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாய் கல்வி, கலை, விளையாட்டுக்கள் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் இனிய நிகழ்வு நடைபெறும்.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துகொன்டிருந்த ஞாபகம், வகுப்பாசிரியை ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாண‌வர்களை வைத்து ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை நாடகமாய் அரங்கேற்ற முடிவு செய்தார். சக‌ வகுப்பு தோழர்கள் கோவலனாக குணாளன், பொற்கொல்லனாக நாகேந்திரன், இவர்களோடு கண்ணகியாக என்னையும், பாண்டிய மன்னனாக ஆறாம் வகுப்பு அண்ணன் வசந்தராஜனையும், ராணியாக வேணி அக்காவையும், கவுந்தி அடிகளாக மேகலா அக்காவையும் தேர்ந்தெடுத்து பயிற்சியளித்தார். கண்ணகியின் தோழியாக என் உயிர்த்தோழி கோமளமே நடித்தாள், கதாபாத்திரங்களை அறிவித்ததும், கோமளம் என் கைகளைப்பற்றிக்கொன்டு "பார்த்தாயா இதிலும் நான்தான் உன் உயிர்த்தோழி என காதில் கிசுகிசுத்து மகிழ்ந்தாள், நானும் அகமகிழ்ந்தேன்.

எல்லாம் ஆசிரியை திட்டமிட்டபடியே நன்கு நடந்தேறியது, எல்லோரும் தங்களுக்கென‌ கொடுக்கப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி திறம்பட நடித்தனர். அம்மா,  நாடகத்திற்கு நான் அணிய தன்னுடைய தாமரை நிறத்தில் வெள்ளி சரிகையுடன் கூடிய அழகான புடைவையைத் தந்தார்.

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பரிசளிப்பு விழாவும் வந்தது.பள்ளியின் அரங்கம் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாய் ஜொலித்தது.

எங்கள் ஆசிரியை அனைவருக்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப ஆடை அணிகலன்களை அணிவித்து ஒப்பனைகள் செய்தார். நமக்கும் புடவை அணிவித்து, தலைமுடி அலங்காரம், உதட்டுச்சாயம், கன்ன‌த்தில் சாயம், கண்களில் மை என‌ பலமான ஒப்பனை !

பிரமுகர்களின் உரையோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. சில ஆடல், பாடல் காட்சிகளுக்குப்பின் முத்தாய்ப்பாய் நாடகம் அரங்கேற்றம் கண்டது. எல்லாம் நல்லபடியே போய்க்கொன்டிருந்தது, அவரவர் தமது பாத்திரத்தை உண‌ர்ந்து சிறப்பாகவே செய்து கொண்டிருந்தோம்.

நாடகம் கோவலன் கண்ணகி மதுரைக்கு செல்வதிலிருந்து தொடங்கி, கவுந்தியடிகளின் சந்திப்பு, பொற்கொள்ளனின் சந்திப்பு, கோவலன் கொலையுண்டது, கண்ணகி நீதிகேட்பது, மன்னன் உயிர் துறப்பது, இறுதியில் கண்ணகி சிலம்புடன் நிற்பது வரையில் அமைக்கப்பட்டிருந்தது.

கோவலன் இறந்த காட்சிக்குப் பிறகு, கண்ணகி மன்னனிடம் நீதி கேட்க வேண்டிய காட்சி. நாடகத்திற்கு அரங்கத்தினர் அளித்த பெரும் ஆரவாரத்தைக் கண்டு ஆசிரியைக்கு திடீரென வேறு யோசனை தோன்றிவிட்டது. என்னிடத்தில், "இப்போது உன் தோழி கோவலனின் மரண‌ச் செய்தியை உன்னிடத்தில் வ‌ந்து தெரிவிப்பாள்", அப்போது நீ ஓவென பெருங்குரலேடுத்து அழவேண்டும் என காட்சியில் புதுக்காட்சியைப் புகுத்தினார். அதற்கு முன் அவர் ஆவேசமாக வசனங்களைப் பேச மட்டுமே எனக்கு பழக்கியிருந்தார். எனவே எவ்வள‌வு முயற்சித்தும் அச்சமயத்தில் எனக்கு அழுகை வரவேயில்லை

அந்தக் குறிப்பிட்ட காட்சி வந்தது, ஆசிரியை உடனே "இப்போ நீ அழவேண்டும்" எனக்கூறி அழாமலிருந்த என் கன்னத்தில்  பளார் பளாரென‌ சில அறைகள் கொடுத்து மேடைக்கு அனுப்பினார் பாருங்கள், ஆசிரியையோ இரட்டை நாடி சரீரம் கொன்டவர், பெரிய கைகள், நன்றாகவே விழுந்தன அடிகள். விண் விண்ணென்று தெரித்தது கன்னம், நாம்தான் அழவேயில்லை (கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை  :(

அடுத்த‌ காட்சி தொடங்கியது, வசந்தராஜன் அண்ணன் (பள்ளியின் மாண‌வர்த்தலைவன் வேறு! ) பட்டும், மணிமுடியும் வாளும் தரித்து அவையில் பாந்தமாய் வீற்றிருந்தார். அவர் பக்கத்தில் பட்டமகிக்ஷியாய் தனது சுருள் கேசத்தில் மணிமுடி தரித்து ஒப்பனைகளோடு, நீலப்பட்டுப்புடவை உடுத்திய அழகான வேணி அக்கா (அவர் பள்ளியின் உதவி மாண‌வர்த்தலைவி ),  அடிவாங்கிய வலியும் சேர்ந்து, அழாமலேயே வீராவேசத்துடன் தெரித்து விழுந்தன நமது வசனங்கள்.

இறுதியாக, "நீதி தவறிய மன்னா, நீ அழிந்து போ" !  என ஆக்ரோக்ஷத்துடன் சாபமிட்டதும், மன்னன் உயிரிழந்து கீழே விழ, கூடவே ராணியும் தரையில் சரிய, சிலம்புடன் தலைவிரிகோலத்தில் ஆவேசமாக நாம் நிற்க, பின்புறத்திலிருந்து பின்ணனிப் பாட்டு

"கண்ணில் உதிரும் மலரெடுத்து,
கற்பு நாரில் சரம் தொடுத்து,
அன்னையே உன் காலடியில் சாற்றினேன்,
தினம் ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்,
உன்னை நம்பி நம்பி என்றும் போற்றினேன்,
இன்று ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்"

என ஒலித்து ஓய்ந்த‌து. அத்துடன் நாடகமும் முடிந்து திரை விழுந்தது. அவ்வளவுதான், அதுவரை தம்கட்டி த‌டுத்திருந்த கண்ணீர் அணை உடைத்துக்கொண்டு ஓவென்று ஒரே அழுகை ( நாமதான் :(  ) அரங்கத்திலுள்ளவர்களின் முன் அழக்கூடாதாம் ! அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக்கொன்டு வந்துவிட்டது !
ஆசிரியை ஓடிவந்து கட்டி அணைத்துக்கொன்டு சமாதானப்படுத்தினார். ஆனாலும் அடிவாங்கிய கன்னம் கோவைப்பழமாய் சிவந்து வீங்கிப்போய்விட்டது.

அழைத்துப்போக வந்த அப்பா விக்ஷயமறிந்ததும் கடுப்பாகி விட்டார், விசாரித்த அப்பாவிடம் ஆசிரியை, தைலம் கைவசமில்லை, இருந்திருந்தால் கண்ணில் தைலத்தை விட்டு அழவைத்திருப்பேன் என்றாரே பார்க்கலாம், :( ந‌ல்லவேளை அன்று என் கண்கள் தப்பித்தன, அதற்கு பதிலாக அந்த அடிகளே எவ்வளவோ மேல் என்று தோன்றியது !

அந்த பரிசளிப்பு விழாவில் பரிசுகளும் கிடைத்தன‌, ஆனால் இன்றும் பசுமையாய் நிலைத்திருப்பது பங்கேற்ற அந்த சிலப்பதிகார நாடகமும்
கூடவே அதில் ஆசிரியை அன்பாய் கொடுத்த அந்த அடிகளும்தான் ! :(