சனி, 14 மே, 2016

நிரம்பல்
நான் எழுதுவது கடிதம் அல்ல !! 
உள்ளம் அதில் உள்ளவைதான் எழுத்தும் அல்ல !! எண்ணம் .....
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள !! 

கணிணியுகம் நம் வாழ்வை ஆக்ரமிப்பதற்கு முன்பு வரை, இன்னும் எளிமையாகச்  சொல்வதானால் "ஈமெயில்", "வாட்ஸப்", "ட்விட்டர்", "முகநூல்" ஆகியவை நம் வாழ்வை பின்னிப்பிணைப்பதற்கு முன்பு வரை கடிதம் எழுதுவதும், வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகளின் வழி பறிமாறிக்கொள்வதுமே புழக்கத்தில் இருந்து வந்தது.  தூரத்திலிருந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும் கூடவே "பேனா நட்பு" எனும் பெயரில் நட்பை பகிர்ந்துகொள்ளவும் கடித பரிவர்த்தனை பெரும் பங்காற்றியது. .இந்தப் பதிவு பேனா நட்பு மாற்றியமைத்த ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம்.

அவ‌ந்திகா, ஐந்து பிள்ளைகள் கொண்ட‌ குடும்பத்தில் மூன்றாவதாய் பிற‌ந்த பெண். வயது இருப‌துக்கு மேல், ஆள் பார்க்க சற்று மாநிறமாய் காட்சியளித்தாலும் மிகவும் களையான முகத்தோற்றம் கொன்ட அழகான பெண். வடிவழகும், பெரிய கூர்மையான விழிகள், மை தீட்டாமலேயே அடர்ந்த கருமையான புருவங்கள், எடுப்பான நாசி, சற்றே பெரிய இதழ்கள் என பார்க்கும் எவரையும் மறுபடியும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி.

அவந்திகா தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்று இடைநிலைப்படிப்போடு கல்விக்கு விடைகொடுத்துவிட்டு ஒரு மின்சார சாதனங்கள் உருவாக்கும் தொழிற்சாலையில் அலுவலகப்பிரிவில் பணியிலமர்ந்தாள். கலகலப்பாக பேசும் தன்மையினாலும், சிறப்பாய் பணியாற்றும் திறமையினாலும் அங்கே பணிபுரியும் எல்லோருக்கும் அவள் நெருக்கமாகிப்போனாள், நிறைய நண்பர்கள், தோழிகள் எனினும் அவள் மனங்கவர்ந்த வாலிபன் யாரையும் அந்த நண்பர் குழாமில் அவளால் அடையாளம் காண முடியவில்லை.

அவர்கள் குடும்பம் வாழ்ந்த‌து அவளின் தந்தை வழித்தாத்தா விட்டுச் சென்ற சொந்த‌நிலத்தில் அமைந்த வீட்டில், பலகையால் எழுப்பப்பட்ட வீடுதான் என்றாலும் "வாடகை" எனும் பிக்கல் பிடுங்கல் இல்லாத நிம்மதியான வசிப்பிடம் அவர்களுடையது. வீட்டிற்கு அருகாமையில் மீன்கள் துள்ளும் ஒரு சிறு அல்லி குளம், அழகு சொறியும் பூக்களும், உணவிற்கு தேவையான காய்கறிகள் விளையும் பசுமை நிறைந்த தோட்டம், ஆடு, மாடு, கோழி என கால் நடைகள் வளர்ப்பு என உணவுக்கு தேவைப்படும் பெரும்பாலானவற்றை அவள் தாய் சொந்தமாகவே வீட்டைச் சுற்றி ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

அவள் தந்தை மோட்டார் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார், அவந்திகாவின் மூத்த இரண்டு அண்ணன்களும், இளைய இரண்டு தம்பிகளும் இடைநிலைப்படிப்போடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அருகாமையிலிருந்த தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். ஆளாளுக்கு கையில் தாராள‌மாய் பணப்புழக்கம் என்பதால், வீட்டில் பணத்தேவை என்ற பிரச்சனை எப்பொழுதுமே எழுவதில்லை. அவர்களின் தாயின் சேமிப்பில் வங்கியில் நிறைய பணமும், தேவைக்கு மேல் தங்க ஆபரணங்களும் கைவசமிருந்தன. பருவ வயதடைந்துவிட்ட பெண்ணையும், வாலிப வாசலில் நிற்கும் மகன்களையும் மணமுடித்துவைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர் அவர்களின் பெற்றோர். அங்கே இங்கே என்று சொல்லி தங்கள் தகுதிக்கேற்ப தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர் பெற்றோர்.

அவந்திகா தன் பெற்றோர்களின் ஏற்பாடுகள் எதிலும் கவனம் கொள்ளாது தன் தொழிலிலேயே அதிக கவனம் செலுத்தி நாட்களைக் கடத்தி வந்தாள்.அவளது தோழியரில் மாலா எனும் பெண் நன்கு எழுதும் திறமையை கொண்டிருந்தாள். நாளிதழ்களில் பிரசுரமாகும் தனது எழுத்துப் படிவங்களை தன் நண்பர்களிடம் காட்டி பெருமிதம்கொள்வாள் மாலா.

அவந்திகா அவளிடம் நெருக்கமாக இருந்ததால் அவளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தானும் நாளிதழ்களுக்கும், மாத இதழ்களுக்கும் துணுக்குகளும், கேள்விகளும் அனுப்ப ஆரம்பித்தாள். தனது கேள்விகளும், துணுக்குகளும் பிரசுரமாகும் பட்சத்தில் தனக்கு நெருக்கமான அனைவரிடமும் காட்டி அகமகிழ்ந்து போனாள். நாளடைவில் வருட சந்தா கட்டி நாட்டில் பிரபலமாக வெளியாகும் ஓரிரு நாளிதழ்களும், மாத இதழ்களும் தனக்கு வாடிக்கையாக கிடைக்கும்படி செய்து கொண்டாள். அவ்வூரில் இயங்கி வந்த வாசகர் வட்டத்திலும் இணைந்து செயல்பட ஆரம்பித்தாள்.

வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற‌வை வாழ்வை ஆக்ரமிப்பதற்கு சற்று முன்பான காலக்கட்டம் அது என்பதால் அப்போது படித்த இளையோர்களிடையே "பேனா நட்பு" மிகவும் பிரபலம். தற்போதைய தொழில் நுட்பங்கள் தாண்டியும் இன்னமும் பேனா நட்பு உயிருடன் மாத இதழ்களின் தயவால் வலம்வந்துகொண்டுதானே இருக்கிறது. நமது கதாநாயகி அவந்திகாவிற்கும் பேனா நட்பு வேண்டும் எனும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது. உடனே புகழ்பெற்ற ஒரு வார சஞ்சிகையில் தனது அழகான புகைப்படமொன்றை விலாசத்துடன் பேனா நட்பு பகுதிக்கு அனுப்பிவைத்தாள்.

அவள் அனுப்பிய மறுவாரமே பேனா நட்புப் பகுதியில் அவளின் புகைப்படம் விலாசத்துடன் வெளிவந்தது. அவளுக்கு பல ஆண்கள், சில பெண்கள் என பலரிடமிருந்து நிறைய‌ கடிதங்கள் வரத் துவங்கின. கிடைத்த கடிதங்களில் தனக்குப் பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து பதில் அனுப்பினாள். அவளின் நட்பு வட்டத்தில் பேனா நண்பர்களும் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அவந்திகா அம்மா தந்த சூடான தேனீரைச் சுவைத்தபடியே தனக்கு வந்திருந்த கடிதங்களை ஆவலுடன் பிரித்து படிக்க ஆரம்பித்தாள். இறுதியாக நேர்த்தியான கையெழுத்துக்களால் தன் விலாசம் தாங்கி வந்திருந்த அந்த கடிதத்தை பிரித்தவள் மணிமணியான கையெழுத்துக்கள் தாங்கி மலர்ந்திருந்த அந்த மடலின் அழகான எழுத்துக்களில் சொக்கிப் போனாள் .

வசந்த் எனும் நபர் அவளிடம் பேனா நட்புக்கோரி  அவளுக்கு அனுப்பிய கடித‌ம் அது. ஓர் ஆணின் கையெழுத்து இத்தனை அழகாய் இருக்க முடியுமா ? பிரமிப்பாய் இருந்தது அவளுக்கு. அச்சடித்ததைப் போன்று முத்து முத்தான கையெழுத்துக்களை கோர்வையாய் தாங்கி, கண்ணியமாய் எழுத‌ப்பட்ட மடல் அது.

ஒரு தொழிற்சாலையில் தான் மேலாளர் (மானேஜர்) எனவும், நடுத்தர வயது திருமணமாகாத ஆண் என்றும் தன்னைப்பற்றிய சுருக்கமான குறிப்புகளுடன் அவளை சஞ்சிகையில் வெளிவந்த பேனாநட்புப் பகுதியில் கண்டதாகவும், அவளிடம் பேனா நட்புக் கொள்ள தாம் விரும்புவதாகவும் அதில் எழுதியிருந்தது.

அவந்திகாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை, முத்து முத்தான கையெழுத்து, பிழையில்லாத தமிழ், நேர்மையான விண்ணப்பம். முதல் வேலையாய் அக்கடிதத்திற்கு தன்னைப்பற்றிய மேலும் விவரங்களுடன் பதில் மடல் வரைந்தாள், விரைந்து அதை அஞ்சலில் சேர்ப்பித்தாள். அவள் எதிர்பார்த்தைப்போலவே வசந்திடமிருந்து அதிவிரைவில் பதில் கடிதம் வந்துசேர்ந்தது.....


தொடரும்.....