புதன், 15 ஜூன், 2016

நிரம்பல் - 2




love letters க்கான பட முடிவு 

அன்புள்ள மான்விழியே,
ஆசையில் ஓர் கடிதம், 
நான் எழுதுவதென்னவென்றால்  
உயிர்க் காதலில் ஓர் கவிதை....






வசந்தின் கடிதங்கள் அவந்திகாவின் மனதில் மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் உணடாக்கின. அக்கடிதங்களில் வசந்த் படு இரசனையுடன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும்,  குடும்பம், நண்பர்கள், வேலையிடம், பொழுது போக்கு, சிற‌ந்த புத்தகங்கள், அர‌சியல் என பல்வேறு விடயங்களைத்தாங்கி  நகைச்சுவை உண‌ர்வுடன்  நடு நடுவே அவளைப்பற்றிய கேள்விகளுடன் மடல்கள் வரைந்து அனுப்ப, அவந்திகாவிற்கு தன்னையறியாமலேயே வசந்தின் கடிதங்கள் மேல் அதீத ஈர்ப்பு உண்டானது. மீண்டும் மீண்டும் பலமுறை அக்கடிதங்களைப் படித்துப் படித்து அகமகிழ்ந்தாள், மிகவும் யோசித்து யோசித்து, வெகு பிரயத்தனத்துடன் அழகான கையெழுத்துடன் பதில் கடிதங்கள் வரைந்தாள். விரைந்து த‌பாலில் சேர்ப்பித்து பதில் கடிதம் காண பெரும் எதிர்ப்பார்ப்புக்களுடன் காத்திருக்க ஆரம்பித்தாள்.

இந்நிலை முற்றி அனுதினமும் ஒருவருக்கொருவர் கடிதம் பெறும் நிலை உருவானது. அவந்திகா எதேதோ புதுவித உணர்வுகளில் ஆழ்ந்து மகிழ்ந்தாள். அழகான, வாசம் நிறைந்த தந்தப் பேழை ஒன்றில் வசந்தின் கடிதங்களை அடுக்கி வைத்து, தன் கட்டிலில், யாருமறியாது மறைத்து வைத்து, அடிக்கடி அவற்றைப் படித்து, தனக்குத் தானே சிரித்து வந்தாள்.

வசந்திடம் இருந்து பதில் கடிதம் பெறும் ஒவ்வொரு முறையும் அவந்திகா தன் எடையத்தனையும் கரைந்து தான் ஒரு மயிலிறகாய் மாறி வானில் மிதப்பதாய் பரவசத்தில் ஆழ்ந்தாள். வசந்தின் கடிதங்கள் தன் வாழ்வில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கியிருப்பதை அவள் உணர ஆரம்பித்தாள். வசந்திடம் தன் மனதை பறிகொடுத்திருப்பதை அவள் அறியலானாள். வசந்த்திற்கும் அதே நிலை என்பதை, நாசுக்கான  கொஞ்சல்கள், கெஞ்சல்கள், நாகரீகமான காதல் வசனங்கள், உயிர் பிசையும் காதல் கவிதைகள் என மலர்ந்த அவர்களின் கடிதங்கள் மெய்ப்பித்தன. இருவருமே பெருமகிழ்வுடன் ஒருவரை இன்னொருவர் தங்கள் காதல் துணையென மனதுள் பதித்து போற்ற ஆரம்பித்தனர்.

இதுவும் அகத்தியனின் "காதல் கோட்டை" சினிமா காவியத்தைப்போல் தூரத்துக் காதலாய் மலர்ந்து மனம் வீசி, சொற்ப காலத்திலேயே இருவர் மனதிலும் காதல் முளைவிட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு பெரும் மரமாய் வள‌ர்ந்து அவர்களின் வாழ்வை நிறைத்தது. எனினும் அவந்திகாவை வசந்த் புகைப்படத்தில் கண்டதைப்போல் வசந்தை அவளால் காண‌ இயலவில்லை. புகைப்படத்தை வசந்த அனுப்பினால் தானே அவாந்திகா அவனை கண்டு இரசிக்க! வசந்தின் புகைப்படத்தை அவந்திகா பலமுறை கேட்டும், நேரிலே பார்த்துக்கொள் என அவள் கோரிக்கையை நிராகரித்து வந்தான் வசந்த்.

இருவரும் இணைந்து தங்களின் காதலை மேலும் ஒரு கூடுதல் தளத்திற்கு கொண்டு சென்றனர், ஆம் அவர்கள் இருவரும் தொலைபேசி வழி பேசிப்பழகவும் ஆரம்பித்தனர். இப்போது நண்டு சிண்டுகளெல்லாம் கையில் வைத்துத் திரியும் அலைபேசி அந்நாட்களில் அத்தனை பிரபலம் ஆகாததால் இருவரும் தங்களின் வீட்டுத் தொலைபேசி, அலுவலக தொலைபேசிகளின் வழி பேசிப்"பழக" ஆரம்பித்தனர்.

ஓர் அந்தி சாயும் பொழுதில், இருளும் ஒளியும் இணைந்து பிரியும் மஞ்சள் வெயில் வேளையில், கனிந்த சிவப்புடன் கதிரவன் விடைபெற, வானில் பல வண்ணக் கலவைகளுடன் இயற்கையின் எழில் ஓவியங்கள் உலா வர, அவந்திகாவின் அனுமதியுடன் அவள் வீட்டுத் தொலைபேசியில் அவளை அழைத்தான் வசந்த்.

ஆண்மை நிறைந்த கம்பீரமான வசந்த்தின் குரலில் மயங்கிப்போனாள் அவந்திகா! அமைதியான, ஆழமாய் உள்ளத்தை ஊடுருவும், குரலாலேயே பிறரை தன்னிடம் பணியச் செய்யக்கூடிய ஆளுமை நிறைந்த ஆண்குரல்! அவந்திகா உவகையின் உச்சியில் பறந்தாள், முழுமனதுடன் வசந்தை மனம் நிறைய ஏற்றி வைத்துக் கொண்டாடினாள். இவர்தான் என் வாழ்க்கைத்துணை என தனக்குள் சத்தியம் செய்துகொண்டாள். கடிதங்களும் தொடர, தொலைபேசி அழைப்புகளும் இருவர் பொழுதையும் நிறைத்தன. ஒரு நாள் பேசவில்லையானாலும் பைத்தியம் பிடித்துவிடுவதைப்போல் இருவரும் உண‌ர்ந்தனர்.

அவந்திகா தன் விடயம் முழுதும் அறிந்த தன் தாயையும் வசந்திடம் தொலைபேசி வழி பேசவைத்தாள். அவள் தாயும் வசந்தின் பணிவான பேச்சில் அகமகிழ்ந்து போனார். வசந்தின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். வசந்தின் பதில்கள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்கின. தன் மகளின் தேர்வு சோடை போகவில்லை என்பதை உண‌ர்ந்து பூரித்தார்.

அவந்திகாவின் தாய் வசந்தை வீட்டிற்கு பெண்கேட்டு வரும்படி அவந்திகாவை தூண்டினார். தன் கண‌வரிடமும் அனைத்தையும் பேசி சம்மதிக்கச்செய்தார், இருப்பினும் அது முதிர்ந்த ஆண்மனம் அல்லவா, ஆராய்ச்சி மனப்பான்மை நிறைந்தது வேறு. அவள் தந்தை அரை மனதுடன் முதலில் வீட்டிற்கு வரவழைத்துப் பேசுவோம் என்றார். வசந்த் அவளைத் தன் உறவுகளுடன் வந்து பெண்பார்த்துச் செல்ல நாள் குறித்தான். பெண்பார்க்கும் படலம் ஆரம்பமானது.

அவந்திகா அழகான சந்தண நிற சுடிதார் அணிந்து, ஒப்பனை, ஆபரண‌ங்கள் என தேவதையாய் மாறி  ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளுடன் வசந்தின் வருகைக்காக ஆசையுடன் காத்திருந்தாள்...

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது, தன் அறையில் அமர்ந்து வசந்தின் வருகைக்காக காத்திருந்த அவந்திகாவை ஒவ்வொரு கண‌மும் ஒரு யுகமாய் மாறி இம்சைசெய்தது. நீரிலே மிதப்பதுபோலவும், நெருப்பிலே நடப்பது போலவும், பனிக்கட்டிகளில் படுத்திருப்பதுபோலும், இதயத்தைப் பிடுங்கி யாரோ எடுத்துச் சென்றுவிட்டதைப் போலும், வயிற்றைப்  பிசைவது போலும் ஏதேதோ உண‌ர்வுகள் அவளைப் பாடாய்படுத்தின...

அவந்திகாவும் அவள் வீட்டாரும் ஆவலுடன் காத்திருந்த அந்த குறிப்பிட்ட நேரமும் வந்தது, சொல்லிவைத்தாற்போல் சரியான நேரத்தில் அவள் வீட்டு வாசலில் வசந்தின் மெர்ஸ் கார் வந்து நின்றது, அவள் வீட்டு  வரவேற்பறை ஆரவாரமாய் மாறியது, பேச்சுக் குரல்கள் எழுந்து அடங்கின, அவந்திகாவின் இதயம் வெளியே வந்து விழுந்துவிடுவதைப் போல் அதீத வேகத்துடன் ப‌டபடக்க ஆரம்பித்த‌து....

அவள் உற‌வுக்காரப் பெண் அவள் கையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தாம்பாள‌த்தில் தேனீர் வார்க்கப்பட்டிருந்த கோப்பைகளை அழகாய் அடுக்கி அவளிடத்தில் தந்தாள். தலை குனிந்தவாரே மெல்ல நடந்து வந்து அவந்திகா வந்தவர்களுக்கு தேனீரை வழங்க ஆரம்பித்தாள், ஒரு குரல் "இதுதான் வசந்தின் அம்மா" என 80 ஐ தாண்டிய பழுத்த சுமங்கலி ஒருவரை காட்டிட அம்மூதாட்டி சிநேகத்துடன் அவளைப் பார்த்து மென்மையாய் சிரித்தார், பிறகு வசந்தின் தந்தையென 90ஐ நெருங்கும் பெரியவர் ஒருவரை அவளுக்கு அறிமுகப்படுத்தினர், வெள்ளை வேட்டி சட்டையில் சுத்தமாய் காட்சியளித்தார் அந்தப் பெரியவர். மரியாதையுடன் தலையசைத்த அவந்திகாவை புன்னகை முகத்துடன் நோக்கினார் அந்தப் பெரியவர்.

அடுத்து மிக முக்கியக் கட்டம், தன் எழுத்தாலும், குரலாலும் தன் மனதை முழுமையாய் ஆக்ரமித்த வசந்தை முதன் முதலாய் நேருக்கு நேர் காண‌ப்போகிறாள் அவ‌ந்திகா, படபடப்பை மறைத்தபடி வந்திருந்தவர்களில் யாரோ ஒரு பெண்குரல் "இதுதான் எங்க வசந்த்" என உரிமையோடு அறிமுகம் செய்து வைக்க புன்னகையைத் தேக்கியபடி, நீட்டிய தேனீர் தட்டுடன் மெல்ல அவனை ஏறிட்டு நோக்க, அடுத்த கணம் அதிர்ச்சியில் அதிர்ந்துபோனாள் அவந்திகா!



இதுவா வசந்த் ? தன் மனதில் வீற்றிருந்து, தன் பொழுதுகளை காதல்வனமாகவும், தன் இரவுகளை காதல்சோலைகளாகவும் மாற்றிய அந்த வசந்த் இவரா ?. அய்யோ கடவுளே! இது என்ன கொடுமை! நான் என்ன பாவம் செய்தேன்!, என்னை ஏன் இப்படி தண்டித்தாய் ?  என மனம் ஆர்ப்பரித்து ஓங்கி அழ‌, கால்கள் தளர்ந்து மயக்கம் வருவதைப் போலிருந்தது அவந்திகாவிற்கு.....

தொடரும்....