புதன், 19 ஏப்ரல், 2017

உற‌வெனும் நெருஞ்சிமுட்கள் - 2

வாழ்க்கை என்பது இயற்கையுடன் மனிதர்கள் ஆடும் சதுரங்கம். சமயங்களில் இயற்கை மனிதருக்கு பாரபட்சமின்றி செக்மேட் (தமிழ்ல‌ எப்டி சொல்றதுன்னு தெரியலிங்ணா !! ) வைத்துவிடும்.

 ஏன்? எதற்கு? எதனால்? எனும் கேள்விகளுக்கு தலைவிதி, கர்மா, முன்வினை, செய்த பாவங்கள், பெற்றோர் செய்த பாவம், முன்னோர் செய்த பாவம், வாழ்வில் எடுத்த தவறான முடிவுகள், தவறான சேர்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலை இன்னும் என்னென்ன விடை சொல்ல முடியுமோ அத்தனையும் நமக்கு நாமே சொல்லிக்கொன்டு ஆசுவாசப்படுத்தி ஆறுதலாக்கிக்கொன்டு அமைதியாகிவிட வேண்டியதுதான், வேறே வழி :(

நான் குறிப்பிட்ட பெரியவரின் வாழ்க்கையும் ப்படித்தான். அவரின் வேதனை தோய்ந்த வாழ்க்கை வரலாற்றை அறிந்து ம‌னம் மிகவும் கனத்துப் போனதுவ்வளவு இரக்கமற்றதா இந்த இயற்கை என வேதனையில் ஆழ்ந்தது. தொடர்ந்து எழுத நினைக்கும் போதெல்லாம் வார்த்தைகளற்ற வெளியில் மனம் மெளனமாகிவிட இந்தப் பதிவைத்தொடர நமக்கு இத்தனைக் காலம் ஆகிவிட்டது.  

இந்நேரத்தில் இந்தப் பதிவை வெளியிட நமக்கு பெரியவரின் மூன்று தலைமுறை விடயங்களை தோண்டிதுருவித்தந்து உதவிய, மனிதருள் மாணிக்கம், மாசில்லா மங்கை நமது சிறப்பு நிருபர், நெருங்கிய தோழி, பக்கத்து வீட்டுக்காரியுமான கோகிலா அம்மணிக்கு நமது அன்பும் நன்றியும் :) (அவிங்களும் பதிவை படிக்கிறாங்கோ, அதான் இந்த பில்டப்பு  :)  

இனி பெரியவர் வாழ்வைப் பின்தொடர்வோம் வாருங்கள்.

sad old man க்கான பட முடிவுபருவத்தே பயிர் செய் !!  என்பது பழமொழி, இதை என் பெற்றோர் அறிந்திருக்கவில்லை போலும். அவர்களை நொந்தும் பயனொன்றில்லை, ஏனென்றால் பெண்குழந்தை பிறந்த பின் ஆண்பிள்ளை வேண்டி தவமாய் தவமிருந்து பல வருடங்கள் கழித்து பிறந்த ஆண் குழந்தை நான். அவர்கள் நடுத்தர வயது தாண்டி முதுமைப் பருவத்தைத் தொடும் சமயத்தில் பிறந்த பிள்ளை. எனக்கு பதின்ம வயதில் ஒரு மூத்த சகோதரி.  என் வாழ்வில் நான் கண்ட முதல் தேவதை அவள்...

என் தாய் கர்ப்பமுற்றிருக்கும் சமயத்திலேயே தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். பிரசவத்தில் தாயும் இறைவனடி சேர்ந்தார். பிற‌ந்தவுடனே அப்பனையும், ஆத்தாளையும் முழுங்கிடுச்சே பீடை என என்னைத் திட்ட யாருமில்லை, ஏனென்றால் எங்களுக்கு சொந்தங்கள் மிகவும் குறைவு. எல்லாம் எனது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்ததால் வந்த விளைவு.

ஒரேயொரு தாய்மாமன் அனைத்தையும் முன் நின்று செய்தார். ஒரே ஊரில் வசித்ததால் அவரின் ஆதரவு கிடைத்தது. ஆனால் பாவம் அவர் ஓர் இராட்சசிக்கு வாழ்க்கைப்பட்டு வதைப்பட்டுக்கொண்டிருந்தார். எங்களை மாமா அவர் வீட்டில் வைத்துக்கொள்ள பிரியப்பட்டாலும் அத்தை குறுக்கே விழுந்து தடுத்தாள். பாவம் அவளும் என்ன செய்வாள்? அவர்களுக்கே ஆணும் பெண்ணுமாய் பதினோரு பிள்ளைகள், மாமா ஒரு மளிக்கைக்கடை வைத்திருந்தார். அதில் வரும் வருமானத்தை வைத்தே அந்தப் பெரிய பட்டாளத்தை அவர் பரிபாலித்து வந்தார். எனினும் அறிந்தும் அறியாமலும் தனது அக்காள் பிள்ளைகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்து வந்தார் அந்த நல்லவர்.

brother sister க்கான பட முடிவு
அக்கா, மாமாவை சிரமப்படுத்த விரும்பவில்லை. தானே குடும்பத்தை நிர்வகிக்கத் துவங்கினாள். தாயின் இடத்தை எடுத்துக்கொன்டாள். பெற்ற தாயினும் சாலப் பரிந்து எனைச் சீராட்டி பாராட்டி வளர்க்கத் தலைப்பட்டாள்.

இருள் சூழ்ந்த வெளியில் எங்கோ ஒரு மூலையில் தலைகாட்டும் பிறைபோல அன்பும் ஆதரவும் இழந்து சூனியமாகிப்போன என் இளம் பிராய துயர வாழ்வில் ஒளிவீச ஆரம்பித்தாள் அக்கா. பல சமயங்களில் இளம் குழந்தையான எனக்குப் பாலும் உண‌வும் தந்துவிட்டு அவள் பட்டினியாயிருக்கப் பழகியிருந்தாள்.

பரிமளா என்பது அக்காவின் பெயர். அன்பும் அடக்கமும் நிறைந்தவள், ரொம்ப ரொம்ப அமைதியானவள், யாரேனும் பத்து வார்த்தை பேசினால் அதற்கு பதிலாய் ஒற்றை வார்த்தையே அவள் பதிலாய் அமையும், பல சமயங்களில் பார்வையாலோ, புன்னகையாலோ பதிலுரைத்துவிடுவாள். ஆனால் அவள் பேசினாலோ இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொன்டிருக்கலாம் போல அத்தனை இனிமை, மென்மை. அவள் யாரையுமே தனது சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்த மாட்டாள்.

ஆள் உயரமாய், வெடவெடவென மாநிறமாய் சுமாரான தோற்றம் கொன்டவள்தான் அக்கா, எனக்கு அவளிடம் பேசுவது மிக மிக பிடிக்கும், அதிலும் ஒரு பக்கம் தலைசாய்த்து, கண்களை சுருக்கி, சிரித்தபடி என் கைகளை பிடித்துக் கொன்டு அவள் பேசுவது அதிகம் பிடிக்கும். அவள் ஸ்பரிசமும் வாசமும் எனக்குப் பிடித்த சீனி மிட்டாயை ஞாபகப்படுத்தும்.

nurse images gallery க்கான பட முடிவுஅக்கா நல்ல படிப்பாளி, SPM  தேர்வில் சிறப்பாய் தேறியிருந்தாள். மேற்படிப்பை தொடர வழியின்றி ஒரு தனியார் மருத்துவமனையில் தாதியாய் பணியாற்றிக்கொன்டு தன்னையும் என்னையும் காப்பாற்றினாள். அவள் ஆசையெல்லாம் ஓர் அரசாங்க மருத்துவமனையில் தாதி ஆக வேண்டும் என்பதுதான்.
எந்நேரமும் நூலகத்திலோ அல்லது தெரிந்தவரிடத்திலோ பெற்ற ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டிக்கொண்டிருப்பாள். மனிதர்களை விட புத்தகங்கள் அவளுக்கு மிகவும் அன்னியோன்யமாய் இருந்தன.

மாமா அக்காவுக்கு உதவ பெரு முயற்சி எடுத்துக்கொன்டார் அதற்குப் பிண்ணனியில் ஒரு மிக முக்கிய சமாச்சாரமும் அடங்கியிருந்தது. மாமாவின் மூத்தப் பையனுக்கு அக்காளை மணமுடிக்க வேண்டுமென்பது மாமாவின் ஆசை. அதிர்க்ஷ்டவசமாய் அதை அத்தையும் ஆதரித்தாள், பின்னே ஒழுங்காய் படிக்காமல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தன் தந்தையின் மளிகைக் கடையில் வேலை பார்க்கும் மகனுக்கு, அரசாங்க மருத்துவமனையில் தாதியான பெண் மனைவியாக வந்தாள் கசக்கவா செய்யும் ? அக்கா வெளியூரில் தங்கித் தாதிமைப் பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் என்னை மாமாவின் வீட்டில் வைத்துக்கொள்ளவும் அத்தை சம்மதித்தாள். எல்லாம் அக்காவை மகிழ்வித்து அவர்கள் குடும்பத்தில் இழுத்துக்கொள்ளத்தான்.

அக்கா இருதலைக்கொல்லி எறும்பாய்த் தவித்தாள், அவள் இலட்சியமும், என் மீது அவள் கொன்ட அன்பும் போட்டியிட்டதில் என்னை கவனிப்பதற்காகத் தன் ஆசையைத் தூக்கி எறியத் துணிந்தாள் என் அன்பு அக்காள். ஆனால் மாமாவும் அத்தையும் விடாது வற்புறுத்தி அவளை பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அக்கா அரைமனதுடன் என்னை அவர்களின் வீட்டில் விட்டு விட்டு தன் இலட்சியத்தைக் கண்டடைய விரைந்தாள். மனம் முழுதும் அக்காவின் பிரிவில் இரணமாகிப் போனது. என் வேதனைக்கு கண்ணீரில் நனைந்த தலையணை மட்டுமே சாட்சியானது.

என் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் மாமாவின் வீட்டில் துவங்கியது...

புதன், 25 ஜனவரி, 2017

உறவெனும் நெருஞ்சிமுட்கள்...!!

நெருஞ்சில் முள் க்கான பட முடிவு
என்னைத் தன் தாய் எனக்கூறி அம்மாவென அழைத்த‌ ஒரு சிறந்த மனிதரின் வேதனைக் கதை....

அவர் ஒரு மாற்றுத்திறனாளி, கழுத்துப்பகுதியில் கடுமையான சேதாரம் ஏற்பட்டு பேசும் சக்தியை இழந்திருந்தார். கால்கள் செயலிழந்து சக்கரநாற்காலியில் நிரந்தரமாய் வாசம் செய்பவர்.

அவர் பெயர் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. அதை அவரால் சொல்லவும் முடியவில்லை. அவர் வாயிலிருந்து வெளிப்படும் ஒலிகள் சொற்களாய் வடிவெடுக்க சிரமப்பட்டு பெரும்பாலும் சப்தங்களாகவே காற்றிலே கரைந்துவிடும்...
.
அந்தக்குடியிருப்புப்பகுதியில் நான் புதிது, அவர் ரொம்பப் பழமையானவர். அங்குள்ள அனைவரும் அவருக்கு நண்பர்கள். உதயசூரியன் பூமிக்கு வணக்கம் சொல்லும் காலையிலேயே துவங்கிவிடும் அவர் பொழுது, சக்கர வண்டியில் அமர்ந்துகொன்டு மெல்ல மெல்ல குடியிருப்புச் சாலைகளில் பயணித்தபடி தாம் எதிர்கொள்ளும் அல்லது தம்மைக் கடந்து செல்லும் தமது நண்பர்களை சிரித்த முகத்துடன் கையசைத்து, ஏதேதோ ஒலியெழுப்பி புரியாத சப்தங்களில் அவர்களிடம் அவருடைய வணக்கம் சொல்தலும், நலம் விசாரிப்பும் தொடரும். அவருடைய நிலையும், அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாத அவருடைய சிரித்த முகமும் கடின சித்தம் கொன்டவரைக்கூட கொஞ்சம் அசைத்துப் பார்க்கவே செய்யும்.

அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை, வீட்டு வாசல் வழி கடந்து செல்வதைக் அனுதினமும் காண்பதுண்டு. காலையில் அந்தப் பகுதியை தூய்மை செய்யும் துப்புரவுத் தொழிலாளிகள் அவருக்கு நண்பர்கள்.

man in wheel chair க்கான பட முடிவுஅந்த நல்ல மனிதர் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான வேலையைச் செய்வார். அவர் தம் கைவசம் ஒரு துடைப்பத்தை வைத்துக்கொண்டு வண்டியில் அமர்ந்தபடியே சாலையை பெருக்கிக்கொன்டு செல்வார். கைகால்களை நல்லபடி வைத்துக்கொன்டு வீதிகளில் குப்பைகளை வீசிச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரதிபலன் பார்க்காமல் பெருக்கி சுத்தம் செய்யும் அந்த நபர் அங்குள்ள அனைவருக்கும் பிடித்தமானவர். 

அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்த மனிதரை மிகவும் உயர்வாக மதித்து நடத்தினர். சீனர்கள் காலை உணவு வாங்கி அவர் கையில் வற்புறுத்திகொடுப்பர், சில நண்பர்கள் அவர் மறுத்தாலும் விடாது சில ரிங்கிட் தாட்களை அவர் சட்டைப்பையில் திணித்துவிட்டுச் செல்வர்.

அவருக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி ஆனார்? பதில் எனக்கு சரிவரத் தெரியவில்லை. ஒரு கடுமையா விபத்தில் சிக்கினார் என்பது மட்டுமே தெரியவந்தது.

அவ‌ருடன், நான் பேச ஆரம்பித்தது ஓர் அடைமழை நாளில், அந்த மாலை வெளீர் நீலவானம் சர்வ சாதாரணமாய் அகலப் புன்னகைத்தபடி நேரங்களை கடத்திக்கொன்டிருந்தது. பாவம் அதை நம்பி அந்தப் பெரியவர் தமது சக்கர வண்டியில் மாலை "வாக்கிங்" செல்வதைப்போல் வீதியில் தமது சக்கர வண்டியை உந்தித்தள்ளியபடி சென்றுகொண்டிருந்தார். கடந்து செல்லும் அவரைக் கவனித்தபடி எனது வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்துகொன்டிருந்தேன்.

சில நிமிடங்கள் கடந்தன, எங்கிருந்து வந்தது என்பது புரியுமுன் சடசடவென அடர் மழை வானம் கிழிந்துகொன்டு ஊற்றுவதைப்போல் பொழிய ஆரம்பித்தது. "உள்ளே போ" என பாட்சா கிளைமாக்ஸில் ரஜினி மிரட்டியதைப்போல் பெரிய பெரிய நீர்த்துளிகளால் அறைந்து வீட்டிற்குள் விரட்டியது. 

வேறு வழியின்றி வீட்டிற்குள் நுழைந்து, ஒரு பிரம்பு நாற்காலியை சன்னல் ஓரத்தில் இழுத்துப்போட்டு மழையின் அழகையும், பொழியும் வேகத்தையும் கவனித்துக்கொன்டிருந்தேன்... என்ன ஓர் அருமையான மழை !! அப்போதுதான்  கவனித்தேன்....

என் வீட்டிற்கு வெளிப்புற ஓரத்தில் சில அடிகள் தள்ளி சாலை ஓரத்தின் வளைவில் அந்தப் பெரியவர். நனைந்த புறா ஒன்று சிறுகுகளை ஒடுக்கிக்கொன்டு ஒண்டியிருப்பதைப்போல் சக்கரவண்டிக்குள் குறுகிக்கொன்டு அமர்ந்திருந்தார். பார்க்க மிகவும் பரிதாபமாய் மனதைப் பிசைந்த‌து. மழை இப்போதைக்கு நிற்பதாய் தெரியவில்லை.

ச‌ரிதான் !!  மனசு கேட்கவில்லை, வீட்டில் இரண்டு பெரிய குடைகள் இருந்தன, ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு , இன்னொரு குடையுடன் வாசல் கதவைத் திறந்து அவரை நோக்கிச் சென்றேன், அந்த மழையில் தலை கவிழ்ந்திருந்த அவர் அவருக்கு பின்புறமாய் வந்த என்னை எதிர்பார்க்கவில்லை போலும் !! மழை நீர் கோட்டிட்டு வழியும் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சியுடன் அவரிடம் நீட்டிய குடையைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினார். "வானாம்மா" என்பதைப்போல் ஏதோ ஒரு உருவமற்ற ஒலிகள் அவர் வாயிலிருந்து புறப்பட்டன.

 "அய்யோ, பரவாயில்லை , வைத்துக்கொள்ளுங்கள்" என்று குடையைப் பிரித்து அவர் கையில் கொடுத்தேன், அவர் கண்களில் நன்றி மின்னலாய் ஒளிர்வதைக் கண்டேன். அப்படியென்ன பெரிய உபகாரம் நான் பண்ணிவிட்டேன்? மாற்றுத்திறனாளியாயினும் சாலையை பிரதிபலனின்றி கூட்டிப் பெருக்கும் ஒரு சிறந்த மனிதருக்கு என்னால் இயன்ற சிறிய உதவி. குடையைப் பிடித்துக்கொன்டு மெல்ல அவர் வீடு திரும்புவதை மகிழ்வுடன் கவனித்தவாறு அண்ணநடைபோட்டு வீடு திரும்பினேன்.

அதன் பின்னர் நடந்ததுதான் விக்ஷேசம், அன்றிலிருந்து அவர் என்னைக் கண்டாலே அகலப் புன்னகைத்தபடி கையசைப்பார், "ம்ம்ம்மமமா " என சிரமப்பட்டு அழைப்பார். நானும் சில உபசரனை வார்த்தைகள் கூறி விடைபெற்றுக்கொள்வேன். பணம் கொடுத்தால் கடுமையாக மறுப்பார். ஆனால் நான் அவர் முன் எதிர்படும் சமயங்களில் யாராவது அவர் ப‌க்கத்தில் இருந்தால், அவர்களிடம் என்னைக்காட்டி தனது நெஞ்சில் கைவைத்து "ய்ய்ய்யான்ன்ன்ன் ம்ம்ம்ம்மமா" என மழ‌லையைப்போல் சிரமப்பட்டு கூறுவார், அதாவது நான் அவருக்கு அம்மாவாம் !! கூட இருப்பவர்களும் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள், இப்படியாக எனக்கு ஒரு மிகப்பெரிய மகன் கிடைத்துவிட்டார்...!! :) சில சமயம் பூரிப்பாகவும் சில சமயம் வெட்கமாகவும் இருக்கும் நமக்கு...!

அவர் என்னை "ம்மா" என்றே அழைப்பார், பார்க்கும் போதெல்லாம் கையசைப்பார், சைகை மொழியாலும், எழுப்பும் ஓசைகளாலும் நம்மிடம் பேசுவார். கொஞ்சம் விளங்கும், நிறைய விளங்கிக்கொள்ள சிரமமாயிருக்கும், இருந்தாலும், சிரித்து மழுப்பிவிடுவதுண்டு.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியிருக்கும், பக்கத்து வீட்டுத் தோழி சத்தமிட்டு அழைத்தாள், என்னவென்று வெளியே சென்று கண்டால்.. அங்கே அவர் கண்கள் கலங்கியபடி சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார். பசிக்குதாம் வீட்டில் சோறு மட்டும்தான் இருக்காம், கொஞ்சம் கறி இருந்தால் கேட்கிறார், நான் ஒன்றும் சமைக்கவில்லை என்றாள், நான் ஓடிச்சென்று வீட்டிலிருந்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் இட்டு அவரிடத்தில் கொடுத்தேன், அதன் பின்னர் நான் நன்கு சமைப்பேன் என்று தன் நண்பர்களிடம் சமைப்பதைப்போல் சைகை காட்டி பெருவிரலை உயர்த்திக்காட்டுவார்.

அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நமக்குத் தெரியாதா? என்ன தாயி  சமையல் செய்ற? முடிஞ்சா கொஞ்சம் விக்ஷத்தை உன் கையால் கொடு, தின்றுவிட்டு செத்துப்போகிறேன், எதற்கு இப்படி சமைத்துக் கொல்கிறாய்? என‌ வீட்டிலுள்ளவர்கள் பாராட்டுப் பத்திரம் வாசிப்பது நமக்கு மட்டும்தானே வெளிச்சம் :P . பட் அவருடைய அந்தப் பெருந்தன்மை எனக்கு பிடிச்சிருந்தது !! இப்படியாக என்னுடைய அந்த முதிர்ந்த மகன் வழி நானும் அந்த ஏரியாவில் ஒரு சிறந்த "குக்காக" அறிமுமாகியிருந்தேன்னா பார்த்துகோங்களேன் !!

சில வருடங்கள் கடந்துவிட்ட பின்னர் இந்த வருடம் புத்தாண்டு அன்று, புது வருடத்தை முன்னிட்டு ஆங்காங்கே விருந்துகள், கொண்டாட்டங்கள், கும்மாளங்கள், நானும் அப்படி ஒரு உற‌வினர் வீட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் காலையிலேயே சென்று கலந்துகொண்டு மாலையில் வீடு திரும்பினேன்.

நான் வீடு திரும்பியதை அறிந்ததும் பக்கத்து வீட்டுத் தோழி ஓடி வந்து அழைத்தாள், என்னவென்று சென்று பார்த்தால், "ஒரு விக்ஷயம் தெரியுமா டீச்சர் ? சக்கர வண்டி அங்கிள் "அவரு காலைல‌ உங்கள் வீட்டு வாசல் முன் சக்கர வண்டியில் ரொம்ப நேரம் காத்திருந்தார், நீங்கள் வர ரொம்ப தாமதமாகிவிட்டது, உங்களிடம் சொல்லச் சொல்லி விட்டு எங்களிடமும் விடைபெற்று போய்விட்டார் என்றாள்.

man in tears images க்கான பட முடிவுஎங்கே போனார்? எனது கேள்விக்கு அவள் சொன்ன பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது "அவர் மதம் மாறி "கெபாஜிக்கான்னுல" (ஆதரவற்றோர் இல்லம் ) போய் சேர்ந்துட்டாரு" அவள் கண்கள் கலங்க சொன்னாள், என்ன நடந்தது? ஏன் இப்படி ஆனது? மேலும் விசாரிக்க அவள் சொன்ன தகவல்கள் நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டுவதைப்போல்  வேதனையளித்தன‌.

இப்படியும் மனிதாபிமானமற்ற மனிதர்கள் இந்த  மண்ணில் வாழ்கின்றார்களே? பூமி ஏன் இன்னும் இவர்களை விழுங்காமல் விட்டுவைத்திருக்கிறது?


அவர்களைப்பிடித்து பேயறைகொடுக்க வேண்டும் என மனசு கொந்தளித்தது. அந்தப்பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொன்டு அவரின் சொத்துக்களை அந்த விக்ஷமிகளிடமிருந்து பகிக்ஷ்காரம் செய்யப்போவதால், பொறுமையுடன் பதவி ஓய்வு பெற்ற இராணுவ வீரரான அந்த எனது முதிர்ந்த‌ மகனின் கதையை அடுத்தப்பதிவில் தொடர்கிறேன்...