செவ்வாய், 27 செப்டம்பர், 2016

நிரம்பல் - நிறைவு



காதல் கடிதம் க்கான பட முடிவு
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்....





அவந்திகா, தன் மனங்கவர்ந்த வசந்த் எப்படியெல்லாம் இருக்கக்கூடுமென கற்பனை செய்து வைத்திருந்தாளோ, அதற்கெல்லாம் நேர்மாறாய் மிகவும் ஏமாற்றமளிப்பதாய் இருந்த‌து வசந்தின் தோற்றம்,

கரிய நிற‌த்தில், எழும்பும் தோலுமாய், ஒட்டிய கன்னங்கள், உள்ளடங்கிய கண்கள், சொட்டைத் தலை என வயோதிகரைப்போல் காட்சியளித்தான் வசந்த்.  உண்மையில் அதுதான் வசந்த் என்பதை அவந்திகாவின் வீட்டார் யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரும் பெருத்த ஏமாற்றமடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி திகைப்பில் ஆழ்ந்தனர்.

சூழ்நிலையைச் சமாளிக்க அவள் தந்தை மட்டும் தன்னைச் சுதாரித்துக்கொன்டு, வந்தவர்களிடமும் வசந்திடமும் சாதாரணமாக பேசி நேரத்தைக் கடத்திக்கொன்டிருந்தார். அவந்திகா ஏமாற்றமும், வேதனையும் வாட்டி எடுக்க விரைந்து அறைக்குள் திரும்பி மனம் புழுங்கி அழ ஆரம்பித்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் ஆடையை நனைத்தது.

மாப்பிள்ளை வீட்டார், வசந்தின் நிலையை பெண்வீட்டார் ஏற்கனவே அறிந்துள்ளனர் என நினைத்து வந்திருந்தனர், ஆனால் வசந்த் தன் உண்மை நிலையை மறைத்து வைத்திருந்த‌து அறிய வந்ததும் அவர்களின் நிலையும் தர்ம சங்கடமாகிப்போனது. அதிகம் பேசாமல் அனைவரும் அமைதியாகிவிட்டனர். மர‌புக்காய் சில விடயங்களைப்பேசி , தேனீரை அருந்திவிட்டு ஒருவழியாய் விடைபெற்றுச் சென்றனர்.

வசந்த் முகம் தொங்கிப்போய் சொல்லமுடியாத வேதனையை சுமந்தபடி தலையசைத்து விடைபெற்றுச்சென்றான். அவன் கண்கள் மீண்டும் ஒருமுறை அவந்திகாவைத் தேடியது. அவள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதையறிந்து மிகவும் ஏமாற்றத்துடன் புற‌ப்பட்டுச்சென்றான். தன் காதல் மேல் அவனுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவந்திகா தன் தோற்றத்தை பெரிதுபடுத்தி தன்னை புறக்கணிக்கமாட்டாள் எனும் மிகப் பெரிய நம்பிக்கையை அவனுள் விதைத்திருந்தது.

அவந்திகா புகைப்படத்தைவிட நேரில் பார்ப்பதற்கு பனியில் மலர்ந்த ரோஜாவைப்போல் மிகவும் இளமையாகவும், அழகாகவும் காட்சியளித்த‌து அவள்பால் வசந்திற்கு மேலும் ஆசையையும், காதலையும் ஏற்படுத்தியது. அவளின் பாராமுகம், தேனீரை தன்னிடம் நீட்டிய அந்த அழகிய சந்தண விரல்கள், முத்துக்களாய் ஜொலித்த விரல் நகங்கள், தன்னை ஒருமுறை பார்த்து சுருங்கிச் சிவந்த அவள் முகம் யாவும் அவனது மனத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி  அவனுக்கு மிகுந்த விசனத்தை உண்டுபண்ணியது.

வீடு திரும்பிய வசந்த் முதல் வேளையாய் அவந்திகாவை தொலைபேசியில் தொடர்புகொன்டு பேச முயற்சி செய்தான், ஆனால் அவந்திகா அவனிடம் பேச விருப்பப்படவில்லை. மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான வசந்த், யாரிடமும் பேசாது தனியறையில் அண்ண ஆகாரமின்றி தன்னைச் சிறைப்படுத்திக்கொன்டான். தொடர்ந்த‌ சில நாட்களில் உடல்நிலை வெகுவாய் பாதிக்கப்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொன்டு வந்தது. அந்த நிலையிலும் அவனது எண்ணம் முழுதையும் அவந்திகா நீக்கமற ஆக்ரமித்திருந்தாள்.
 
அவ்ந்திகாவின் வீட்டிலோ கோபமும், கொந்தளிப்புமாய் அனைவர் மனமும் அவதிப்பட்டுக்கொன்டிருந்தது. அவந்திகாவின் மேல் அளவற்ற அன்பு பூண்ட அவளின் சகோதரர்கள் ஆத்திரத்தில் ஆர்ப்பரித்தனர். அழகிய அவந்திகா எங்கே, வயதான கிழவரைப்போல் காட்சியளிக்கும் வசந்த் எங்கே ? கிளியை வளர்த்து யாராவது பூனையின் கையில் கொடுப்பார்களா ? இந்தத் திருமணம் நடக்கவே கூடாது என அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவந்திகாவின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பானது, வசந்தின் அழகிய எழுத்திலும், மனங்கவர்ந்த அவன் நட்பும் அவள் மனம் முழுதும் நிறைந்து
காதல் கடிதம் க்கான பட முடிவுஅளவிடமுடியாத காதலை அவன்பால் ஏற்படுத்திவிட்டிருந்தது. அந்த எண்ணங்களில் மூழ்கித் திளைத்த அவளால் அவற்றை மறக்கமுடியாது தவியாய் தவித்தாள், ஆனால் அழகற்ற‌ வசந்தின் தோற்றம் அவள் மனதில் மிகுந்த அச்சத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

எப்படி இவருடன் கைகோர்த்து கண‌வன் மனைவியாய் வாழமுடியும் ? ஊர் உலகம் என்ன சொல்லும் ? தன் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில்  இவரை எப்படி தன் கணவரென்று அறிமுகப்படுத்துவது ? நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் அவள் நாளும் பொழுதும் மிகவும் வேதனையடைந்தாள். அவந்திகா நடைப்பிண‌ம்போல் மாறிவிட்டாள். இள‌கிய அவள் அன்பு மனம், உயிராய் மதித்திருந்த வசந்தின் காதலை தூக்கியெறிந்து வேறோரு வாழ்வுக்கு அவள் மனதை மாற்றியமைக்கும் வலிமையை அவளுக்குத் தரவில்லை.

அவந்திகாவின் மேல் குறைசொல்லிப் பயனில்லை, வசந்த் உணமை நிலையை மறைத்ததால் வந்த வினை இது என்பதனை உணர்ந்து அவள் குடும்பம் அவளுக்கு ஆறுதல் கூறியது. அவள் பெற்றோர் சூழ்நிலை சரியான‌ பிறகு வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் எனக் காத்திருந்தனர், ஆனால் அவளின் அண்ணன்களும், தம்பிகளும் விரைவில் த‌ங்களின் சகோதரிக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்து திருமணம் செய்து விட வேண்டும் என அவர்களின் பெற்றோரை வற்புறுத்த ஆரம்பித்தனர். அவர்கள் பயந்ததைப்போலவே வசந்த் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் எனும் செய்தி அவர்களுக்கு இடியைப்போல் வந்து சேர்ந்தது.

அவந்திகாவின் மேல் எந்தத் தப்பும் இல்லையே, உண்மையைச் சொல்லாமல் மறைத்தது வசந்தின் தவறு, அதற்கு அவந்திகா எப்படிப் பொறுப்பேற்க முடியும்? த‌கவல் கூறி அழுத வசந்தின் தாய் வசந்தின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார். இளம் வயதில் ஏற்பட்ட கடும் நோயின் தொடர் விளைவுதான் இப்போதைய அவன் அழகற்ற தோற்றம் என்பதை அவளிடம் தெளிவாக எடுத்துரைத்தார். அவந்திகாவை ஒருமுறையேனும் தன் மகன் வசந்தை வந்து கண்டுசெல்லுமாறு கெஞ்சினார்.

தாயின் கண்ணீர் மிகவும் வலிமையானது அல்லவா ? அவந்திகாவின் பெற்றோர் மனமும் இரங்கியது, தங்கள் மகள்மேல் அன்பு பூண்டதால் ஓர் உயிர் பிரியக்கூடாது, அப்படி நிகழ்ந்தால் அது தீராத பழியாய் தன் மகளை வருத்தும் என நினைத்து வசந்தை சந்திக்க அவளுக்கு அனுமதி வழங்கினர்.

வசந்த் செய்தது தவறு என்றால் அவனது உண்மையான நிலையறியாது அவனைக் காதலித்த‌து அவந்திகாவின் தவறுதானே ? அவளையும் குற்ற உணர்ச்சி தாக்கியது. தன்னிடம் உண்மையை மறைத்த வசந்தின் மேல் ஆத்திரம் உண்டானாலும் , வெறுப்பு உண்டாகவில்லை அவந்திகாவிற்கு.

தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்று வசந்தைச் சந்தித்து
உபசரனையான வார்த்தைகளால் ஆறுதல் கூறினாள். தொடர்ந்து நட்பில் இருப்பதாய் வாக்களித்து விடைபெற்றாள். வசந்த மிகவும் மகிழ்ச்சியடைந்து
அவளிடம் உண்மையை மறைத்த தன் செயலுக்கு மன்னிப்புக் கோரினான். புன்னகையுடன் அவ‌ன் மன்னிப்பை ஏற்றுக்கொன்டு, கூடிய விரைவில் நலமடைந்து தனக்கு கடிதம் எழுதுமாறு விண்ணப்பித்து வசந்திடமிருந்து விடைபெற்றாள் அவந்திகா.

அவந்திகாவைச் சந்தித்த பின்னர் வசந்த் விரைந்து தேறினான், மருத்துவமனையிலிருதே அவளுக்கு கடிதம் எழுதினான். வசந்தின் கடிதம் அவந்திகாவின் மனதில் மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோற்றம் குறித்த சிந்தனை மறந்து பழையபடி வசந்தின் மேல் அவளுக்கு ஈர்ப்பு ஆரம்பித்தது, காதலுக்கு கண்ணில்லை என்பது உணமைதான் போலும்.

அவந்திகா வசந்தை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாள். முதலில் மறுத்த அவளின் பெற்றோர் பின்னர் அவள் முடிவுக்கு கட்டுப்பட்டனர், ஆனால் அவள் சகோதரர்கள் தாண்டிக் குதித்து தாண்டவம் ஆடினர், திருமணம் நடக்கவே கூடாது என ஆர்ப்பரித்தனர். அவந்திகா யார் பேச்சையும் கேட்காது தன் முடிவில் தீர்மானமாய் இருந்தாள். ஆத்திரமடைந்த அவள் சகோதரர்கள் அவளிடம் பேசுவதை நிறுத்திக்கொன்டனர்.

அவந்திகாவின் பெற்றோர் அவள் விருப்பப்படியே திருமணம் செய்துவைத்தனர். அவளின் சகோதரர்கள் அவளின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் விலகினர். அவர்கள் பயந்தபடி ஏதுமின்றி, அவந்திகாவுடன் இனிதே தன் இல்லற வாழ்வைத் துவங்கினான் வசந்த்.  தொழிலிலும் மேல் நிலையை எட்டி செல்வந்தனாக விளங்கினான். அவர்கள் நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஆரம்பித்தனர்.

வசந்த் அவந்திகாவை உள்ள‌ங்கையில் வைத்துத் தாங்கினான் , அவளது தேவைகளை நிறைவேற்றி அவள் மனதை முழுதாய் தன் வசமாக்கிக் கொன்டான். அவன் அன்பு மனம் அவனது அழகற்ற தோற்றத்தை வெனறது. அவள் அவன்மேல் ஆழ்ந்த அன்பைச் செலுத்த ஆரம்பித்தாள், அவர்கள் வாழ்வு தேனாய் இனிக்க ஆரம்பித்தது, முதலில் அவர்களைப் பழித்தவர்கள் அவர்களின் அன்னியோன்னியம் கண்டு வாய்மூடினர்.

loving couples gallery க்கான பட முடிவுஅவர்கள் இருவருக்கும் நான்கு குழந்தைகள். மிகவும் அழகான பங்களாவில் வாழ்கிறார் அவந்திகா. விலையுயர்ந்த காரில் அழகான உடைகளுடுத்தி, நகைகளும், ஒப்பனையுமாய் அன்பான கணவர் குழந்தைகளுடன் செல்வச் செழிப்பாக பவனி வருகிறார். முன்பு பழித்த உறவுகளும், சொந்தங்களும் இப்பொழுது அன்பொழுக வரவேற்று தங்கள் தேவைகளில் அவர்களை முன்னிறுத்தி கொன்டாடுகின்றனர்.

காலங்கள் கடந்து இப்பொழுது அவர்கள் இருவரும் முதிர்ந்துவிட்ட தம்பதியர். எனினும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஆரம்பத்தில் அவளுக்கு அன்புடன் கடிதம் எழுதியதைப்போல் இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறார் வசந்த், அதே மகிழ்ச்சியும், காதலும் சூழ இன்றும் அவற்றைப் படித்து பரவசமடைந்து பத்திரப்படுத்தி வருகிறார் அவந்திகா...!!        


பி.கு : அன்பு நட்புக்களே, பெண்ணின் வாழ்வை மாற்றிய பேனா நட்பு என்றவுடன் சீரழிந்த பெண்ணின் வாழ்வு என‌ நினைத்து சோக முடிவை எதிர்பார்த்தீர்களாக்கும் :P  இது ஒரு சுப முடிவைக் கொன்ட மகிழ்ச்சியான படைப்பாக்கும் :)))


புதன், 15 ஜூன், 2016

நிரம்பல் - 2




love letters க்கான பட முடிவு 

அன்புள்ள மான்விழியே,
ஆசையில் ஓர் கடிதம், 
நான் எழுதுவதென்னவென்றால்  
உயிர்க் காதலில் ஓர் கவிதை....






வசந்தின் கடிதங்கள் அவந்திகாவின் மனதில் மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் உணடாக்கின. அக்கடிதங்களில் வசந்த் படு இரசனையுடன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும்,  குடும்பம், நண்பர்கள், வேலையிடம், பொழுது போக்கு, சிற‌ந்த புத்தகங்கள், அர‌சியல் என பல்வேறு விடயங்களைத்தாங்கி  நகைச்சுவை உண‌ர்வுடன்  நடு நடுவே அவளைப்பற்றிய கேள்விகளுடன் மடல்கள் வரைந்து அனுப்ப, அவந்திகாவிற்கு தன்னையறியாமலேயே வசந்தின் கடிதங்கள் மேல் அதீத ஈர்ப்பு உண்டானது. மீண்டும் மீண்டும் பலமுறை அக்கடிதங்களைப் படித்துப் படித்து அகமகிழ்ந்தாள், மிகவும் யோசித்து யோசித்து, வெகு பிரயத்தனத்துடன் அழகான கையெழுத்துடன் பதில் கடிதங்கள் வரைந்தாள். விரைந்து த‌பாலில் சேர்ப்பித்து பதில் கடிதம் காண பெரும் எதிர்ப்பார்ப்புக்களுடன் காத்திருக்க ஆரம்பித்தாள்.

இந்நிலை முற்றி அனுதினமும் ஒருவருக்கொருவர் கடிதம் பெறும் நிலை உருவானது. அவந்திகா எதேதோ புதுவித உணர்வுகளில் ஆழ்ந்து மகிழ்ந்தாள். அழகான, வாசம் நிறைந்த தந்தப் பேழை ஒன்றில் வசந்தின் கடிதங்களை அடுக்கி வைத்து, தன் கட்டிலில், யாருமறியாது மறைத்து வைத்து, அடிக்கடி அவற்றைப் படித்து, தனக்குத் தானே சிரித்து வந்தாள்.

வசந்திடம் இருந்து பதில் கடிதம் பெறும் ஒவ்வொரு முறையும் அவந்திகா தன் எடையத்தனையும் கரைந்து தான் ஒரு மயிலிறகாய் மாறி வானில் மிதப்பதாய் பரவசத்தில் ஆழ்ந்தாள். வசந்தின் கடிதங்கள் தன் வாழ்வில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கியிருப்பதை அவள் உணர ஆரம்பித்தாள். வசந்திடம் தன் மனதை பறிகொடுத்திருப்பதை அவள் அறியலானாள். வசந்த்திற்கும் அதே நிலை என்பதை, நாசுக்கான  கொஞ்சல்கள், கெஞ்சல்கள், நாகரீகமான காதல் வசனங்கள், உயிர் பிசையும் காதல் கவிதைகள் என மலர்ந்த அவர்களின் கடிதங்கள் மெய்ப்பித்தன. இருவருமே பெருமகிழ்வுடன் ஒருவரை இன்னொருவர் தங்கள் காதல் துணையென மனதுள் பதித்து போற்ற ஆரம்பித்தனர்.

இதுவும் அகத்தியனின் "காதல் கோட்டை" சினிமா காவியத்தைப்போல் தூரத்துக் காதலாய் மலர்ந்து மனம் வீசி, சொற்ப காலத்திலேயே இருவர் மனதிலும் காதல் முளைவிட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு பெரும் மரமாய் வள‌ர்ந்து அவர்களின் வாழ்வை நிறைத்தது. எனினும் அவந்திகாவை வசந்த் புகைப்படத்தில் கண்டதைப்போல் வசந்தை அவளால் காண‌ இயலவில்லை. புகைப்படத்தை வசந்த அனுப்பினால் தானே அவாந்திகா அவனை கண்டு இரசிக்க! வசந்தின் புகைப்படத்தை அவந்திகா பலமுறை கேட்டும், நேரிலே பார்த்துக்கொள் என அவள் கோரிக்கையை நிராகரித்து வந்தான் வசந்த்.

இருவரும் இணைந்து தங்களின் காதலை மேலும் ஒரு கூடுதல் தளத்திற்கு கொண்டு சென்றனர், ஆம் அவர்கள் இருவரும் தொலைபேசி வழி பேசிப்பழகவும் ஆரம்பித்தனர். இப்போது நண்டு சிண்டுகளெல்லாம் கையில் வைத்துத் திரியும் அலைபேசி அந்நாட்களில் அத்தனை பிரபலம் ஆகாததால் இருவரும் தங்களின் வீட்டுத் தொலைபேசி, அலுவலக தொலைபேசிகளின் வழி பேசிப்"பழக" ஆரம்பித்தனர்.

ஓர் அந்தி சாயும் பொழுதில், இருளும் ஒளியும் இணைந்து பிரியும் மஞ்சள் வெயில் வேளையில், கனிந்த சிவப்புடன் கதிரவன் விடைபெற, வானில் பல வண்ணக் கலவைகளுடன் இயற்கையின் எழில் ஓவியங்கள் உலா வர, அவந்திகாவின் அனுமதியுடன் அவள் வீட்டுத் தொலைபேசியில் அவளை அழைத்தான் வசந்த்.

ஆண்மை நிறைந்த கம்பீரமான வசந்த்தின் குரலில் மயங்கிப்போனாள் அவந்திகா! அமைதியான, ஆழமாய் உள்ளத்தை ஊடுருவும், குரலாலேயே பிறரை தன்னிடம் பணியச் செய்யக்கூடிய ஆளுமை நிறைந்த ஆண்குரல்! அவந்திகா உவகையின் உச்சியில் பறந்தாள், முழுமனதுடன் வசந்தை மனம் நிறைய ஏற்றி வைத்துக் கொண்டாடினாள். இவர்தான் என் வாழ்க்கைத்துணை என தனக்குள் சத்தியம் செய்துகொண்டாள். கடிதங்களும் தொடர, தொலைபேசி அழைப்புகளும் இருவர் பொழுதையும் நிறைத்தன. ஒரு நாள் பேசவில்லையானாலும் பைத்தியம் பிடித்துவிடுவதைப்போல் இருவரும் உண‌ர்ந்தனர்.

அவந்திகா தன் விடயம் முழுதும் அறிந்த தன் தாயையும் வசந்திடம் தொலைபேசி வழி பேசவைத்தாள். அவள் தாயும் வசந்தின் பணிவான பேச்சில் அகமகிழ்ந்து போனார். வசந்தின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். வசந்தின் பதில்கள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்கின. தன் மகளின் தேர்வு சோடை போகவில்லை என்பதை உண‌ர்ந்து பூரித்தார்.

அவந்திகாவின் தாய் வசந்தை வீட்டிற்கு பெண்கேட்டு வரும்படி அவந்திகாவை தூண்டினார். தன் கண‌வரிடமும் அனைத்தையும் பேசி சம்மதிக்கச்செய்தார், இருப்பினும் அது முதிர்ந்த ஆண்மனம் அல்லவா, ஆராய்ச்சி மனப்பான்மை நிறைந்தது வேறு. அவள் தந்தை அரை மனதுடன் முதலில் வீட்டிற்கு வரவழைத்துப் பேசுவோம் என்றார். வசந்த் அவளைத் தன் உறவுகளுடன் வந்து பெண்பார்த்துச் செல்ல நாள் குறித்தான். பெண்பார்க்கும் படலம் ஆரம்பமானது.

அவந்திகா அழகான சந்தண நிற சுடிதார் அணிந்து, ஒப்பனை, ஆபரண‌ங்கள் என தேவதையாய் மாறி  ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளுடன் வசந்தின் வருகைக்காக ஆசையுடன் காத்திருந்தாள்...

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது, தன் அறையில் அமர்ந்து வசந்தின் வருகைக்காக காத்திருந்த அவந்திகாவை ஒவ்வொரு கண‌மும் ஒரு யுகமாய் மாறி இம்சைசெய்தது. நீரிலே மிதப்பதுபோலவும், நெருப்பிலே நடப்பது போலவும், பனிக்கட்டிகளில் படுத்திருப்பதுபோலும், இதயத்தைப் பிடுங்கி யாரோ எடுத்துச் சென்றுவிட்டதைப் போலும், வயிற்றைப்  பிசைவது போலும் ஏதேதோ உண‌ர்வுகள் அவளைப் பாடாய்படுத்தின...

அவந்திகாவும் அவள் வீட்டாரும் ஆவலுடன் காத்திருந்த அந்த குறிப்பிட்ட நேரமும் வந்தது, சொல்லிவைத்தாற்போல் சரியான நேரத்தில் அவள் வீட்டு வாசலில் வசந்தின் மெர்ஸ் கார் வந்து நின்றது, அவள் வீட்டு  வரவேற்பறை ஆரவாரமாய் மாறியது, பேச்சுக் குரல்கள் எழுந்து அடங்கின, அவந்திகாவின் இதயம் வெளியே வந்து விழுந்துவிடுவதைப் போல் அதீத வேகத்துடன் ப‌டபடக்க ஆரம்பித்த‌து....

அவள் உற‌வுக்காரப் பெண் அவள் கையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தாம்பாள‌த்தில் தேனீர் வார்க்கப்பட்டிருந்த கோப்பைகளை அழகாய் அடுக்கி அவளிடத்தில் தந்தாள். தலை குனிந்தவாரே மெல்ல நடந்து வந்து அவந்திகா வந்தவர்களுக்கு தேனீரை வழங்க ஆரம்பித்தாள், ஒரு குரல் "இதுதான் வசந்தின் அம்மா" என 80 ஐ தாண்டிய பழுத்த சுமங்கலி ஒருவரை காட்டிட அம்மூதாட்டி சிநேகத்துடன் அவளைப் பார்த்து மென்மையாய் சிரித்தார், பிறகு வசந்தின் தந்தையென 90ஐ நெருங்கும் பெரியவர் ஒருவரை அவளுக்கு அறிமுகப்படுத்தினர், வெள்ளை வேட்டி சட்டையில் சுத்தமாய் காட்சியளித்தார் அந்தப் பெரியவர். மரியாதையுடன் தலையசைத்த அவந்திகாவை புன்னகை முகத்துடன் நோக்கினார் அந்தப் பெரியவர்.

அடுத்து மிக முக்கியக் கட்டம், தன் எழுத்தாலும், குரலாலும் தன் மனதை முழுமையாய் ஆக்ரமித்த வசந்தை முதன் முதலாய் நேருக்கு நேர் காண‌ப்போகிறாள் அவ‌ந்திகா, படபடப்பை மறைத்தபடி வந்திருந்தவர்களில் யாரோ ஒரு பெண்குரல் "இதுதான் எங்க வசந்த்" என உரிமையோடு அறிமுகம் செய்து வைக்க புன்னகையைத் தேக்கியபடி, நீட்டிய தேனீர் தட்டுடன் மெல்ல அவனை ஏறிட்டு நோக்க, அடுத்த கணம் அதிர்ச்சியில் அதிர்ந்துபோனாள் அவந்திகா!



இதுவா வசந்த் ? தன் மனதில் வீற்றிருந்து, தன் பொழுதுகளை காதல்வனமாகவும், தன் இரவுகளை காதல்சோலைகளாகவும் மாற்றிய அந்த வசந்த் இவரா ?. அய்யோ கடவுளே! இது என்ன கொடுமை! நான் என்ன பாவம் செய்தேன்!, என்னை ஏன் இப்படி தண்டித்தாய் ?  என மனம் ஆர்ப்பரித்து ஓங்கி அழ‌, கால்கள் தளர்ந்து மயக்கம் வருவதைப் போலிருந்தது அவந்திகாவிற்கு.....

தொடரும்....
           


   

 



   











 

சனி, 14 மே, 2016

நிரம்பல்




நான் எழுதுவது கடிதம் அல்ல !! 
உள்ளம் அதில் உள்ளவைதான் எழுத்தும் அல்ல !! எண்ணம் .....
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள !! 





கணிணியுகம் நம் வாழ்வை ஆக்ரமிப்பதற்கு முன்பு வரை, இன்னும் எளிமையாகச்  சொல்வதானால் "ஈமெயில்", "வாட்ஸப்", "ட்விட்டர்", "முகநூல்" ஆகியவை நம் வாழ்வை பின்னிப்பிணைப்பதற்கு முன்பு வரை கடிதம் எழுதுவதும், வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகளின் வழி பறிமாறிக்கொள்வதுமே புழக்கத்தில் இருந்து வந்தது.  தூரத்திலிருந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும் கூடவே "பேனா நட்பு" எனும் பெயரில் நட்பை பகிர்ந்துகொள்ளவும் கடித பரிவர்த்தனை பெரும் பங்காற்றியது. .இந்தப் பதிவு பேனா நட்பு மாற்றியமைத்த ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம்.

அவ‌ந்திகா, ஐந்து பிள்ளைகள் கொண்ட‌ குடும்பத்தில் மூன்றாவதாய் பிற‌ந்த பெண். வயது இருப‌துக்கு மேல், ஆள் பார்க்க சற்று மாநிறமாய் காட்சியளித்தாலும் மிகவும் களையான முகத்தோற்றம் கொன்ட அழகான பெண். வடிவழகும், பெரிய கூர்மையான விழிகள், மை தீட்டாமலேயே அடர்ந்த கருமையான புருவங்கள், எடுப்பான நாசி, சற்றே பெரிய இதழ்கள் என பார்க்கும் எவரையும் மறுபடியும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி.

அவந்திகா தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்று இடைநிலைப்படிப்போடு கல்விக்கு விடைகொடுத்துவிட்டு ஒரு மின்சார சாதனங்கள் உருவாக்கும் தொழிற்சாலையில் அலுவலகப்பிரிவில் பணியிலமர்ந்தாள். கலகலப்பாக பேசும் தன்மையினாலும், சிறப்பாய் பணியாற்றும் திறமையினாலும் அங்கே பணிபுரியும் எல்லோருக்கும் அவள் நெருக்கமாகிப்போனாள், நிறைய நண்பர்கள், தோழிகள் எனினும் அவள் மனங்கவர்ந்த வாலிபன் யாரையும் அந்த நண்பர் குழாமில் அவளால் அடையாளம் காண முடியவில்லை.

அவர்கள் குடும்பம் வாழ்ந்த‌து அவளின் தந்தை வழித்தாத்தா விட்டுச் சென்ற சொந்த‌நிலத்தில் அமைந்த வீட்டில், பலகையால் எழுப்பப்பட்ட வீடுதான் என்றாலும் "வாடகை" எனும் பிக்கல் பிடுங்கல் இல்லாத நிம்மதியான வசிப்பிடம் அவர்களுடையது. வீட்டிற்கு அருகாமையில் மீன்கள் துள்ளும் ஒரு சிறு அல்லி குளம், அழகு சொறியும் பூக்களும், உணவிற்கு தேவையான காய்கறிகள் விளையும் பசுமை நிறைந்த தோட்டம், ஆடு, மாடு, கோழி என கால் நடைகள் வளர்ப்பு என உணவுக்கு தேவைப்படும் பெரும்பாலானவற்றை அவள் தாய் சொந்தமாகவே வீட்டைச் சுற்றி ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

அவள் தந்தை மோட்டார் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார், அவந்திகாவின் மூத்த இரண்டு அண்ணன்களும், இளைய இரண்டு தம்பிகளும் இடைநிலைப்படிப்போடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அருகாமையிலிருந்த தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். ஆளாளுக்கு கையில் தாராள‌மாய் பணப்புழக்கம் என்பதால், வீட்டில் பணத்தேவை என்ற பிரச்சனை எப்பொழுதுமே எழுவதில்லை. அவர்களின் தாயின் சேமிப்பில் வங்கியில் நிறைய பணமும், தேவைக்கு மேல் தங்க ஆபரணங்களும் கைவசமிருந்தன. பருவ வயதடைந்துவிட்ட பெண்ணையும், வாலிப வாசலில் நிற்கும் மகன்களையும் மணமுடித்துவைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர் அவர்களின் பெற்றோர். அங்கே இங்கே என்று சொல்லி தங்கள் தகுதிக்கேற்ப தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர் பெற்றோர்.

அவந்திகா தன் பெற்றோர்களின் ஏற்பாடுகள் எதிலும் கவனம் கொள்ளாது தன் தொழிலிலேயே அதிக கவனம் செலுத்தி நாட்களைக் கடத்தி வந்தாள்.அவளது தோழியரில் மாலா எனும் பெண் நன்கு எழுதும் திறமையை கொண்டிருந்தாள். நாளிதழ்களில் பிரசுரமாகும் தனது எழுத்துப் படிவங்களை தன் நண்பர்களிடம் காட்டி பெருமிதம்கொள்வாள் மாலா.

அவந்திகா அவளிடம் நெருக்கமாக இருந்ததால் அவளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தானும் நாளிதழ்களுக்கும், மாத இதழ்களுக்கும் துணுக்குகளும், கேள்விகளும் அனுப்ப ஆரம்பித்தாள். தனது கேள்விகளும், துணுக்குகளும் பிரசுரமாகும் பட்சத்தில் தனக்கு நெருக்கமான அனைவரிடமும் காட்டி அகமகிழ்ந்து போனாள். நாளடைவில் வருட சந்தா கட்டி நாட்டில் பிரபலமாக வெளியாகும் ஓரிரு நாளிதழ்களும், மாத இதழ்களும் தனக்கு வாடிக்கையாக கிடைக்கும்படி செய்து கொண்டாள். அவ்வூரில் இயங்கி வந்த வாசகர் வட்டத்திலும் இணைந்து செயல்பட ஆரம்பித்தாள்.

வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற‌வை வாழ்வை ஆக்ரமிப்பதற்கு சற்று முன்பான காலக்கட்டம் அது என்பதால் அப்போது படித்த இளையோர்களிடையே "பேனா நட்பு" மிகவும் பிரபலம். தற்போதைய தொழில் நுட்பங்கள் தாண்டியும் இன்னமும் பேனா நட்பு உயிருடன் மாத இதழ்களின் தயவால் வலம்வந்துகொண்டுதானே இருக்கிறது. நமது கதாநாயகி அவந்திகாவிற்கும் பேனா நட்பு வேண்டும் எனும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது. உடனே புகழ்பெற்ற ஒரு வார சஞ்சிகையில் தனது அழகான புகைப்படமொன்றை விலாசத்துடன் பேனா நட்பு பகுதிக்கு அனுப்பிவைத்தாள்.

அவள் அனுப்பிய மறுவாரமே பேனா நட்புப் பகுதியில் அவளின் புகைப்படம் விலாசத்துடன் வெளிவந்தது. அவளுக்கு பல ஆண்கள், சில பெண்கள் என பலரிடமிருந்து நிறைய‌ கடிதங்கள் வரத் துவங்கின. கிடைத்த கடிதங்களில் தனக்குப் பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து பதில் அனுப்பினாள். அவளின் நட்பு வட்டத்தில் பேனா நண்பர்களும் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அவந்திகா அம்மா தந்த சூடான தேனீரைச் சுவைத்தபடியே தனக்கு வந்திருந்த கடிதங்களை ஆவலுடன் பிரித்து படிக்க ஆரம்பித்தாள். இறுதியாக நேர்த்தியான கையெழுத்துக்களால் தன் விலாசம் தாங்கி வந்திருந்த அந்த கடிதத்தை பிரித்தவள் மணிமணியான கையெழுத்துக்கள் தாங்கி மலர்ந்திருந்த அந்த மடலின் அழகான எழுத்துக்களில் சொக்கிப் போனாள் .

வசந்த் எனும் நபர் அவளிடம் பேனா நட்புக்கோரி  அவளுக்கு அனுப்பிய கடித‌ம் அது. ஓர் ஆணின் கையெழுத்து இத்தனை அழகாய் இருக்க முடியுமா ? பிரமிப்பாய் இருந்தது அவளுக்கு. அச்சடித்ததைப் போன்று முத்து முத்தான கையெழுத்துக்களை கோர்வையாய் தாங்கி, கண்ணியமாய் எழுத‌ப்பட்ட மடல் அது.

ஒரு தொழிற்சாலையில் தான் மேலாளர் (மானேஜர்) எனவும், நடுத்தர வயது திருமணமாகாத ஆண் என்றும் தன்னைப்பற்றிய சுருக்கமான குறிப்புகளுடன் அவளை சஞ்சிகையில் வெளிவந்த பேனாநட்புப் பகுதியில் கண்டதாகவும், அவளிடம் பேனா நட்புக் கொள்ள தாம் விரும்புவதாகவும் அதில் எழுதியிருந்தது.

அவந்திகாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை, முத்து முத்தான கையெழுத்து, பிழையில்லாத தமிழ், நேர்மையான விண்ணப்பம். முதல் வேலையாய் அக்கடிதத்திற்கு தன்னைப்பற்றிய மேலும் விவரங்களுடன் பதில் மடல் வரைந்தாள், விரைந்து அதை அஞ்சலில் சேர்ப்பித்தாள். அவள் எதிர்பார்த்தைப்போலவே வசந்திடமிருந்து அதிவிரைவில் பதில் கடிதம் வந்துசேர்ந்தது.....


தொடரும்.....

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஏவல் (நிறைவு)

யாழினியின் கணவன் மைக்கேலின் மறைவுக்கு அவள் தாய் தேவி வைத்த ஏவல்தான் காரணம் எனவும் அவர் செய்த வினை இன்று அவர் குடும்பத்தையே பலி வாங்குகிறது எனவும் விவரித்தாள் யாழினியின் மூத்த அண்ணி கோமதி.

யாழினி வீட்டைவிட்டு வெளியேறி மைக்கேலை மணந்தது அவள் தாய் தேவிக்கு அறவே பிடிக்கவில்லை, ஆனால் யாழினியின் தந்தை, அவள் அக்காள்மார்கள், அண்ணியர்கள் யாவரும் அவள் திருமணத்தை ஆதரித்தனர்.

யாழினி தன் குடும்பம் இல்லாமலேயே மேல் நாட்டு முறைப்படி திருமணம் செய்து தானும் மைக்கேலும் ஜோடியாக எடுத்துக்கொண்ட திருமண‌ப் புகைப்படங்களை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். அந்தப் படங்களில் அவள் அழகைக் கண்டு அவள் குடும்பத்தினர் வியந்து மகிழ்ந்தனர், அவள் தாய் ஒருவரைத் தவிர, " ஆயிப் பார்த்த கல்யாணம், போயிப் பார்த்தா தெரியுமாம், போயிப் பார்த்த கல்யாண‌ம் அங்க நாலு நாளு தங்கிப் பார்த்தா புரியுமாம் " என‌ எள்ளலுடன் முகத்தை தோள் பட்டையில் இடித்து தமது வெறுப்பை உமிழ்ந்தார்.

உண்மையில் பெரும்பாலான வெளிநாட்டு ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்பது உண்மையே. எனினும் மைக்கேலின் நல்ல‌ நடைமுறை இயல்புகளும், யாழினியிடம் அவன் காட்டிய ஆழமான அன்பும், அவனின் ஆதாயம் மிகுந்த நிரந்தர தொழிலும் அவனை நம்பிக்கைக்கு உரியவனாக காட்டிடவே, யாழினியின் குடுமபத்தில் பெரும்பாலோர் அவனை நம்பி ஏற்றுக்கொன்டனர் ஆனால் தேவிக்கு மட்டும் இறுதிவரை அவன்மேல் நம்பிக்கையோ, நல்லெண்ண‌மோ ஏற்படவேயில்லை. அது அவன் செத்தாலும் பரவாயில்லை தன் மகள் வீடு திரும்பினாள் போதுமென்ற மனநிலைக்கு அவரை இட்டுச்சென்றது.

நாட்கள் ஆக‌ ஆக, தேவியால் இருப்புக் கொள்ள முடியவில்லை, தன் மகள் யாழினியை அந்த வாலிபனிடமிருந்து பிரித்தே ஆக வேண்டுமென்று அவர் மனம் கங்கணம் கட்டி ஆர்ப்ப‌ரித்தது. வீட்டிலுள்ள அனைவரிடமும், "என் மகளை என்கிட்டேயிருந்து பிரிச்சவன கொல்லாம விடமாட்டேன்" என புலம்ப ஆரம்பித்தார்.

மூப்படைந்த அந்தக் கிழவியின் கூற்றை யாருமே சட்டை செய்யவில்லை ஒருத்தியைத் தவிர, அது அவர் அண்டை வீட்டுக்காரி கமலா, கமலாவின் குடும்பம் ஏழ்மையானது, ஒழுங்காய் வேலைக்குப் போகாத கணவன், வத வதவென குழந்தைகள், நாலைந்து பண‌க்கார சீனர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வ‌ரும் சொற்ப சம்பளமே வாழ்க்கைக்கு ஆதாரம், தன்னைப்போலவே ஏழையாயிருந்து இன்று நல்ல வசதியிலிருக்கும் தேவி, நன்கு மஞ்சள் நீருற்றி மாலை அணிவித்து பலிகொடுக்கக் காத்திருக்கும் கொழுத்த ஆடாகக் கமலாவின் கண்களுக்கு தென்பட்டார், இவரைக் கொன்டு நாம் ஆதாயமடையலாம் என்பதை அறிந்து கொன்டாள்.

ஏற்கனவே யாழினியின் செய்கையால் நொந்துபோன தேவி தம்மை யாருமே சட்டை செய்யாததால் வாடியிருந்ததை பயன்படுத்தி அவரைத் தம் வீட்டிற்கு வரவழைத்துப் பேசினாள். தேவி கண்ணைக்கசக்கி மூக்கைச் சிந்தி புலம்பியதையெல்லாம் வெகு அக்கரையுடன் கேட்டு பரிதாபமான முகபாவங்கள் காட்டி, அவ்வப்போது அழுவதைப்போலவும் வராத கண்ணீரை  புற‌ங்கையால் தேய்த்து,  ரொம்பவும் கரிசனத்துடன் வரக்கோப்பியை தேவியின் கையில் திணித்து அவருக்காகப் பரிந்து பேசினாள்.

தேவியின் வருத்ததிற்கெல்லாம் ஒரு முடிவு இருக்கிறது எனவும், தேவி சம்மதித்தால் நாலு நல்ல சாமியாடி, மந்திரவாதிகளிடம் அழைத்துச்சென்று யாழினிக்கு "மனமாற்று" செய்து அவள் கணவனிடமிருந்து அவளைப் பிரித்து கொன்டுவந்துவிடலாம், ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என கமலா தன் காவிப்பற்கள் தெரிய சிரித்து, தலையைச் சொறிந்தாள் .

தேவியின் எண்ணங்களுக்கு கமலா போட்ட தூபம் வேலை செய்ய ஆரம்பித்தது. அதனால் பணத்தை அவர் பெரிதாகவே நினைக்கவில்லை, தன் டிரங்குப் பெட்டியில் வீட்டுச் செலவுகள் போக ஒளித்து வைத்திருந்த பணத்தில் சில 50 ரிங்கிட் தாட்களை கமலாவின் கையில் திணித்து, "அவன் சாகனும் எம்பொண்ணு வீடு திரும்பனும் " என தாய்மையை மறந்து ஆத்திரம் கண்ணை மறைக்க சூளுரைத்தார். அவரைப் பொறுத்தவரை மகளின் பிரிவு தன் தன்மானத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாக அவரை வாட்டியது.

"நீ கவலப்படாதக்கா, எத்தனை வீடு ஏறி இறங்கி வேலை செய்யிறவ, நான் அறியாததா ? கரெக்டா முடிச்சுக்குடுக்கறேன்". தேவி தந்த நோட்டுக்களை  கமலா தம் சுருக்குப் பையில் பத்திரமாகத் திணித்துக்கொண்டாள்.

தொடர்ந்த நாட்களில் கமலாவின் வீட்டில் திருவிழாதான், தேவியின் பணத்தில் அவரறியாமல் ஆடு, கோழி என வாங்கி  பிள்ளைகளுக்கு சமைத்துப்போட்டு தானும் வயிறுமுட்ட உண்டு மகிழ்ந்தாள்.  
பின்னர் தேவியை அழைத்துக் கொண்டு அங்கே இங்கே என ஓரிரண்டு சாமியாடிகளிடம் கொன்டுபோய் நிறுத்தினாள்,

ஏதேதோ பூஜைகள் நடக்க தேவியின் மிஞ்சிய பணத்தை வைத்து சாமியாடும் நாடகத்தை நடத்தினாள் கமலா. பணம் போதவில்லை என்று மேலும் மேலும் கேட்க , பணமில்லாது தவித்த தேவிக்கு அவர் வீட்டில் யாருமே பண‌ம் தர முன்வரவில்லை, மாறாக அனைவரும் அவர் செயலை கண்டித்து தடுத்தனர்.

தேவி தன் விசிறி மூக்குத்தி, எட்டுக்கல் தோடு , மோதிரம் யாவற்றையும் கமலாவின் கையில் கொடுத்து விற்று பண‌மாக்கிடச் செய்தார், கமலாவுக்கு நல்ல வேட்டை, அவர் கழுத்தில் எஞ்சியிருந்த ஒரே ஒரு இரட்டை வடச்சங்கிலியின் மேல் அவள் கவனம் சென்றது. அதைப் பறிக்கவும் நாள் பார்த்துக் காத்திருந்தாள். வேண்டுமென்றே உருப்படாத பொய்ச்சாமியார்களிடம் அழைத்துப்போய் சாமியாடும் நாடகங்களை சொற்பத் தொகைகளில் நிகழ்த்தினாள். தன் பிள்ளைகளின் வயிற்றுப் பசி போக்க பணக்கார தேவியை பயன்படுத்திக்கொன்டது அவளுக்குப் பாவமாகத்தெரியவில்லை.

நாட்கள் நகர நகர எதுவுமே நடக்கவில்லை என மீண்டும் தேவி புலம்ப, ரொம்ப யோசிப்பதாய் நடித்து தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி இருப்பதாகவும். அனைவரும் "தாத்தா" என அழைக்கும் அவர் ஓர் ஒட்டுக் குடிசையில் இறந்துபோன தன் மனைவியின் ஆத்மாவின் துணை கொன்டு   ஏவல், பில்லி சூனியங்கள் செய்வதாகவும், அவர் சொன்னது சொன்னபடி நடக்கும் ஆனால் செலவு ஜாஸ்தி என்றவாறே, தேவியின் கழுத்தில் அவள் கவனம் சென்றது.சங்கிலி கைமாறியது.

இதற்குமேல் தேவியிடம் கறப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை உண‌ர்ந்து, மந்திரவாதி முதியவரின் அனுமதிபெற்று அவர் குடிசைக்கு தேவியை அழைத்துச் சென்றாள் கமலா. அவரிடம் அவள் வியாரத்தந்திரம் எதுவும் பலிக்கவில்லை, முன்கூட்டியே வியாபாரம் பேச முனைந்தவளை "ஆளை அழைத்துவா அப்புறம் பேசலாம்" என கறாறாய் பேசி அனுப்பிவிட்டார் "தாத்தா"  என்ற‌ழைக்கப்படும் அந்த முதியவர். வேறுவழியில்லாமல் ஒரு நாள் மாலை தேவியை அங்கே அழைத்துச்சென்றாள் கமலா. கமலா சொற்படி தேவி யாழினியின் திருமண புகைப்படங்களிலிருந்து ஒன்றை தன்னுடன் எடுத்துக்கொன்டார்.

அமைதியான சீனர் குடியிருப்பில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தகரக்கூரை வேய்ந்த சிறிய பலகைவீடு. துப்புறவாக ஒரு சில பொருட்களுடன் அமைதியாகக் காட்சியளித்தது. இரண்டே அறைகள், ஒன்று முன்னறை, மற்றது சன்னல், கதவெல்லாம் திற‌ந்து விடப்பட்ட ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஒற்றைக்கட்டில், ஒரு சில பழைய பொருட்கள், வெளியிலிருந்தே கண்களால் அந்த அறையை மேய்ந்த தேவியிடம், "இந்த அறையில்தான் செத்துப்போன தாத்தாவுடைய மனைவியின் ஆவி இருக்குதாம்" அதுதான் அவர் மந்திரங்களுக்கு உதவி பண்ணுதாம்" எனக்காதில் கிசுகிசுத்தாள் கமலா. சிலிர்ப்புடன் ஒன்றுமில்லாத அறையை மீண்டுமொருமுறை பார்த்துக்கொன்டாள் தேவி.

ஆழ்கடல் நீலமும், வெளீர் வான் நீலமுமாய் கட்டமிட்ட கைலியை அணிந்து, வெள்ளை முழுக்கை சட்டையில் சிவந்து, உயர்ந்த, மெலிந்த வயோதிகர் அந்த தாத்தா. மூனு நாள் சவரம் செய்யப்படாத வெண்தாடி, இங்கே அங்கே என கொஞ்சமாய் மிஞ்சிய தலைமுடி, தாத்தாவைப் பார்ப்பதற்கு பயங்கரமாகவோ, பெரிய மந்திரவாதி போலவோ தென்படவேயில்லை, ஒரு சராசரி வயோதிக மனிதராய்த்தான் இருந்தார், ஆனால் அவர் முன் அமர்ந்து வாயைத் திறக்கும் முன்பே தேவி எண்ணி வந்தது யாவையும் அப்படியே அவர் சொல்லி, இதற்குத் தானேம்மா வந்தாய் எனக்கேட்க, தேவியுடன், கமலாவும் பயந்துபோனாள். கமலா தாத்தாவிடத்தில் தேவியின் கதை எதையும் ஏற்கனவே சொல்லியிருக்கவில்லை. அப்புற‌ம் எப்படி?, மனுக்ஷன் நடந்தது நடந்தபடி பிட்டு பிட்டு வைக்கிறாரே என கமலாவுக்கு பேரதிர்ச்சி. பயத்துடன் வாய் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.       

ஒருவழியாய் தன்னைத் தேற்றிக்கொன்டு கண்ணீருடன் தன் மகளை மீட்டுத் தரவேண்டி கோரிக்கை வைத்தார் தேவி. அதற்கு அந்த முதியவர் "செய்யலாம் ஆனால் ஆபத்து அதிகம், உயிர்ச்சேதமும் நேரலாம்" என்றார். உடனே என் மகள் எனக்கு வேண்டும் என்று மறுபடியும் கூறினார் தேவி, அதாவது அவர் மகள் மட்டும் !! புத்திசாலி மந்திரவாதி புரிந்துகொண்டார்.

"நல்லது அம்மா,  அந்தப் புகைப்படத்தைக்கொடு" அந்த வாலிபனைப் பிரிக்கும் ஏற்பாட்டை நான் செய்கிறேன், எண்ணி ஏழு நாளில் அந்த வாலிபன் உயிரிழப்பான், உன் மகள் வீடு திரும்புவாள்,  இறந்தவன் ஆன்மா அமைதி கொள்ளாது, அது தன் வாழ்வை அழித்தவர்களை பழிவாங்கத் தேடி அலையும். அப்பொழுது அதற்கு மேலும் பூசைகள் செய்து அந்த ஆன்மாவை அழிக்க‌ வேண்டும், மிகவும் ஆபத்தான் செயல் அது, அதற்கு அதிகம் செலவாகும்.

"இப்பொழுது தட்சிணையாய் 300 ரிங்கிட்டை வைத்துவிட்டுப் போ, அவன் இற‌ந்த‌ செய்தி அறிந்த‌தும், 1000 ரிங்கிட் எடுத்துக்கொன்டு வா," இல்லையென்றால் அந்த ஆவியை உன் குடும்பத்தின் மேல் திசைதிருப்பி விடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, உன் பாதுகாப்புக்கு இதை வைத்துக்கொள்" என ஓர் எலுமிச்சையை தாளில் சுற்றி தேவியின் கையில் கொடுத்தார் தாத்தா. "இதைக் கீழே விழாமல் பார்த்துக்கொள், விழுந்தால் இது பலனிழந்துவிடும்" என்றார்.

வீடு திரும்பி கனியை சாமி மேடையில் முருகன் படத்தின் காலடியில் வைத்துவிட்டுத் திரும்பிய தேவி, யாரோ எட்டி உதைத்தைப்போல் அந்த எழுமிச்சை சாமிமேடையிலிருந்து உருண்டு கீழே தம் காலடியில் விழுந்ததைக் கண்டு திகைத்தார்.

தாத்தா குறிப்பிட்டது போலவே மைக்கேலின் மரணம் நிகழ்ந்தது, தேவி தான் ஜெயித்துவிட்டதை பெருமையுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அனைவரும் வெகுண்டனர். அமைதியான ஆறுமுகம் ஆத்திரத்தில் தன் மனைவி தேவியை வெளுவெளுவென்று வெளுத்தெடுத்தார். யாழினி கண்ணீரும் கம்பலையுமாய் வீடு திரும்பினாள், நிறைமாத கர்ப்பம் வேறு. கமலாவின் கண‌வனுக்கு தகவல் எட்டியதும், யாழினியின் குடும்ப வாழ்வை சிதைத்தவர்கள் என்பது தெரிய வந்தால் யாழினியின் முரட்டு அண்ணன்கள் தன்னை உரித்தெடுக்கப்போகின்ற‌னர் என்பதை உண‌ர்ந்து இரவோடு இரவாக வாடகை வீட்டைக் காலி செய்து குடும்பத்துடன் ஊரைவிட்டே ஓடிப்போனான்.    

நிகழ்ந்ததை கண்ணீருடன் கூறி நிறுத்தினாள் கோமதி, "அதற்குப் பிறகு உன் அம்மாவை யாரும் மதிக்கவில்லை, அவர் பேச்சையும் கேட்கவில்லை, மறுபடியும் அந்த முதியவரை பார்க்கவேண்டும் என்று சொன்னதையும் ஏற்கவில்லை, உன் மனம் நோகக்கூடாது என்பதால் உன்னிடமிருந்து யாவற்றையும் மறைத்தோம்.  இப்போதோ கமலாவும் ஓடிப்போய்விட அந்தக் கிழவரை எங்கே போய்த் தேடுவது" ?
   
இந்தக் கதையைக் கேட்டதும் கல்லாய் சமைந்துவிட்டாள்  யாழினி, தன் தாயின் மடமையினால் அவள் கணவனை இழந்து, தந்தையை இழந்து இன்று தந்தை போலிருந்த தமையனையும் இழந்துவிட்டாள், இது தொடர்ந்தால் அடுத்தப் பலி யாரோ ? தன் தாயோ சித்தப்பிரமை பிடித்தமாதிரியே ஆகிவிட்டார். எல்லா உற‌வுகளும் விலகி ஓடிவிட அழகான அந்த வீடு இருள‌டைந்து சூனியமாகிப்போய்விட்டது.

யாழினி மீண்டும் பிலிப்பைன்சு நாட்டிற்கு மைக்கேலின் குடும்பத்தை தேடிச்சென்று அவர்களிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினாள், தன் மகனை அவர்களிடமே ஒப்படைப்பதாகவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றித் தரும்படியும் கண்ணீருடன் கெஞ்சினாள். அவளுக்காக அவர்கள் மனம் இரங்கினர், ஆவியை அழைத்துப் பேசும் முறையில்  மைக்கேலின் ஆன்மாவைச்  சாந்தப்படுத்த அவர்கள் ஒப்புக்கொன்டனர். நோயுற்ற மைக்கேலின் தாய், மகனைப் பிரிந்த தன் வேதனை யாழினிக்கும் வேண்டாம் எனக்கூறி அவள் மகனுடன் அவளை ஊருக்குத் திருப்பியனுப்பினார். யாழினியின் குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்கள் அத்துடன் முடிவடைந்தன.


யாழினி வேறு துணை நாடாமல் மைக்கேலின் நினைவுகளுடன் வாழ ஆரம்பித்தாள். தாதியாய் பணிபுரிந்துகொன்டு, எல்லோரும் புற‌க்கணித்த, சித்தம் கலங்கிய தன் தாயை பராமரித்துக்கொன்டு, தன் மகனை நல்ல வாலிபனாய் வளர்த்து வருகிறாள்  அந்த தேவதை.....  

@ "தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு