சனி, 30 மே, 2015

ஆரம்பப்பள்ளி பரிசளிப்பு விழாவும் சிலப்பதிகார நாடகமும்...!

ஆரம்பப்பள்ளி வாழ்க்கை. மிகவும் மகிழ்ச்சியாக கவலை மறந்து திரிந்த காலம். ஆண்டின் ஆரம்பம் முதற்கொண்டு படித்துக் களைத்துப்போன மாண‌வர்களுக்கு,    ஆண்டின் இறுதி வரப்பிரசாதமாக மாறிவிடும் ஆம் "பள்ளியின் பரிசளிப்பு விழா" ஏற்பாடுகள் அப்போது தொடங்கிவிடும். மாணவர்களுக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் உற்சாகம் கரைபுரண்டோடும். ஏற‌க்குறைய பள்ளியின் திருவிழா என்றே அந்நிகழ்வை கூறிப்பிடலாம்.

அப்பொழுது ஆசிரிய ஆசிரியைகள் மிகவும் பிரயத்தனத்துடன் இயக்குனர்களாகவும், இசையமைப்பாள‌ர்களாகவும், நடனமணிகளாகவும் அவதாரமெடுத்து பாட்டு, நடனம், நாடகம் என பல நிகழ்ச்சிகளை கலையம்சத்துடன் தொகுத்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர்.

சிங்கம்போல சீற்றத்துடன் எப்பொழுதும் கையில் பிரம்புடன் உலா வரும் தலைமை ஆசிரியரும் மாண‌வர்களிடம் சிரித்துப்பேசும் அதிசயமும் அவ்வ‌ப்போது அங்கே நிகழும்.

பரிசளிப்பு விழாவன்று மாண‌வர்கள் அழகாய் உடுத்தி, வண்ண உடையணிந்து, ஒப்பனைகளோடு ஆர்வ‌த்துடன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்வர். பெற்றோரும், மற்றோரும் அரங்கத்தினை நிறைத்து ஆரவாரத்துடன் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பர். கைதட்டல்களுக்கும் ஆரவார ஒலிகளுக்கும் பஞ்சமே இராது. நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாய் கல்வி, கலை, விளையாட்டுக்கள் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் இனிய நிகழ்வு நடைபெறும்.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துகொன்டிருந்த ஞாபகம், வகுப்பாசிரியை ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாண‌வர்களை வைத்து ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை நாடகமாய் அரங்கேற்ற முடிவு செய்தார். சக‌ வகுப்பு தோழர்கள் கோவலனாக குணாளன், பொற்கொல்லனாக நாகேந்திரன், இவர்களோடு கண்ணகியாக என்னையும், பாண்டிய மன்னனாக ஆறாம் வகுப்பு அண்ணன் வசந்தராஜனையும், ராணியாக வேணி அக்காவையும், கவுந்தி அடிகளாக மேகலா அக்காவையும் தேர்ந்தெடுத்து பயிற்சியளித்தார். கண்ணகியின் தோழியாக என் உயிர்த்தோழி கோமளமே நடித்தாள், கதாபாத்திரங்களை அறிவித்ததும், கோமளம் என் கைகளைப்பற்றிக்கொன்டு "பார்த்தாயா இதிலும் நான்தான் உன் உயிர்த்தோழி என காதில் கிசுகிசுத்து மகிழ்ந்தாள், நானும் அகமகிழ்ந்தேன்.

எல்லாம் ஆசிரியை திட்டமிட்டபடியே நன்கு நடந்தேறியது, எல்லோரும் தங்களுக்கென‌ கொடுக்கப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி திறம்பட நடித்தனர். அம்மா,  நாடகத்திற்கு நான் அணிய தன்னுடைய தாமரை நிறத்தில் வெள்ளி சரிகையுடன் கூடிய அழகான புடைவையைத் தந்தார்.

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பரிசளிப்பு விழாவும் வந்தது.பள்ளியின் அரங்கம் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாய் ஜொலித்தது.

எங்கள் ஆசிரியை அனைவருக்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப ஆடை அணிகலன்களை அணிவித்து ஒப்பனைகள் செய்தார். நமக்கும் புடவை அணிவித்து, தலைமுடி அலங்காரம், உதட்டுச்சாயம், கன்ன‌த்தில் சாயம், கண்களில் மை என‌ பலமான ஒப்பனை !

பிரமுகர்களின் உரையோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. சில ஆடல், பாடல் காட்சிகளுக்குப்பின் முத்தாய்ப்பாய் நாடகம் அரங்கேற்றம் கண்டது. எல்லாம் நல்லபடியே போய்க்கொன்டிருந்தது, அவரவர் தமது பாத்திரத்தை உண‌ர்ந்து சிறப்பாகவே செய்து கொண்டிருந்தோம்.

நாடகம் கோவலன் கண்ணகி மதுரைக்கு செல்வதிலிருந்து தொடங்கி, கவுந்தியடிகளின் சந்திப்பு, பொற்கொள்ளனின் சந்திப்பு, கோவலன் கொலையுண்டது, கண்ணகி நீதிகேட்பது, மன்னன் உயிர் துறப்பது, இறுதியில் கண்ணகி சிலம்புடன் நிற்பது வரையில் அமைக்கப்பட்டிருந்தது.

கோவலன் இறந்த காட்சிக்குப் பிறகு, கண்ணகி மன்னனிடம் நீதி கேட்க வேண்டிய காட்சி. நாடகத்திற்கு அரங்கத்தினர் அளித்த பெரும் ஆரவாரத்தைக் கண்டு ஆசிரியைக்கு திடீரென வேறு யோசனை தோன்றிவிட்டது. என்னிடத்தில், "இப்போது உன் தோழி கோவலனின் மரண‌ச் செய்தியை உன்னிடத்தில் வ‌ந்து தெரிவிப்பாள்", அப்போது நீ ஓவென பெருங்குரலேடுத்து அழவேண்டும் என காட்சியில் புதுக்காட்சியைப் புகுத்தினார். அதற்கு முன் அவர் ஆவேசமாக வசனங்களைப் பேச மட்டுமே எனக்கு பழக்கியிருந்தார். எனவே எவ்வள‌வு முயற்சித்தும் அச்சமயத்தில் எனக்கு அழுகை வரவேயில்லை

அந்தக் குறிப்பிட்ட காட்சி வந்தது, ஆசிரியை உடனே "இப்போ நீ அழவேண்டும்" எனக்கூறி அழாமலிருந்த என் கன்னத்தில்  பளார் பளாரென‌ சில அறைகள் கொடுத்து மேடைக்கு அனுப்பினார் பாருங்கள், ஆசிரியையோ இரட்டை நாடி சரீரம் கொன்டவர், பெரிய கைகள், நன்றாகவே விழுந்தன அடிகள். விண் விண்ணென்று தெரித்தது கன்னம், நாம்தான் அழவேயில்லை (கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை  :(

அடுத்த‌ காட்சி தொடங்கியது, வசந்தராஜன் அண்ணன் (பள்ளியின் மாண‌வர்த்தலைவன் வேறு! ) பட்டும், மணிமுடியும் வாளும் தரித்து அவையில் பாந்தமாய் வீற்றிருந்தார். அவர் பக்கத்தில் பட்டமகிக்ஷியாய் தனது சுருள் கேசத்தில் மணிமுடி தரித்து ஒப்பனைகளோடு, நீலப்பட்டுப்புடவை உடுத்திய அழகான வேணி அக்கா (அவர் பள்ளியின் உதவி மாண‌வர்த்தலைவி ),  அடிவாங்கிய வலியும் சேர்ந்து, அழாமலேயே வீராவேசத்துடன் தெரித்து விழுந்தன நமது வசனங்கள்.

இறுதியாக, "நீதி தவறிய மன்னா, நீ அழிந்து போ" !  என ஆக்ரோக்ஷத்துடன் சாபமிட்டதும், மன்னன் உயிரிழந்து கீழே விழ, கூடவே ராணியும் தரையில் சரிய, சிலம்புடன் தலைவிரிகோலத்தில் ஆவேசமாக நாம் நிற்க, பின்புறத்திலிருந்து பின்ணனிப் பாட்டு

"கண்ணில் உதிரும் மலரெடுத்து,
கற்பு நாரில் சரம் தொடுத்து,
அன்னையே உன் காலடியில் சாற்றினேன்,
தினம் ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்,
உன்னை நம்பி நம்பி என்றும் போற்றினேன்,
இன்று ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்"

என ஒலித்து ஓய்ந்த‌து. அத்துடன் நாடகமும் முடிந்து திரை விழுந்தது. அவ்வளவுதான், அதுவரை தம்கட்டி த‌டுத்திருந்த கண்ணீர் அணை உடைத்துக்கொண்டு ஓவென்று ஒரே அழுகை ( நாமதான் :(  ) அரங்கத்திலுள்ளவர்களின் முன் அழக்கூடாதாம் ! அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக்கொன்டு வந்துவிட்டது !
ஆசிரியை ஓடிவந்து கட்டி அணைத்துக்கொன்டு சமாதானப்படுத்தினார். ஆனாலும் அடிவாங்கிய கன்னம் கோவைப்பழமாய் சிவந்து வீங்கிப்போய்விட்டது.

அழைத்துப்போக வந்த அப்பா விக்ஷயமறிந்ததும் கடுப்பாகி விட்டார், விசாரித்த அப்பாவிடம் ஆசிரியை, தைலம் கைவசமில்லை, இருந்திருந்தால் கண்ணில் தைலத்தை விட்டு அழவைத்திருப்பேன் என்றாரே பார்க்கலாம், :( ந‌ல்லவேளை அன்று என் கண்கள் தப்பித்தன, அதற்கு பதிலாக அந்த அடிகளே எவ்வளவோ மேல் என்று தோன்றியது !

அந்த பரிசளிப்பு விழாவில் பரிசுகளும் கிடைத்தன‌, ஆனால் இன்றும் பசுமையாய் நிலைத்திருப்பது பங்கேற்ற அந்த சிலப்பதிகார நாடகமும்
கூடவே அதில் ஆசிரியை அன்பாய் கொடுத்த அந்த அடிகளும்தான் ! :(

                     

    

வெள்ளி, 29 மே, 2015

காலமெனும் நதியினிலே....

ஓர் ஆங்கிலக் கதை

அழகிய தீவு, எங்கு நோக்கினும் பசுமை, பூத்துக் குலுங்கும் பூக்களின் சுகந்த வாசம், இனிய கனிவகைகளுக்கும் அங்கே பஞ்சமென்பதே இல்லை.

அந்த வள‌மான தீவில் மகிழ்ச்சி, துயரம், அறிவு, ஆற்றல், செல்வம் ஆகியோருடன் அன்பும் ஒன்றுகூடி வாழ்ந்து வந்தது. காலம் கடந்து கொன்டிருந்தது.

அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை சூறாவளியாய் தாக்கியது அந்தப் பொல்லாத செய்தி, ஆம் இன்னும் சிறிது நாட்களுக்குள் அந்தத் தீவு மூழ்கப்போகிறது. தகவல் அறிந்தவுடன் அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொன்டது.

ஐயோ! என்ன செய்வது ? எப்படித் தப்பிப்பது ? பலரும் தங்கள் கைவசமிருந்த படகுகளை பழுதுபார்த்து சரிப்படுத்திக் கொன்டு, அந்தத்தீவை விட்டு புறப்பட‌ ஆரம்பித்தனர்.

அன்பு மட்டும் பரிதவித்து நின்றது, அங்கிருந்து புறப்பட அதற்கு விருப்பம் இல்லை. எனவே புரப்படுவதற்காக எந்த ஆயத்தமும் செய்யவில்லை, இறுதிவரை தாக்குப்பிடித்து பார்ப்போம் என காத்திருந்தது.

குறிப்பிட்ட நாளும் வந்தது, தீவு மெல்ல மெல்ல சமுத்திரத்துக்குள் சங்கமமாக
ஆரம்பித்தது. எஞ்சியிருந்த கொஞ்சம் பேரும் அந்தத் தீவிலிருந்து  வெளியேறிக் கொன்டிருந்தனர்.

அன்பு என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நின்றது, சுயநலமில்லாத அன்பு தனக்கென எந்தப் பாதுகாப்பையும் கொன்டிருக்கவில்லை, எனவே யாரேனும் வருவார், உதவிக்கரம் நீட்டுவார் என வேதனையுடன் வாடி நின்றது.

அந்த நேரத்தில் செல்வம் அவ்வழியே தன்னுடைய பிரமாண்ட படகில் சென்று கொன்டிருந்தது. அன்பு தன்னைத் தாண்டி செல்வம் கடக்கையில் "செல்வமே என்னை உன்னுடன் அழைத்துச் செல்வாயா?" எனக் கேட்டது. அதற்கு செல்வம், ஓ! முடியாது, என் படகு நிறைய தங்கமும் வெள்ளியும் நிறைந்திருக்கின்றன, இங்கே உனக்கு இடமில்லை"  என்றவாறே அங்கிருந்து புற‌ப்பட்டது.

அடுத்து அவ்வழியே பெருமை தன் அழகான படகிலேறி புறப்படுவதை அன்பு கண்டது. "பெருமையே என்னையும் உடன் அழைத்துச் செல்வாயா? கெஞ்சியது அன்பு, ஓ முடியாது! நீயே நனைந்து போயிருக்கிறாய், என் படகை அழுக்காக்கி விடுவாய் என்று பதில் கூறியபடியே உதவாமல் சென்ற‌து பெருமை.!

அடுத்து துயர‌ம் அவ்வழியே செல்வதைப் பார்த்தது அன்பு. அழாத குறையாக "துயரமே என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா ? என விம்மியது.

"ஓ அன்பே, நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன், எனக்கு தனிமை தேவை" என்றபடி அது தன் வழியே சென்றது.

அடுத்து மகிழ்ச்சி அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதைக் கண்டது அன்பு, தமக்கிருந்த ஆரவாரத்தில் அன்பின் அழைப்பை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை மகிழ்ச்சி. மகிழ்ச்சியும் புற‌ப்பட்டுப் போய் விட்டது.

திடீரென ஒரு குரல் "வா அன்பே, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன்" என்றது. குரல் வந்த திசையில் ஒரு பெரியவரைக் கண்டது அன்பு. மிகுந்த உவகையுடன் அவருடன் புறப்பட்டது. அன்பு அதற்கிருந்த சந்தோக்ஷத்தில் அந்த பெரியவரைப் பற்றி விசாரிக்க  மறந்து போனது. அன்பை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு அந்தப் பெரியவர் தன் வழியில் சென்றார்.

அப்பொழுதுதான் அன்பு தான் அந்த பெரியவரைப்பற்றி எதுவுமே கேட்டுத் தெரிந்து கொல்ளவில்லை என்பதை உண‌ர்ந்து வருந்தியது. அவருக்கு நன்றி சொல்லவில்லையே என வாட்டமுற்றது. நல்ல வேளையாக அங்கே அறிவு என்ற இன்னொரு பெரியவரைக் கண்டது. அவரிடம் சென்று தனக்கு உதவியவரைத் தெரியுமா எனக் கேட்டது. அதற்கு அந்தப் பெரியவர்  அவர்தான் "காலம்" என்றார்..!

ஏன் "காலம்" எனக்கு உதவியது ? அறிவைக் கேட்டது அன்பு.

ஆழ்ந்த விவேகம் கொன்ட அறிவு புன்முறுவல் பூத்தவாறே சொன்னது...... 
"காலம் மட்டுமே அன்பின் அருமை அறியும்"      


தமிழாக்கம்
 சிவனேசு,
 

வியாழன், 28 மே, 2015

அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

அவர் ஒரு புதிய காரை விலைக்கு வாங்கினார். அந்த வார இறுதியில் காரை வாசல் முன் வைத்து காருக்குள் ஏதோ வேலை செய்து கொன்டிருந்தார். வேலை மும்முரத்தில் அங்கு வந்த அவரது மூன்று வயது மகனை அவர் கவனிக்கவில்லை.

மெல்ல காரின் அருகில் வந்த அவர் மகன், தன் தந்தை தன்னை கவனிக்கவில்லை என்பதை அறிந்ததும், தந்தையைப் போலவே வேலை செய்வதாய் பாவனை செய்து கொன்டு கீழே கிடந்த கூர்மையான ஓர் ஆயுதத்தை கையில் எடுத்தான் , அந்தக் காரின் ஓரத்தில் தன் மனம் போன போக்கில் கிறுக்கத் துவங்கினான், அந்தப் புதிய காரில் சில கீறல்கள் விழுந்தன.

காரிலிருந்து வெளிவந்த அவன் தந்தைக்கு அவர் கண்ட காட்சி இரத்தத்தை கொதிக்க வைத்தது. புதிய காரில் அந்தச் சிறுவன் கிறுக்கியிருந்தது கண்டு அவன் தந்தைக்கு கோபம் தலைக்கேறியது, கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவன் தந்தை, அந்தச் சின்னஞ்சிறு பாலகனின் கைகளை தரையில் வைத்து தமது கையிலிருந்த சுத்தியலால் பலங்கொன்ட மட்டும் ஓங்கி ஓங்கி அடித்தார். அந்தச் சிறுவனின் பிஞ்சுக் கைகளிலிருந்து இரத்தம் பீரிட‌ அவனின் ஓலம் அவ்விடத்தையே அதிர வைத்தது. ஆத்திரம் தீர அடித்துவிட்டு சுத்தியலை தூர எறிந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே சென்று ஆத்திரம் குறைந்த சில நிமிடங்கள் கழித்து தமது செயலின் உக்கிரம் புரிய ஓடிவந்து வெளியில் இரத்த வெள்ள‌த்தில் மயங்கிக் கிடந்த மகனை அள்ளிக்கொன்டு மருத்துவமனை சென்றார், சிறுவனுக்கு சிகிச்சை முடிந்து கைகளில் கட்டுப் போடப்பட்டது.

அவனை சென்று கண்டார் அவன் தந்தை, சிறுவனின் பத்து விரல்களும் பலமான சுத்தியல் அடியால் நைந்து போய் சேதமடைந்துவிட்டதால் அவன் கைகளிலிருந்து முற்றாக‌ அகற்றப்பட்டிருந்தன, அவர் மகன்

"அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்,

மெளனமாய் நின்றிருந்த தன் தந்தையை நோக்கி முடமாகிப்போன தன் கைகளை நீட்டிக்காட்டி

"அப்பா எனக்கு மீண்டும் எப்பொழுது புதிய விரல்கள் முளைக்கும் ?

மகன் கேட்டான். தந்தை வாயடைத்துபோனார் அதற்கு மேல் அங்கே நிற்கவும் அழுகையை அடக்கவும் முடியாமல் சொல்லொனா வேதனையுடன் வீடு திரும்பினார். மகன் காரில் கிறுக்கியிருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன.

"அப்பா உங்களை நேசிக்கிறேன்" / (I love you daddy)

என கிறுக்கியிருந்தான் மகன். மனமுடைந்து போன அந்த தந்தை வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக்கொன்டார் !

ஆத்திரம் அறிவுக்கு மட்டுமல்ல, அன்புக்கும் , ந‌ட்புக்கும் கூட சத்துருதான்

சிவனேஸ்
27/5/2015