வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஏவல் (நிறைவு)

யாழினியின் கணவன் மைக்கேலின் மறைவுக்கு அவள் தாய் தேவி வைத்த ஏவல்தான் காரணம் எனவும் அவர் செய்த வினை இன்று அவர் குடும்பத்தையே பலி வாங்குகிறது எனவும் விவரித்தாள் யாழினியின் மூத்த அண்ணி கோமதி.

யாழினி வீட்டைவிட்டு வெளியேறி மைக்கேலை மணந்தது அவள் தாய் தேவிக்கு அறவே பிடிக்கவில்லை, ஆனால் யாழினியின் தந்தை, அவள் அக்காள்மார்கள், அண்ணியர்கள் யாவரும் அவள் திருமணத்தை ஆதரித்தனர்.

யாழினி தன் குடும்பம் இல்லாமலேயே மேல் நாட்டு முறைப்படி திருமணம் செய்து தானும் மைக்கேலும் ஜோடியாக எடுத்துக்கொண்ட திருமண‌ப் புகைப்படங்களை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். அந்தப் படங்களில் அவள் அழகைக் கண்டு அவள் குடும்பத்தினர் வியந்து மகிழ்ந்தனர், அவள் தாய் ஒருவரைத் தவிர, " ஆயிப் பார்த்த கல்யாணம், போயிப் பார்த்தா தெரியுமாம், போயிப் பார்த்த கல்யாண‌ம் அங்க நாலு நாளு தங்கிப் பார்த்தா புரியுமாம் " என‌ எள்ளலுடன் முகத்தை தோள் பட்டையில் இடித்து தமது வெறுப்பை உமிழ்ந்தார்.

உண்மையில் பெரும்பாலான வெளிநாட்டு ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்பது உண்மையே. எனினும் மைக்கேலின் நல்ல‌ நடைமுறை இயல்புகளும், யாழினியிடம் அவன் காட்டிய ஆழமான அன்பும், அவனின் ஆதாயம் மிகுந்த நிரந்தர தொழிலும் அவனை நம்பிக்கைக்கு உரியவனாக காட்டிடவே, யாழினியின் குடுமபத்தில் பெரும்பாலோர் அவனை நம்பி ஏற்றுக்கொன்டனர் ஆனால் தேவிக்கு மட்டும் இறுதிவரை அவன்மேல் நம்பிக்கையோ, நல்லெண்ண‌மோ ஏற்படவேயில்லை. அது அவன் செத்தாலும் பரவாயில்லை தன் மகள் வீடு திரும்பினாள் போதுமென்ற மனநிலைக்கு அவரை இட்டுச்சென்றது.

நாட்கள் ஆக‌ ஆக, தேவியால் இருப்புக் கொள்ள முடியவில்லை, தன் மகள் யாழினியை அந்த வாலிபனிடமிருந்து பிரித்தே ஆக வேண்டுமென்று அவர் மனம் கங்கணம் கட்டி ஆர்ப்ப‌ரித்தது. வீட்டிலுள்ள அனைவரிடமும், "என் மகளை என்கிட்டேயிருந்து பிரிச்சவன கொல்லாம விடமாட்டேன்" என புலம்ப ஆரம்பித்தார்.

மூப்படைந்த அந்தக் கிழவியின் கூற்றை யாருமே சட்டை செய்யவில்லை ஒருத்தியைத் தவிர, அது அவர் அண்டை வீட்டுக்காரி கமலா, கமலாவின் குடும்பம் ஏழ்மையானது, ஒழுங்காய் வேலைக்குப் போகாத கணவன், வத வதவென குழந்தைகள், நாலைந்து பண‌க்கார சீனர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வ‌ரும் சொற்ப சம்பளமே வாழ்க்கைக்கு ஆதாரம், தன்னைப்போலவே ஏழையாயிருந்து இன்று நல்ல வசதியிலிருக்கும் தேவி, நன்கு மஞ்சள் நீருற்றி மாலை அணிவித்து பலிகொடுக்கக் காத்திருக்கும் கொழுத்த ஆடாகக் கமலாவின் கண்களுக்கு தென்பட்டார், இவரைக் கொன்டு நாம் ஆதாயமடையலாம் என்பதை அறிந்து கொன்டாள்.

ஏற்கனவே யாழினியின் செய்கையால் நொந்துபோன தேவி தம்மை யாருமே சட்டை செய்யாததால் வாடியிருந்ததை பயன்படுத்தி அவரைத் தம் வீட்டிற்கு வரவழைத்துப் பேசினாள். தேவி கண்ணைக்கசக்கி மூக்கைச் சிந்தி புலம்பியதையெல்லாம் வெகு அக்கரையுடன் கேட்டு பரிதாபமான முகபாவங்கள் காட்டி, அவ்வப்போது அழுவதைப்போலவும் வராத கண்ணீரை  புற‌ங்கையால் தேய்த்து,  ரொம்பவும் கரிசனத்துடன் வரக்கோப்பியை தேவியின் கையில் திணித்து அவருக்காகப் பரிந்து பேசினாள்.

தேவியின் வருத்ததிற்கெல்லாம் ஒரு முடிவு இருக்கிறது எனவும், தேவி சம்மதித்தால் நாலு நல்ல சாமியாடி, மந்திரவாதிகளிடம் அழைத்துச்சென்று யாழினிக்கு "மனமாற்று" செய்து அவள் கணவனிடமிருந்து அவளைப் பிரித்து கொன்டுவந்துவிடலாம், ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என கமலா தன் காவிப்பற்கள் தெரிய சிரித்து, தலையைச் சொறிந்தாள் .

தேவியின் எண்ணங்களுக்கு கமலா போட்ட தூபம் வேலை செய்ய ஆரம்பித்தது. அதனால் பணத்தை அவர் பெரிதாகவே நினைக்கவில்லை, தன் டிரங்குப் பெட்டியில் வீட்டுச் செலவுகள் போக ஒளித்து வைத்திருந்த பணத்தில் சில 50 ரிங்கிட் தாட்களை கமலாவின் கையில் திணித்து, "அவன் சாகனும் எம்பொண்ணு வீடு திரும்பனும் " என தாய்மையை மறந்து ஆத்திரம் கண்ணை மறைக்க சூளுரைத்தார். அவரைப் பொறுத்தவரை மகளின் பிரிவு தன் தன்மானத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாக அவரை வாட்டியது.

"நீ கவலப்படாதக்கா, எத்தனை வீடு ஏறி இறங்கி வேலை செய்யிறவ, நான் அறியாததா ? கரெக்டா முடிச்சுக்குடுக்கறேன்". தேவி தந்த நோட்டுக்களை  கமலா தம் சுருக்குப் பையில் பத்திரமாகத் திணித்துக்கொண்டாள்.

தொடர்ந்த நாட்களில் கமலாவின் வீட்டில் திருவிழாதான், தேவியின் பணத்தில் அவரறியாமல் ஆடு, கோழி என வாங்கி  பிள்ளைகளுக்கு சமைத்துப்போட்டு தானும் வயிறுமுட்ட உண்டு மகிழ்ந்தாள்.  
பின்னர் தேவியை அழைத்துக் கொண்டு அங்கே இங்கே என ஓரிரண்டு சாமியாடிகளிடம் கொன்டுபோய் நிறுத்தினாள்,

ஏதேதோ பூஜைகள் நடக்க தேவியின் மிஞ்சிய பணத்தை வைத்து சாமியாடும் நாடகத்தை நடத்தினாள் கமலா. பணம் போதவில்லை என்று மேலும் மேலும் கேட்க , பணமில்லாது தவித்த தேவிக்கு அவர் வீட்டில் யாருமே பண‌ம் தர முன்வரவில்லை, மாறாக அனைவரும் அவர் செயலை கண்டித்து தடுத்தனர்.

தேவி தன் விசிறி மூக்குத்தி, எட்டுக்கல் தோடு , மோதிரம் யாவற்றையும் கமலாவின் கையில் கொடுத்து விற்று பண‌மாக்கிடச் செய்தார், கமலாவுக்கு நல்ல வேட்டை, அவர் கழுத்தில் எஞ்சியிருந்த ஒரே ஒரு இரட்டை வடச்சங்கிலியின் மேல் அவள் கவனம் சென்றது. அதைப் பறிக்கவும் நாள் பார்த்துக் காத்திருந்தாள். வேண்டுமென்றே உருப்படாத பொய்ச்சாமியார்களிடம் அழைத்துப்போய் சாமியாடும் நாடகங்களை சொற்பத் தொகைகளில் நிகழ்த்தினாள். தன் பிள்ளைகளின் வயிற்றுப் பசி போக்க பணக்கார தேவியை பயன்படுத்திக்கொன்டது அவளுக்குப் பாவமாகத்தெரியவில்லை.

நாட்கள் நகர நகர எதுவுமே நடக்கவில்லை என மீண்டும் தேவி புலம்ப, ரொம்ப யோசிப்பதாய் நடித்து தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி இருப்பதாகவும். அனைவரும் "தாத்தா" என அழைக்கும் அவர் ஓர் ஒட்டுக் குடிசையில் இறந்துபோன தன் மனைவியின் ஆத்மாவின் துணை கொன்டு   ஏவல், பில்லி சூனியங்கள் செய்வதாகவும், அவர் சொன்னது சொன்னபடி நடக்கும் ஆனால் செலவு ஜாஸ்தி என்றவாறே, தேவியின் கழுத்தில் அவள் கவனம் சென்றது.சங்கிலி கைமாறியது.

இதற்குமேல் தேவியிடம் கறப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை உண‌ர்ந்து, மந்திரவாதி முதியவரின் அனுமதிபெற்று அவர் குடிசைக்கு தேவியை அழைத்துச் சென்றாள் கமலா. அவரிடம் அவள் வியாரத்தந்திரம் எதுவும் பலிக்கவில்லை, முன்கூட்டியே வியாபாரம் பேச முனைந்தவளை "ஆளை அழைத்துவா அப்புறம் பேசலாம்" என கறாறாய் பேசி அனுப்பிவிட்டார் "தாத்தா"  என்ற‌ழைக்கப்படும் அந்த முதியவர். வேறுவழியில்லாமல் ஒரு நாள் மாலை தேவியை அங்கே அழைத்துச்சென்றாள் கமலா. கமலா சொற்படி தேவி யாழினியின் திருமண புகைப்படங்களிலிருந்து ஒன்றை தன்னுடன் எடுத்துக்கொன்டார்.

அமைதியான சீனர் குடியிருப்பில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தகரக்கூரை வேய்ந்த சிறிய பலகைவீடு. துப்புறவாக ஒரு சில பொருட்களுடன் அமைதியாகக் காட்சியளித்தது. இரண்டே அறைகள், ஒன்று முன்னறை, மற்றது சன்னல், கதவெல்லாம் திற‌ந்து விடப்பட்ட ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஒற்றைக்கட்டில், ஒரு சில பழைய பொருட்கள், வெளியிலிருந்தே கண்களால் அந்த அறையை மேய்ந்த தேவியிடம், "இந்த அறையில்தான் செத்துப்போன தாத்தாவுடைய மனைவியின் ஆவி இருக்குதாம்" அதுதான் அவர் மந்திரங்களுக்கு உதவி பண்ணுதாம்" எனக்காதில் கிசுகிசுத்தாள் கமலா. சிலிர்ப்புடன் ஒன்றுமில்லாத அறையை மீண்டுமொருமுறை பார்த்துக்கொன்டாள் தேவி.

ஆழ்கடல் நீலமும், வெளீர் வான் நீலமுமாய் கட்டமிட்ட கைலியை அணிந்து, வெள்ளை முழுக்கை சட்டையில் சிவந்து, உயர்ந்த, மெலிந்த வயோதிகர் அந்த தாத்தா. மூனு நாள் சவரம் செய்யப்படாத வெண்தாடி, இங்கே அங்கே என கொஞ்சமாய் மிஞ்சிய தலைமுடி, தாத்தாவைப் பார்ப்பதற்கு பயங்கரமாகவோ, பெரிய மந்திரவாதி போலவோ தென்படவேயில்லை, ஒரு சராசரி வயோதிக மனிதராய்த்தான் இருந்தார், ஆனால் அவர் முன் அமர்ந்து வாயைத் திறக்கும் முன்பே தேவி எண்ணி வந்தது யாவையும் அப்படியே அவர் சொல்லி, இதற்குத் தானேம்மா வந்தாய் எனக்கேட்க, தேவியுடன், கமலாவும் பயந்துபோனாள். கமலா தாத்தாவிடத்தில் தேவியின் கதை எதையும் ஏற்கனவே சொல்லியிருக்கவில்லை. அப்புற‌ம் எப்படி?, மனுக்ஷன் நடந்தது நடந்தபடி பிட்டு பிட்டு வைக்கிறாரே என கமலாவுக்கு பேரதிர்ச்சி. பயத்துடன் வாய் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.       

ஒருவழியாய் தன்னைத் தேற்றிக்கொன்டு கண்ணீருடன் தன் மகளை மீட்டுத் தரவேண்டி கோரிக்கை வைத்தார் தேவி. அதற்கு அந்த முதியவர் "செய்யலாம் ஆனால் ஆபத்து அதிகம், உயிர்ச்சேதமும் நேரலாம்" என்றார். உடனே என் மகள் எனக்கு வேண்டும் என்று மறுபடியும் கூறினார் தேவி, அதாவது அவர் மகள் மட்டும் !! புத்திசாலி மந்திரவாதி புரிந்துகொண்டார்.

"நல்லது அம்மா,  அந்தப் புகைப்படத்தைக்கொடு" அந்த வாலிபனைப் பிரிக்கும் ஏற்பாட்டை நான் செய்கிறேன், எண்ணி ஏழு நாளில் அந்த வாலிபன் உயிரிழப்பான், உன் மகள் வீடு திரும்புவாள்,  இறந்தவன் ஆன்மா அமைதி கொள்ளாது, அது தன் வாழ்வை அழித்தவர்களை பழிவாங்கத் தேடி அலையும். அப்பொழுது அதற்கு மேலும் பூசைகள் செய்து அந்த ஆன்மாவை அழிக்க‌ வேண்டும், மிகவும் ஆபத்தான் செயல் அது, அதற்கு அதிகம் செலவாகும்.

"இப்பொழுது தட்சிணையாய் 300 ரிங்கிட்டை வைத்துவிட்டுப் போ, அவன் இற‌ந்த‌ செய்தி அறிந்த‌தும், 1000 ரிங்கிட் எடுத்துக்கொன்டு வா," இல்லையென்றால் அந்த ஆவியை உன் குடும்பத்தின் மேல் திசைதிருப்பி விடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, உன் பாதுகாப்புக்கு இதை வைத்துக்கொள்" என ஓர் எலுமிச்சையை தாளில் சுற்றி தேவியின் கையில் கொடுத்தார் தாத்தா. "இதைக் கீழே விழாமல் பார்த்துக்கொள், விழுந்தால் இது பலனிழந்துவிடும்" என்றார்.

வீடு திரும்பி கனியை சாமி மேடையில் முருகன் படத்தின் காலடியில் வைத்துவிட்டுத் திரும்பிய தேவி, யாரோ எட்டி உதைத்தைப்போல் அந்த எழுமிச்சை சாமிமேடையிலிருந்து உருண்டு கீழே தம் காலடியில் விழுந்ததைக் கண்டு திகைத்தார்.

தாத்தா குறிப்பிட்டது போலவே மைக்கேலின் மரணம் நிகழ்ந்தது, தேவி தான் ஜெயித்துவிட்டதை பெருமையுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அனைவரும் வெகுண்டனர். அமைதியான ஆறுமுகம் ஆத்திரத்தில் தன் மனைவி தேவியை வெளுவெளுவென்று வெளுத்தெடுத்தார். யாழினி கண்ணீரும் கம்பலையுமாய் வீடு திரும்பினாள், நிறைமாத கர்ப்பம் வேறு. கமலாவின் கண‌வனுக்கு தகவல் எட்டியதும், யாழினியின் குடும்ப வாழ்வை சிதைத்தவர்கள் என்பது தெரிய வந்தால் யாழினியின் முரட்டு அண்ணன்கள் தன்னை உரித்தெடுக்கப்போகின்ற‌னர் என்பதை உண‌ர்ந்து இரவோடு இரவாக வாடகை வீட்டைக் காலி செய்து குடும்பத்துடன் ஊரைவிட்டே ஓடிப்போனான்.    

நிகழ்ந்ததை கண்ணீருடன் கூறி நிறுத்தினாள் கோமதி, "அதற்குப் பிறகு உன் அம்மாவை யாரும் மதிக்கவில்லை, அவர் பேச்சையும் கேட்கவில்லை, மறுபடியும் அந்த முதியவரை பார்க்கவேண்டும் என்று சொன்னதையும் ஏற்கவில்லை, உன் மனம் நோகக்கூடாது என்பதால் உன்னிடமிருந்து யாவற்றையும் மறைத்தோம்.  இப்போதோ கமலாவும் ஓடிப்போய்விட அந்தக் கிழவரை எங்கே போய்த் தேடுவது" ?
   
இந்தக் கதையைக் கேட்டதும் கல்லாய் சமைந்துவிட்டாள்  யாழினி, தன் தாயின் மடமையினால் அவள் கணவனை இழந்து, தந்தையை இழந்து இன்று தந்தை போலிருந்த தமையனையும் இழந்துவிட்டாள், இது தொடர்ந்தால் அடுத்தப் பலி யாரோ ? தன் தாயோ சித்தப்பிரமை பிடித்தமாதிரியே ஆகிவிட்டார். எல்லா உற‌வுகளும் விலகி ஓடிவிட அழகான அந்த வீடு இருள‌டைந்து சூனியமாகிப்போய்விட்டது.

யாழினி மீண்டும் பிலிப்பைன்சு நாட்டிற்கு மைக்கேலின் குடும்பத்தை தேடிச்சென்று அவர்களிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினாள், தன் மகனை அவர்களிடமே ஒப்படைப்பதாகவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றித் தரும்படியும் கண்ணீருடன் கெஞ்சினாள். அவளுக்காக அவர்கள் மனம் இரங்கினர், ஆவியை அழைத்துப் பேசும் முறையில்  மைக்கேலின் ஆன்மாவைச்  சாந்தப்படுத்த அவர்கள் ஒப்புக்கொன்டனர். நோயுற்ற மைக்கேலின் தாய், மகனைப் பிரிந்த தன் வேதனை யாழினிக்கும் வேண்டாம் எனக்கூறி அவள் மகனுடன் அவளை ஊருக்குத் திருப்பியனுப்பினார். யாழினியின் குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்கள் அத்துடன் முடிவடைந்தன.


யாழினி வேறு துணை நாடாமல் மைக்கேலின் நினைவுகளுடன் வாழ ஆரம்பித்தாள். தாதியாய் பணிபுரிந்துகொன்டு, எல்லோரும் புற‌க்கணித்த, சித்தம் கலங்கிய தன் தாயை பராமரித்துக்கொன்டு, தன் மகனை நல்ல வாலிபனாய் வளர்த்து வருகிறாள்  அந்த தேவதை.....  

@ "தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு

வியாழன், 14 ஏப்ரல், 2016

ஏவல் - 3


யாழினியின் உலகம் இருண்டுபோனது, குடும்பத்தைவிட்டு விலகி மைக்கேலை கரம்பிடித்து ஓராண்டு கூட முழுமையடையவில்லை, அவள் தாய்மையடைந்த அந்த தருனத்தில் அவனுக்கு நிகழ்ந்த அந்தக் கோரமரணம் அவளை நிலைகுலையச்செய்தது.

மைக்கேலின் உடல் அவனுடைய நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது, யாழினியும் உடன் சென்றாள். மைக்கேலின் தாய் வேதனையில் வாய்விட்டு கதறி அழுதார். அவனுடைய ஒட்டுமொத்த குடும்பமே சொல்லொனா வேதனையில் ஆழ்ந்தது. அவனுடைய இறுதியாத்திரை முடிவடைந்த பின்னர் அவனுடைய அகால மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய அவன் ஆவியை அழைத்துப் பேசுவது என்ற முறையில் மீடியம் ஒருவரை ஏற்பாடு செய்தனர். கர்ப்பிணியான யாழினியை அவர்கள் அந்த நிகழ்வில் சேர்க்கவில்லை.

எல்லாம் முடிந்த பின்னர், யாழினியை அழைத்து , ஆவியை அழைத்துப் பேசியதில் மைக்கேலின் மரணத்திற்கு யாழினியின் குடும்பத்தினரே காரணம் என்று அறியவந்ததாக குறிப்பிட்டனர். இருக்கவே இருக்காது என அடித்துக்கூறி மறுத்துப்பேசினாள் யாழினி. அவள் கூற்றை யாருமே ஏற்கவில்லை. பாவம் செய்தவருக்கு தண்டனை காத்திருக்கிறது என்று மைக்கேலின் குடும்பத்தினர் உறுதியாய் கூறினார்கள்.

எல்லாம் முடிந்து அங்கிருந்து புறப்பட்டாள் யாழினி. நல்ல மனமும் மனித நேயமும் படைத்த மைக்கேலின் குடும்பத்தினர் அவள் செலவுக்கும், மகப்பேறுக்கும் என நிறைய பணத்தைத்தந்தனர். குழந்தை பிற‌ந்ததும் மைக்கேலின் சொத்து அவன் குழந்தையின் பெயரில் எழுதப்படும் என்றும் அவளிடம் தெரிவித்தனர்.

மைக்கேலின் தாய் யாழினியிடம், "உனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை, எனவே குழந்தை பிற‌ந்ததும் எங்களிடம் தந்துவிட்டு மறுமணம் செய்துகொள்" என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை யாழினி ஏற்கவில்லை. முடியாது என்று மறுத்துவிட்டாள்.

சிறிது காலமே ஒன்றாய் வாழ்ந்தாலும் மகராணியைப் போல் தன்னை மகிழ்வுடன் வாழவைத்த மைக்கேலின் நினைவுகளோடு தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்துவிடுவதே தன் வாழ்வுக்கும், காதலுக்கும் தான் செய்யும் மரியாதை என்பதை அவர்களிடம் தன‌க்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கிவிட்டு வேதனையுடன் தாய்நாட்டிற்குப் புறப்பட்டாள் யாழினி

ஊர் திரும்பிய யாழினியை உண்மை அறிந்த அவள் சகோதரி தேடிவந்து விசாரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். குடும்பத்துப் பெண்கள் அவள் நிலைகண்டு கலங்கி கண்ணீர்விட்டனர். அவள் அண்ணன்மார்களுக்கு அவள்பேரில் ஆத்திரம் இருந்தாலும் அவளுடைய துயரக் கோலத்தைக் கண்டு யாவருக்கும் வருத்தமே மேலோங்கியது.கண்ணீரும் கம்பலையுமாய் தன்முன் நின்ற மகளைக் கண்டு அவள் தந்தை வேதனையுடன் கண்ணீர் வடித்தார். அவள் தாய் தேவியோ பாராமுகமாய் "எல்லாம் என் பேச்சைக் கேட்காத்தால் வந்த வினை" என்று இடித்துரைத்தார்.

காலம் நகர, யாழினிக்கு ஓர் ஆண்குழந்தை தன் தந்தை மைக்கேலின் சாயலை உரித்துவைத்துப் பிற‌ந்தது. யாழினி குழந்தையை பராமரிப்பதில் கவனம் செலுத்தி ஓரளவு கவலையை மறந்தாள்.

ஓராண்டு கடந்தது, அன்று மைக்கேலின் நினைவு நாள். யாழினி தன் சமய முறைப்படி மைக்கேலுக்கு ஆலயத்தில் ஆன்மசாந்திப் பூசை செய்தாள்.

 அன்றைய பொழுது வழக்கம்போல் கழிந்தது. யாழினியின் குடும்பத்தினர் யாருவரும் தாங்கள் எதிர்கொள்ளப்போகும் துயரம்  என்னவென்பதை உண‌ராது நித்திரையில் ஆழ்ந்தனர். ம‌றுநாள் காலை எழுந்த அவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்த‌து.

யாழினியின் தந்தை மைக்கேல் உற‌க்கத்தில் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வழிய இறந்து கிடந்ததைப்போலவே இரத்தம் வழிய படுக்கையில் இறந்த கிடந்தார். ஒட்டுமொத்த குடும்பமும் ஆர்ப்பரித்து அலறி வருந்தியது.

யாழினியின் தந்தை ஆறுமுகம்  நல்ல மனிதர். யாரையும் "சீ" என்றும் ஒரு வார்த்தை சொல்லாதவர், தன் பிள்ளைகளிடத்தில் உயிரையே வைத்திருந்தவர். அவருக்கு நிகழ்ந்த துர்மரணம் அந்தக் குடும்பத்தையே உலுக்கிவிட்டது.

பலரும் பலவிதமாய் பேசினர். அதில் அவன் வீட்டில் உள்ளவர்களே மைக்கலுக்குச் செய்த பாவம் பழிவாங்குகிறது என அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டனர். யாழினியைக் கண்டதும் தங்கள் பேச்சை திசைதிருப்பி அவளிடத்தில் எதையும் சொல்லாது மறைத்தனர்.

எல்லாம் முடிந்தது. யாழினி தனக்கிருந்த ஒரு பெரிய துணையையும் இழந்துவிட்டாள், அதன் பின்னர் அவளுக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. அவள் தாயுடன் அவளால் ஒத்துப்போக முடியவில்லை.யார் தடுத்தும் கேளாமல் வேறுவீடு பார்த்து குடியேறினாள்.

யாழினி தன் கைவசமிருந்த பணத்தை முறையாய் வங்கியில் முதலீடு செய்தாள். கைவசம் நிறைய பணம் இருந்ததால், அவளுக்கு பெரிதாய் எந்தக் கக்ஷ்டமும் ஏற்படவில்லை. பொழுதைக்கழிக்க தன் பையனை குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் விட்டுவிட்டு ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் தாதியாய் வேலைக்குச் சேர்ந்தாள். பல மனிதர்களை சந்திப்பது, பேசுவது, உதவுவது என தன் வேலையில் முழுமையாய் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள்.

மைக்கேலின் மறு திவசம் வந்தது. இந்த முறை, அந்தக் குடுமப‌த்திற்கு ஆலமரமாய் அமைந்த யாழினியின் மூத்த அண்ணன், இரவில் நல்லபடி படுக்கைக்குச் சென்று விடியற்காலையில் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வழிய மைக்கேலைப்போலவே பிணமாக‌க்கிடந்தார். தாங்க முடியாத சோகம் குடும்பத்தைச் சூழ்ந்து கொன்டது.

அண்ணனை இழந்த அண்ணி ஆத்திரத்தில் வெகுண்டெழுந்தாள். தாங்க முடியாத சோகத்திலும், கோபத்திலும் அவள் அனைவர் முன்னிலையிலும் உண்மையைப் போட்டு உடைத்தாள், மைக்கேலின் மரணத்திற்கு யாழினியின் தாய்தான் காரணம் எனவும் அவர் மைக்கேலுக்கு வைத்த ஏவல்தான் இன்று அந்தக் குடும்பத்து ஆண்களைப் பழிவாங்குகிறது என்றும் ஆவேசத்துடன் புலம்பினாள்.

ஏற்கனவே கண‌வனை இழந்து இப்போது தலைமகனையும் இழந்துவிட்ட யாழினியின் தாயின் நிலையோ ஏற‌க்குறைய சித்தப்பிரமை பிடித்தைப் போலிருந்தது. தன் மருமகளின் குற்றச்சாட்டை அவர் மறுக்கவோ, பதில்பேசவோ இல்லை. அனைவரும் தாங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டனர்.

இவ்வளவும் அறிந்த யாழினி துடிதுடித்துப்போனாள், மைக்கேலுடன் மிகவும் மகிழ்வுடனும், வசதியாகவும் வாழவேண்டிய தன் வாழ்வை தன்தாய் இப்படிச் சீரழித்துவிட்டாரே என் ஆத்திரத்தில் வெகுண்டாள்.

உண்மையை மேலும் அறிந்துகொள்ள தன் மூத்த அண்ணியை நாடினாள், அவள் சொன்னத் தகவல்களைக் கேட்டு அள‌வில்லாத ஆதிர்ச்சியும் ஆத்திரமும் அவளை ஆக்ரமித்தது. இப்படியும் நடக்குமா இந்த உலகில்...?

அடுத்த பதிவில் நிறைவுறும்.....

@"தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு

 


சனி, 9 ஏப்ரல், 2016

ஏவல் (2)


யாழினியின் அழகும், குணமும் கண்டு அந்தக் கம்பெனியின் இளைய முதலாளி மைக்கேல் அவளிடம் மனதைப் பறிகொடுத்தான். அந்த பிலிபைன்சு நாட்டு வாலிபன் அவ்வள‌வாய் எடுப்பான தோற்றம் வாய்க்காவிடினும், மனதாலும், குணத்தாலும் மிகவும் சிறந்தவனாயிருந்தான் . இள‌ம் வயதிலேயே மிகவும் திறமையாக செயல்பட்டு பெரிய பணக்கார தொழிலதிபராய் திகழ்ந்தான்.

ஆரம்பத்தில் அவனிடம் பாராமுகம் காட்டிய யாழினி அவன் நல்லவன் என்பதை உண‌ர்ந்து அவனைக் காதலிக்கத் தொடங்கினாள். அவளை ஓர் இள‌வரசியைப் போன்று அன்புடன் கவனித்துக்கொண்டான் மைக்கேல்.

மைக்கேலுடன், யாழினி வாழ்க்கையின் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்தாள். சினேகிதிகளுடன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மைக்கலுடன் வெளியிடங்களுக்குச் சென்றாள். ஏழைகளை ஏங்க வைக்கும்  வசதியானவர்களின் வாழ்க்கை முறைகளையும், உணவு, கேளிக்கை, உல்லாசங்கள் யாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்தாள். மைக்கேல் தமது சினேகித வட்டத்தில்  யாழினியை தன் வருங்கால மனைவி என்றே யாவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

இனிமையாக காலம் நகர்ந்துகொண்டிருக்க யாழினியும், மைக்கலும் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். மைக்கேல் தரப்பிலிருந்து யாழினியை மணப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. அடுத்து யாழினியின் பெற்றோரை சந்தித்து அவர்களின் சம்மதத்தைப்பெற அவர்களின் வீட்டிற்கு வந்தான் மைக்கேல்.

ஓரளவு விவரம் புரிந்த யாழினியின் தந்தை, அவனை வரவேறு உபசரித்தார், ஆனால் இந்த விவரம் யாழினியின் தாய் தேவியின் கவனத்திற்கு வந்ததும் அவர் எரிமலையாய் கொதிதெழுந்தார். "அதெல்லாம் முடியாது", "என் பெண்னை நீ ஏமாற்றப்பார்க்கிறாய்", "உனக்கு என் பெண்ணை தரமுடியாது, என் உறவினர் குடும்பத்தில் தான் அவளைக் கட்டி வைப்பேன்" என தனக்குத் தெரிந்த அரைகுறை மலாயில் திட்டித்தீர்த்து, விரட்டி அடித்தார்.

"அங்கிள்", "ஆண்ட்டி" என அன்புடன் விளித்து, பரிசுபொருட்களுடன் பெண்கேட்டு வந்தவன் தலை குனிந்து வெளியே சென்றான். யாழினி அழுது புலம்பி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாள். அப்பொழுதும் அவள் தாய் மனமிரங்கவில்லை.

ஒருவழியாய் அவரை அடக்கிவிட்டு அவள் தந்தை தன் மகளிடத்தில் கனிவாய் பேசி , இறுதியில் ஓர் உடன்படிக்கை செய்தார், அதன்படி மைக்கேல் குடும்பத்தை யாழினியுடன் தாமும் பிலிப்பைன்சுக்கு சென்று காணவேண்டும், தமக்கு திருப்தியளித்த பின்னரே திருமணத்திற்கு தாம் ஒப்புதல் தர இயலும் என்பதையும் தெளிவுபடுத்தினார். யாழினியும், மைக்கேலும் சம்மதித்தனர்.

யாழினியின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் யாழினியின் தந்தை கூறிய யாவற்றுக்கும் தலையாட்டினான் மைக்கேல். தன் சொந்த செலவில் யாழினியையும், அவர் தந்தையையும்  தம் குடும்பத்தைச் சந்திக்க பிலிப்பைன்சுக்கு அழைத்துச் சென்றான். தேவி ஆனமட்டும் அவர்களைத் தடுத்துப் பார்த்து தோற்றுப்போனார்.

பிலிப்பைன்சில் ஆறுமுகத்திற்கு ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருந்தன. மைக்கேலின் குடும்பம் அங்கே ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான மேல்தட்டு குடும்பம். அவர்களின் பண்ணை வீடு பழைய காலத்து அரண்மனையென மரத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது, அருகருகே மிகப்பெரிய ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன, வீடு நிறைய வேலையாட்கள்.

இவ்வளவும் வாய்த்த மைக்கேலின் குடும்பம் ஆறுமுகத்தையும், யாழினியையும் இராஜ மரியாதையுடன் வரவேற்று உபசரித்தது. மைக்கேலின் தாய் புன்னகையுடன் தம் வருங்கால மருமகளை வரவேற்று ஒரு வைர மோதிரத்தை பரிசளித்து உபசரித்தார்.

மைக்கேல் அந்தப் பெரிய குடும்பத்தின் கடைசி வாரிசு, அந்தக் குடும்பம் மொத்தமும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது. அவனுக்காகவே யாழினிக்கும் அவள் தந்தைக்கும் இராஜ உபசாரங்கள் நடந்தன. ஆறுமுகம் அகமகிழ்ந்து போனார். கனவிலும் கிட்டாத ராஜபோக வாழ்க்கை தம் மகளுக்குக் கிட்டியிருக்கிற‌து என்பதை உண‌ர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார். மொழிப்பிரச்சனையையும் தாண்டி , வெற்றியுடன் திருமணப் பேச்சை முடித்து  மூவரும் ஊர் திரும்பினர்.

யாழினியின் தாய் வெறுப்புடன் அவர்களை எதிர்கொண்டார், தமக்கென அவர்கள் கொன்டுவந்த பரிசை வீசி எறிந்தார். இந்தத் திருமண‌ம் நடந்தால் உயிரை விட்டுவிடுவேன் என குறுக்கே விழுந்து தடுத்தார். ஆறுமுகம் எவ்வளவு சொல்லியும் கேளாமல் தேவியின் மனம் பாறையாய் இறுகிப்போனது.

ஆரம்ப காலத்தில் ஏழ்மை நிலையிலிருந்த தம்மை உதாசீனம் செய்த தம்முடைய பணக்கார உற‌வினர் குடும்பத்தில் சம்பந்தம் வைத்து அவர்களுக்கீடாய் தாம் சம நிலை பெறவேண்டும் எனும் வைராக்கியம் அவர் மனதில்  நெடு நாட்களாய் வீற்றிருந்தது. தம் எண்ணம் ஈடேற எந்த எல்லைக்கும் போக அவர் மனம் தயாராய் இருந்தது. அதனாலேயே இத்தனை பிரச்சனைகளையும் அவர் ஏற்படுத்தினார்.

தாயின் உறுதியான மனநிலை உண‌ர்ந்த யாழினி ஒருநாள்  யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி மைக்கேலை கரம்பற்றினாள். நன்கு செலவு செய்து மிகவும் அழகான கவுன் அணிவித்து, தேவதை போல அலங்காரம் செய்யப்பட்ட யாழினியை தம் உற்றார், நண்பர்கள் மத்தியில் மைக்கேல் மணமுடித்தான்.

ஓரிரு மாதங்கள் சென்றன. யாழினி மைக்கேலின் குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றுகொன்டிருந்த்து. யாழினி கருவுற்றாள்.

அந்த சமயத்தில்தான் யாருமே எதிர்பாராத அந்தத் திருப்பம் ஏற்பட்டது.

பரிபூரண ஆரோக்கியமாயிருந்த மைக்கேல் உருவம் இளைத்து, வெளிறிப்போன தோற்றத்துடன் நோயாளியாய் காட்சியளித்தான். அவனுக்கு என்ன நோய் என்பதை எந்த மருத்துவராலும் கண்டுபிடித்து குண‌ப்படுத்த இயலவில்லை. அவர்களின் இனிமையான இல்லற  வாழ்க்கை மாறியது. அடிக்கடி தனிமையில் அமர்ந்து தனியே பேசினான். கலங்கி கண்ணீர் வடித்தான். ஏனென்று விசாரித்த யாழினியிடம், " நான் இற‌ந்து போகப் போகிறேன்" எனப் புலம்பினான். உண்மை நிலை உண‌ர முடியாமல் தவித்தாள் யாழினி.

இப்படியே சில நாட்கள் நகர்ந்த நிலையில், ஒரு நாள் இரவில் நல்லபடி படுத்தவன், மறு நாள் காலை வாயிலும், மூக்கிலும் இரத்தம் வழிய‌ படுக்கையில் பிண‌மாய் கிடந்தான்......

தொடரும்

@"தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு

        


 திங்கள், 4 ஏப்ரல், 2016

ஏவல்
மந்திரம் மாயம் எல்லாம் போலி, ஏமாற்று வித்தைகள், பணம் சுரண்டும் வழி என்று பலர் கூறுவதைக் கேட்டிருப்போம், சில ஏமாற்றுக்காரர்கள் இல்லாத பொய்களைக் கூறி பணம் பறிப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் உண்மையிலேயே மாய மந்திரங்கள், ஏவல், பில்லி சூனியங்கள் போன்றவை சக்தி உள்ளவையா. அவற்றால் மனித வாழ்வை மாற்ற‌ இயலுமா , இயலாதா என்பதை கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்து  தாங்களே முடிவு செய்யுங்கள்.

ஆறுமுகம், தேவி தம்பதியருக்கு எட்டு பிள்ளைகள், மூன்று ஆண், ஐந்து பெண்கள். இவர்கள் இருவரும் தோட்டத்தில் இரப்பர் மரம் சீவுபவர்கள்.  மிகவும் ஏழ்மையான குடும்பம். அன்றாட உணவுக்கே சிரமம், இதில் ஆறுமுகம் கொஞ்சம் குடிப்பழக்கமும், சூதாடும் குணமும் கொண்டவர்.

அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உனவு அளிக்கவும் வழியின்றி வாடினர். அருகாமையிலுள்ள காலைச் சந்தைக்கு நேரம் தாழ்த்தி செல்வார் ஆறுமுகம். சந்தை முடிந்த பின்னர் அங்கே சிதறிக்கிடக்கும் அழுகிய, தூக்கி எறியப்பட்ட காய்கறிகளை தேடிப் பொறுக்கி வீட்டிற்கு கொன்டுவருவார். தேவி விற‌கு அடுப்பில் பெரிய பானை வைத்து பருப்பைக் கொட்டி, பொறுக்கி வந்த காய்கறிகளில் நல்ல பகுதிகளை வெட்டி சுத்தம் செய்து சாம்பார் தயார் செய்து தனலில் கொதிக்கவிடுவார், ஒற்றை அடுப்பில் அது கொதித்துக் கொன்டேயிருக்க சோறு மட்டும் சமைத்து, அந்தக் கறியையே இரண்டு மூன்று வாரங்களுக்கு சூடுகாட்டி, சூடுகாட்டி உபயோகித்து வந்தனர்.    

இத்தகைய வறுமையின் கொடுமை தாங்காமல் மூத்த குழந்தைகளை அரைகுறை படிப்புடன் தாமாகவே படிப்பை நிறுத்தி வேலைக்கு கிள‌ம்பினர். பிள்ளைகள் நன்கு உழைத்து குடும்பத்தை மேம்படுத்தினர். அவர்கள் குடும்பம் வளமை நிலைக்குத் திரும்பியது.

வாலிப வயதை அடைந்த பிள்ளைக‌ள் தங்கள் பெற்றோரை வேலையை விட்டு நிறுத்தி வீட்டோடு வைத்து அவர்களின் சகலத் தேவைகளையும் கவனித்துக்கொன்டனர்.

மூத்த மகன் பொறுப்புடன் பெற்றோருக்கு பக்கத்துத் தாமானில் பெரிய வீடொன்றை வாங்கி அனைவரையும் அதில் குடியேற்றினான். தன் தங்கைகள் இருவருக்கு அவர்கள் விரும்பிய வாலிபர்களை மணமுடித்து வைத்தான். தான் அழகான பெண்ணொருத்தியை மண‌முடித்துக்கொண்டான். தன் மனைவியுடன் ஜோகூர் சென்று அங்கேயே வேலை செய்து வாழ ஆரம்பித்தான்.

அண்ணனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவன் தம்பியரும் நன்கு உழைத்துச் சம்பாதித்து, தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணைவியரையும் தேடிக் கொண்டனர். அவர்களின் திருமணத்தை ஆறுமுகம் தேவி தம்பதியர் விமரிசையாக நடத்தி மகிழ்ந்தனர். பெற்றோரை மறக்காமல் அவர்கள் செலவுக்கு அனைவரும் பணம் தந்தனர்.

ஆறுமுகம் தேவி தம்பதியருக்கு பெருமை பிடிபடவில்லை. பணக்காரர்களுக்கு மத்தியில் நல்வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்கள் வீடு மிகவும் அழகாக அமைந்திருந்தது. இளஞ்சிவப்பு வர்ணம் தீட்டி, வீடு நிறைய ஆடம்பர பொருட்களை நிரப்பி அழகாய் வைத்திருந்தனர். நாளும் நல்ல உணவு வகைகள், புதிய துணிமணிகள், தங்க ஆபரணங்கள் என மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.


அவர்களின் எட்டுப் பிள்ளைக‌ளில் கடைசிப்பெண் யாழினி மட்டும் படித்துக்கொண்டிருந்தாள். அவள் குடும்பத்தில் உள்ள யாவருக்கும் செல்லப்பெண். குள்ளமாய், ஒல்லியாய், அழகிய சிறிய உருவத்துடன், மாநிறமாய், அழகான கண்களுடன் வளைய வந்தாள் யாழினி. அவளை நன்கு படிக்க வைத்து ஆசிரியையாக்கிவிட வேன்டும் என கங்கணம் கட்டிக்கொன்டு ஒட்டு மொத்த குடும்பமே அதற்காக பாடுபட்டது.

யாழினி நன்றாகவே படித்தாள். ஆனால் அவளுக்கு எஸ்.பி.எம் தேர்வில் எதிர்பார்த்த விதத்தில் நல்ல தேர்ச்சி அமையவில்லை. மிகவும் சோர்ந்துபோனாள் யாழினி, இதற்கு மேல் படிக்கப்போவதில்லை என முடிவுகட்டினாள், ஆனால் அவள் பெற்றோரும், உடன் பிறந்தோரும் வற்புறுத்தி அவளைத் தனியார் பள்ளியில் சேர்த்தனர். ப‌டிவம் ஆறு முடித்தாள். அதிலும் நல்ல தேர்ச்சி அடைய முடியவில்லை. வேறு வழியில்லாமல் படிப்பைவிட்டு வீட்டில் இருந்தாள்.

கொஞ்ச நாளில் வீட்டிலிருப்பது போரடிப்பதாகக் கூறி வீட்டிலுள்ளோர் தடுத்தும் கேளாமல் வேலை தேட ஆரம்பித்தாள். அவள் விரும்பியபடி ஒரு சின்ன நிறுவனத்தில் அவளுக்கு குமாஸ்தா வேலை கிடைத்தது. யாழினி மிகவும் மகிழ்வுடன் வேலை செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்பட்டது.

அவள் பணிபுரிந்த நிறுவனம் பிலிப்பைன் நாட்டுக்கார சகோதரர்கள் இருவருக்குச் சொந்தமானது. இந்நாட்டு உயர்ரக கோழிகளை உற்பத்தி செய்து தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து நன்கு சம்பாதித்தனர். அண்ணன் வயது முதிர்ந்தவர், தம்பி இளவயதினன். ஆள் ஒல்லியாய், உயரமாய் கொஞ்சம் கருப்பாய், கரைத்து வெட்டிய முடியுடன் மலாய் வாலிபனைப் போல் காட்சியளித்தான். அவன் கவனம் யாழினி மேல் விழுந்தது.

தொடரும்.....

@"தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு