வெள்ளி, 29 மே, 2015

காலமெனும் நதியினிலே....

ஓர் ஆங்கிலக் கதை

அழகிய தீவு, எங்கு நோக்கினும் பசுமை, பூத்துக் குலுங்கும் பூக்களின் சுகந்த வாசம், இனிய கனிவகைகளுக்கும் அங்கே பஞ்சமென்பதே இல்லை.

அந்த வள‌மான தீவில் மகிழ்ச்சி, துயரம், அறிவு, ஆற்றல், செல்வம் ஆகியோருடன் அன்பும் ஒன்றுகூடி வாழ்ந்து வந்தது. காலம் கடந்து கொன்டிருந்தது.

அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை சூறாவளியாய் தாக்கியது அந்தப் பொல்லாத செய்தி, ஆம் இன்னும் சிறிது நாட்களுக்குள் அந்தத் தீவு மூழ்கப்போகிறது. தகவல் அறிந்தவுடன் அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொன்டது.

ஐயோ! என்ன செய்வது ? எப்படித் தப்பிப்பது ? பலரும் தங்கள் கைவசமிருந்த படகுகளை பழுதுபார்த்து சரிப்படுத்திக் கொன்டு, அந்தத்தீவை விட்டு புறப்பட‌ ஆரம்பித்தனர்.

அன்பு மட்டும் பரிதவித்து நின்றது, அங்கிருந்து புறப்பட அதற்கு விருப்பம் இல்லை. எனவே புரப்படுவதற்காக எந்த ஆயத்தமும் செய்யவில்லை, இறுதிவரை தாக்குப்பிடித்து பார்ப்போம் என காத்திருந்தது.

குறிப்பிட்ட நாளும் வந்தது, தீவு மெல்ல மெல்ல சமுத்திரத்துக்குள் சங்கமமாக
ஆரம்பித்தது. எஞ்சியிருந்த கொஞ்சம் பேரும் அந்தத் தீவிலிருந்து  வெளியேறிக் கொன்டிருந்தனர்.

அன்பு என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நின்றது, சுயநலமில்லாத அன்பு தனக்கென எந்தப் பாதுகாப்பையும் கொன்டிருக்கவில்லை, எனவே யாரேனும் வருவார், உதவிக்கரம் நீட்டுவார் என வேதனையுடன் வாடி நின்றது.

அந்த நேரத்தில் செல்வம் அவ்வழியே தன்னுடைய பிரமாண்ட படகில் சென்று கொன்டிருந்தது. அன்பு தன்னைத் தாண்டி செல்வம் கடக்கையில் "செல்வமே என்னை உன்னுடன் அழைத்துச் செல்வாயா?" எனக் கேட்டது. அதற்கு செல்வம், ஓ! முடியாது, என் படகு நிறைய தங்கமும் வெள்ளியும் நிறைந்திருக்கின்றன, இங்கே உனக்கு இடமில்லை"  என்றவாறே அங்கிருந்து புற‌ப்பட்டது.

அடுத்து அவ்வழியே பெருமை தன் அழகான படகிலேறி புறப்படுவதை அன்பு கண்டது. "பெருமையே என்னையும் உடன் அழைத்துச் செல்வாயா? கெஞ்சியது அன்பு, ஓ முடியாது! நீயே நனைந்து போயிருக்கிறாய், என் படகை அழுக்காக்கி விடுவாய் என்று பதில் கூறியபடியே உதவாமல் சென்ற‌து பெருமை.!

அடுத்து துயர‌ம் அவ்வழியே செல்வதைப் பார்த்தது அன்பு. அழாத குறையாக "துயரமே என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா ? என விம்மியது.

"ஓ அன்பே, நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன், எனக்கு தனிமை தேவை" என்றபடி அது தன் வழியே சென்றது.

அடுத்து மகிழ்ச்சி அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதைக் கண்டது அன்பு, தமக்கிருந்த ஆரவாரத்தில் அன்பின் அழைப்பை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை மகிழ்ச்சி. மகிழ்ச்சியும் புற‌ப்பட்டுப் போய் விட்டது.

திடீரென ஒரு குரல் "வா அன்பே, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன்" என்றது. குரல் வந்த திசையில் ஒரு பெரியவரைக் கண்டது அன்பு. மிகுந்த உவகையுடன் அவருடன் புறப்பட்டது. அன்பு அதற்கிருந்த சந்தோக்ஷத்தில் அந்த பெரியவரைப் பற்றி விசாரிக்க  மறந்து போனது. அன்பை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு அந்தப் பெரியவர் தன் வழியில் சென்றார்.

அப்பொழுதுதான் அன்பு தான் அந்த பெரியவரைப்பற்றி எதுவுமே கேட்டுத் தெரிந்து கொல்ளவில்லை என்பதை உண‌ர்ந்து வருந்தியது. அவருக்கு நன்றி சொல்லவில்லையே என வாட்டமுற்றது. நல்ல வேளையாக அங்கே அறிவு என்ற இன்னொரு பெரியவரைக் கண்டது. அவரிடம் சென்று தனக்கு உதவியவரைத் தெரியுமா எனக் கேட்டது. அதற்கு அந்தப் பெரியவர்  அவர்தான் "காலம்" என்றார்..!

ஏன் "காலம்" எனக்கு உதவியது ? அறிவைக் கேட்டது அன்பு.

ஆழ்ந்த விவேகம் கொன்ட அறிவு புன்முறுவல் பூத்தவாறே சொன்னது......



 
"காலம் மட்டுமே அன்பின் அருமை அறியும்"      


தமிழாக்கம்
 சிவனேசு,
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக