யாழினியின் உலகம் இருண்டுபோனது, குடும்பத்தைவிட்டு விலகி மைக்கேலை கரம்பிடித்து ஓராண்டு கூட முழுமையடையவில்லை, அவள் தாய்மையடைந்த அந்த தருனத்தில் அவனுக்கு நிகழ்ந்த அந்தக் கோரமரணம் அவளை நிலைகுலையச்செய்தது.
மைக்கேலின் உடல் அவனுடைய நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது, யாழினியும் உடன் சென்றாள். மைக்கேலின் தாய் வேதனையில் வாய்விட்டு கதறி அழுதார். அவனுடைய ஒட்டுமொத்த குடும்பமே சொல்லொனா வேதனையில் ஆழ்ந்தது. அவனுடைய இறுதியாத்திரை முடிவடைந்த பின்னர் அவனுடைய அகால மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய அவன் ஆவியை அழைத்துப் பேசுவது என்ற முறையில் மீடியம் ஒருவரை ஏற்பாடு செய்தனர். கர்ப்பிணியான யாழினியை அவர்கள் அந்த நிகழ்வில் சேர்க்கவில்லை.
எல்லாம் முடிந்து அங்கிருந்து புறப்பட்டாள் யாழினி. நல்ல மனமும் மனித நேயமும் படைத்த மைக்கேலின் குடும்பத்தினர் அவள் செலவுக்கும், மகப்பேறுக்கும் என நிறைய பணத்தைத்தந்தனர். குழந்தை பிறந்ததும் மைக்கேலின் சொத்து அவன் குழந்தையின் பெயரில் எழுதப்படும் என்றும் அவளிடம் தெரிவித்தனர்.
மைக்கேலின் தாய் யாழினியிடம், "உனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை, எனவே குழந்தை பிறந்ததும் எங்களிடம் தந்துவிட்டு மறுமணம் செய்துகொள்" என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை யாழினி ஏற்கவில்லை. முடியாது என்று மறுத்துவிட்டாள்.
சிறிது காலமே ஒன்றாய் வாழ்ந்தாலும் மகராணியைப் போல் தன்னை மகிழ்வுடன் வாழவைத்த மைக்கேலின் நினைவுகளோடு தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்துவிடுவதே தன் வாழ்வுக்கும், காதலுக்கும் தான் செய்யும் மரியாதை என்பதை அவர்களிடம் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கிவிட்டு வேதனையுடன் தாய்நாட்டிற்குப் புறப்பட்டாள் யாழினி
ஊர் திரும்பிய யாழினியை உண்மை அறிந்த அவள் சகோதரி தேடிவந்து விசாரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். குடும்பத்துப் பெண்கள் அவள் நிலைகண்டு கலங்கி கண்ணீர்விட்டனர். அவள் அண்ணன்மார்களுக்கு அவள்பேரில் ஆத்திரம் இருந்தாலும் அவளுடைய துயரக் கோலத்தைக் கண்டு யாவருக்கும் வருத்தமே மேலோங்கியது.கண்ணீரும் கம்பலையுமாய் தன்முன் நின்ற மகளைக் கண்டு அவள் தந்தை வேதனையுடன் கண்ணீர் வடித்தார். அவள் தாய் தேவியோ பாராமுகமாய் "எல்லாம் என் பேச்சைக் கேட்காத்தால் வந்த வினை" என்று இடித்துரைத்தார்.
காலம் நகர, யாழினிக்கு ஓர் ஆண்குழந்தை தன் தந்தை மைக்கேலின் சாயலை உரித்துவைத்துப் பிறந்தது. யாழினி குழந்தையை பராமரிப்பதில் கவனம் செலுத்தி ஓரளவு கவலையை மறந்தாள்.
ஓராண்டு கடந்தது, அன்று மைக்கேலின் நினைவு நாள். யாழினி தன் சமய முறைப்படி மைக்கேலுக்கு ஆலயத்தில் ஆன்மசாந்திப் பூசை செய்தாள்.
அன்றைய பொழுது வழக்கம்போல் கழிந்தது. யாழினியின் குடும்பத்தினர் யாருவரும் தாங்கள் எதிர்கொள்ளப்போகும் துயரம் என்னவென்பதை உணராது நித்திரையில் ஆழ்ந்தனர். மறுநாள் காலை எழுந்த அவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
யாழினியின் தந்தை மைக்கேல் உறக்கத்தில் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வழிய இறந்து கிடந்ததைப்போலவே இரத்தம் வழிய படுக்கையில் இறந்த கிடந்தார். ஒட்டுமொத்த குடும்பமும் ஆர்ப்பரித்து அலறி வருந்தியது.
யாழினியின் தந்தை ஆறுமுகம் நல்ல மனிதர். யாரையும் "சீ" என்றும் ஒரு வார்த்தை சொல்லாதவர், தன் பிள்ளைகளிடத்தில் உயிரையே வைத்திருந்தவர். அவருக்கு நிகழ்ந்த துர்மரணம் அந்தக் குடும்பத்தையே உலுக்கிவிட்டது.
பலரும் பலவிதமாய் பேசினர். அதில் அவன் வீட்டில் உள்ளவர்களே மைக்கலுக்குச் செய்த பாவம் பழிவாங்குகிறது என அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டனர். யாழினியைக் கண்டதும் தங்கள் பேச்சை திசைதிருப்பி அவளிடத்தில் எதையும் சொல்லாது மறைத்தனர்.
எல்லாம் முடிந்தது. யாழினி தனக்கிருந்த ஒரு பெரிய துணையையும் இழந்துவிட்டாள், அதன் பின்னர் அவளுக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. அவள் தாயுடன் அவளால் ஒத்துப்போக முடியவில்லை.யார் தடுத்தும் கேளாமல் வேறுவீடு பார்த்து குடியேறினாள்.
யாழினி தன் கைவசமிருந்த பணத்தை முறையாய் வங்கியில் முதலீடு செய்தாள். கைவசம் நிறைய பணம் இருந்ததால், அவளுக்கு பெரிதாய் எந்தக் கக்ஷ்டமும் ஏற்படவில்லை. பொழுதைக்கழிக்க தன் பையனை குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் விட்டுவிட்டு ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் தாதியாய் வேலைக்குச் சேர்ந்தாள். பல மனிதர்களை சந்திப்பது, பேசுவது, உதவுவது என தன் வேலையில் முழுமையாய் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள்.
அண்ணனை இழந்த அண்ணி ஆத்திரத்தில் வெகுண்டெழுந்தாள். தாங்க முடியாத சோகத்திலும், கோபத்திலும் அவள் அனைவர் முன்னிலையிலும் உண்மையைப் போட்டு உடைத்தாள், மைக்கேலின் மரணத்திற்கு யாழினியின் தாய்தான் காரணம் எனவும் அவர் மைக்கேலுக்கு வைத்த ஏவல்தான் இன்று அந்தக் குடும்பத்து ஆண்களைப் பழிவாங்குகிறது என்றும் ஆவேசத்துடன் புலம்பினாள்.
ஏற்கனவே கணவனை இழந்து இப்போது தலைமகனையும் இழந்துவிட்ட யாழினியின் தாயின் நிலையோ ஏறக்குறைய சித்தப்பிரமை பிடித்தைப் போலிருந்தது. தன் மருமகளின் குற்றச்சாட்டை அவர் மறுக்கவோ, பதில்பேசவோ இல்லை. அனைவரும் தாங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டனர்.
இவ்வளவும் அறிந்த யாழினி துடிதுடித்துப்போனாள், மைக்கேலுடன் மிகவும் மகிழ்வுடனும், வசதியாகவும் வாழவேண்டிய தன் வாழ்வை தன்தாய் இப்படிச் சீரழித்துவிட்டாரே என் ஆத்திரத்தில் வெகுண்டாள்.
உண்மையை மேலும் அறிந்துகொள்ள தன் மூத்த அண்ணியை நாடினாள், அவள் சொன்னத் தகவல்களைக் கேட்டு அளவில்லாத ஆதிர்ச்சியும் ஆத்திரமும் அவளை ஆக்ரமித்தது. இப்படியும் நடக்குமா இந்த உலகில்...?
அடுத்த பதிவில் நிறைவுறும்.....
@"தென்றல்" வார இதழில் வெளிவந்த படைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக