திங்கள், 29 ஜூன், 2015

தேன் சாகரத்தில் சிறுதேனீயின் அநுபவம் மூன்று - ‍ பார்த்திபன் கனவுகல்கி எனும் மாபெரும் எழுத்து ஆளுமையின் அற்புதப்படைப்பாக வெளிவந்த "சிவகாமியின் சபதம்" புதினத்தைத்தொடர்ந்து அமைவதாக வடிக்கப்பட்டிருக்கிறது பார்த்திபன் கனவு எனும் இப்புதினம்

இப்புதினம் ஒரு சோழமன்னனின் சுதந்திர வேட்கையும் அதற்காக அம்மன்னனின் இளவல் நிகழ்த்தும் போராட்டங்களாகவும் தாங்கி மலர்ந்து வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை, அரசியல், சாணக்கியம், சதித்திட்டங்கள், நரபலி என எண்ணற்ற பாதைகளில் பயணம் செய்கிறது.

1944-1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வீரமும், கலையும் சிங்கார நர்த்தனமிடும் சிந்தையைக்கவர்ந்த "சிவகாமியின் சபதம்" புதினம் வெளிவருவதற்கு முன்பாகவே 1941-1943 ஆண்டுகளில் கல்கி இதழில் தொடராக வெளிவந்த புதினம் "பார்த்திபன் கனவு". இப்புதினம் இதே தலைப்பில் நடிகர் ஜெமினிகணேசன் நடித்து 1960 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியீடு கண்டுள்ளது.

ஏற்கனவே பேரழ‌கியும், அற்புத ஆடலரசியுமாகிய சிவகாமி தேவியின் சபதத்தைத் தமிழ்ப்பூங்காவில் நாம் கண்டோம். இங்கே . இனி அரசர் பார்த்திபனின் அந்தராத்மாவில் இடங்கொன்டு சுதந்திரப் சோழப் பேரரசுக்கு வித்தாக அமைந்திட்ட அந்த "பார்த்திபன் கனவு" தனைக் காண்போம் வாரீர்.

இப்புதினம் மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு முதல் பாகம் (10 அத்தியாயங்கள்), இரண்டாம் பாகம் (27 அத்தியாயங்கள்) மற்றும் மூன்றாம் பாகம் (40 அத்தியாயங்கள்) என படைக்கப்பட்டுள்ளது.

இக்கதையின் கதாநாயகன் சோழ இளவரசன் விக்கிரமன். மேலும் முக்கிய கதாமாந்தர்களாக பல்லவப் பேரரசர் நரசிம்மவர்மன், சோழ அரசர் பார்த்திபன், அரசி அருள்மொழித்தேவி, அரச விசுவாசியான படகோட்டி பொன்னன், பொன்னன் மனைவி வள்ளி, விக்கிரமனின் சிற்றப்பனாகிய மாரப்ப பூபதி, பல்லவ இளவரசி குந்தவி, மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் ஆகியோருடன் மேலும் பலர் வலம்வருகின்றனர்.

கதைச்சுருக்கம் : சோழ அரசு, பல்லவ அரசுக்கு கப்பம் கட்டி வரும் காலம். அப்போதைய சோழ மன்னர் பார்த்திபனுக்கு மாபெரும் சுதந்திரச் சோழப் பேரரசை நிறுவும் கனவு சிந்தையை ஆக்ரமிக்கிறது. தமது கனவை சித்திரக்குகையில் ஓவியங்களாக வரைந்து யாருமறியாமல் பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சுதந்திரம் கோரி பல்லவப் பேரரசுடன் போர் புரிய ஆயத்தமாகிறார் மன்னர் பார்த்திபன். தாம் போருக்குப் புறப்படும் முன் தமது இளவலாகிய விக்கிரமனை அழைத்து சித்திரக்குகையிள் தாமே வரைந்த சித்திரங்களைக் காண்பித்து சுதந்திர சோழப் பேரரசை நிறுவும் தமது உள்ளக்கிடக்கையை இளவரசனிடம் வெளிப்படுத்தி தமது ஆசையை நிறைவேற்றும்படி அறிவுறுத்துகிறார்.

தமது துணைவியாகிய அரசி அருள்மொழித்தேவியிடம் ஒரு பெட்டகத்தைக்கொடுத்து அதில் சுதந்திரச் சோழ நாட்டை ஆண்ட தமது முன்னோர்கள் உபயோகித்த வாளையும், திருவள்ளுவர் கைவண்ணத்தில் உருப்பெற்ற திருக்குறளையும் விக்கிரமன் சுதந்திர மன்னனான பின்னர் அவனிடத்தில் சேர்ப்பிக்கும்படி அறிவித்துவிட்டு போருக்குச் சித்தமாகிறார்.

இதன் தொடர்ச்சியாக பார்த்திப மன்னன் ப‌ல்லவப்பேரரசுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தி  போருக்குத் தயாராகிறார். பார்த்திப மன்னர் போரில் தோல்வியைத்தழுவுகிறார்.  மாபெரும் வீரரான நரசிம்மவர்மனை எதிர்த்து போர் புரிந்து வீரமரணம் எய்துகிறார். உயிருக்குப் போராடும் கடைசி நொடிகளில் தன்னை நாடி வரும் ஒரு சிவனடியாரிடம் தமது இளவல் விக்கிரமனை சுதந்திர சோழ அரசின் ம‌ன்னனாக்க உதவும்படி சத்தியம் வாங்கிக்கொன்டு உயிரை விடுகிறார். அதன் தொடர்பில் சிவனடியார் அருள்மொழித்தேவிக்கும், இளவரசன் விக்கிரமனுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு அவர்களை வழி ந‌டத்துகிறார். எனினும் கோழையும் துன்மார்க்கனுமாகிய மாரப்ப பூபதி  சோழ அரசை கைப்பற்ற சதித்திட்டங்கள் இயற்றுகிறான்.

ஒரு கட்டத்தில் தமது சிற்றப்பன் மாரப்ப பூபதியின் துர்போதனையால், பல்லவ அரசுக்கு எதிராக சுதந்திர சோழ அரசை நிறுவும் அவசர‌முயற்சியில் ஈடுபட்டு விக்கிரமன் கைது செய்யப்படுகிறான். பல்லவ வீதியில் கைதியாக அழைத்து வரப்படும் விக்கிரமனைக் கண்டு இளவரசி குந்தவி அவனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் தந்தை நரசிம்ம பல்லவர் விக்கிரமனை விசாரித்து சென்பகத்தீவிற்கு நாடு கடத்துகிறார். கப்பலில் கொன்டு செல்லப்படும் முன் விக்கிரமனை நாடி குந்தவி ஓடி வருகிறாள். அங்கே சிவனடியாரும் காட்சி தந்து கையை உயர்த்தி விக்கிரமனை ஆசிர்வதித்துவிட்டு, தம்மை கண்டறிய தேடி வந்த  குந்தவியிடம் அகப்படாமல் மறைந்துவிடுகிறார்.

சிவனடியார் மகனைப் பிரிந்து துக்கத்தில் வாடும் அருள்மொழித்தேவியை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விக்கிரமன் , குந்தவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதில் ஈர்ப்பு கொன்டிருப்பதை அவர் அரசியிடம் தெரிவித்து தாயற்ற குந்தவியை ஏற்று அன்பு செலுத்தும்படி அறிவுறுத்துகிறார்.

பல்லவ மன்னரும், குந்தவியும், சிறுத்தொண்டர், அவர் துணைவியார் ஆகியோருடன் சோழ நாட்டிற்கு வருகின்றனர். குந்தவி அருள்மொழித் தேவியை சந்திக்கிறாள். இருப்பினும் இருவரும் மனம் விட்டுப் பழக இயல‌வில்லை. மகனை பிரிந்த வேதனையில் வாடும் அருள்மொழித்தேவி சிறுத்தொண்டர், அவர் துணைவியார் ஆகியோருடன் தல யாத்திரை மேற்கொள்ள புற‌ப்படுகிறார். வழியில் அவர் கடலில் மூழ்கி, கபாலிக தலைவனால் கடத்தப்பட்டுவிடுகிறார்.

நாடு கடத்தப்பட்ட விக்கிரமனை சென்பகத்தீவு மக்கள் அன்புடன் ஏற்று அத்தீவின் மன்னாக பிரகடனப்படுத்துகின்றனர். அத்தீவு அச்சமயம் அரச வாரிசுகளற்றுப் போயிருந்தது. சுத்ந்திர மன்னனான பின்னும் தன் தாயையும், தான் பல்லவ வீதியில் மனதைப் பறிகொடுத்த பெண்ணையும் எண்ணி மனதுள் மருகுகிறான் மன்னன் விக்கிரமன்.

நவரத்தின வியாபாரியாக வேடமணிந்து மீண்டும் நாடு திரும்புகிறான்.
வழியில் ஒற்றர் தலைவ‌ர் ஒருவரால் தம்மைத் தாக்க வந்த கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டு, அவரிடமிருந்த குதிரை ஒன்றை பெற்றுக்கொன்டு தாய் நாடு நோக்கி புறப்படுகிறான். வழியில் காட்டாற்று வெள்ளம் ஒன்றில் சிக்கிக் கொள்ள படகோட்டி பொன்னனால் காப்பாற்றப்படுகிறான். எனினும் கடும் சுரத்தால் பாதிக்கப்பட்டு அவ்வழி வந்த இளவரசி குந்தவி கோக்ஷ்டியினரால் காப்பாற்றப்படுகிறான்.

சுரத்திலிருந்து மீண்ட‌ விக்கிரமன் பொன்னன் வழி அவன் தாய் அருள்மொழி கபாலிகத் தலைவனால் கடத்தப்பட்டதையறிந்து அவரை மீட்க பொன்னனுடன் புற‌ப்படுகிறான். அவனை அடையாளம் கண்டுகொன்ட மாரப்பபூபதி அவனை கைது செய்து காளி தேவிக்கு பலி கொடுக்க கபாலிகர்களிடம் ஒப்படைக்க முயல்கிறான். இருந்தாலும் பொன்னன் தன் சாதுரியத்தினால் விக்கிரமனை காப்பாற்றிவிடுகிறான்.

இவ்வாறாக தேடல்களும் , பூசல்களும் தொடர, பல்வேறு போராட்டங்களுக்குப்பின் இறுதியாக கபாலிகத் தலைவனிடமிருந்து தப்பித்த அரசி அருள்மொழி தமது மகன் விக்கிரமனைச் சந்திக்கின்றார். அங்கிருந்த குள்ளன் கூறிய செய்தியின் வழி மன்னர் நரசிம்மவர்மரை பலி கொடுக்க கபாலிகத் தலைவன் பிடித்து வைத்திருக்கிறான் என்பதையறிந்து விக்கிரமன் நரசிம்மவர்மரைக் காப்பாற்றுகிறான். சதிகாரர்கள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுகின்றனர். சிறுத்தொண்டர் அங்கே வந்து அனைவருக்கும் உண்மையை விளக்கி நிலைமையைச் சரிசெய்கிறார்.

கபாலிகத்தலைவனின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. மன்னன் புலிகேசியின் தமையனும் , சிவகாமியின் சபதம் புதினத்தில் புத்தபிட்சு நாகநந்தியாக வந்து வில்லத்தனங்கள் புரியும் நீலகேசியே கபாலிகத்தலைவன் என்று அனைவரும் உணர்ந்துகொள்கின்ற‌னர். நாட்டின் நிம்மதியைச் சீர்குலைக்க. ஏற்படுத்தப்பட்ட நரபலிச் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.

மன்னரைக் காப்பாற்றியதால் இளவரசன் விக்கிரமன் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறான். சுதந்திர சோழ நாட்டின் மன்னனாக பிரகடனம் செய்யப்படும் விக்கிரமனுக்கு குந்தவி மாலையிடுகிறாள்.

தமது தந்தையின் கனவை நிறைவேற்றிய இள‌வரசன் விக்கிரமன் அவர் பாதுகாத்த சுதந்திர சோழ நாட்டு அரசனுக்குரிய பொக்கிக்ஷமாகிய வீரவாளையும், திருக்குறளையும்  தமது உடமையாக்கிக் கொள்கிறார்.

இத்தனை செயல்களுக்கும் ஆதரவாகவும், தூண்டுகோலாகவும் விளங்கிய அந்த சிவனடியார் யாரென்பதை இறுதியில் உணர்த்துகிறார் கல்கி. மாயத்திரை அகல, மர்ம முடிச்சுகள் அவிழ அவர்...
அவர்......    
.
.
.
.
.
.
.
..
...
....
யாரென்பதை அறிந்திராதவர்கள் இப்புதினத்தை வாசித்து அறிந்து கொள்ளவும்..... :)  தேடல் என்ற‌ ஒன்றுதான் வாழ்க்கை பயணத்திற்கு சுவை சேர்க்கும், தங்களின் வாசிப்புத் தேடல் தொடங்கட்டும், தொடரட்டும்...
 
புதன், 17 ஜூன், 2015

உங்க காலை வெட்டிரலாமா சார் ?


நடிகர் விஜயகாந்த் நடித்த "ரமணா" திரைப்படத்தில் ஒரு மருத்துவமனைக்காட்சி, இறந்து போன‌ ஏழை ஒருவரை தனியார் மருத்துவமனையில், உயிருக்குப் போராடுகிறார் எனக்கூறி மருத்துவமனையில் சேர்ப்பார் கேப்டன். அவரிடம் அந்த மனிதர் இறந்து போனதற்கான அரசாங்க அத்தாட்சி கைவசமிருக்கும். அதை அறியாத அந்த தனியார் மருத்துவமனையினர் நிகழ்த்தும் நாடகங்களைக் கண்டு இறந்தவரின் மனைவி மட்டுமல்ல நாமும் அதிர்ச்சியாகிவிடுவோம்.

இப்படியாக மக்களிடமிருந்து முடிந்த மட்டிலும் பணத்தைக் கறக்க தனியார் மருத்துமனைககள் நிகழ்த்தும் சாகசங்களை பக்கம் பக்கமாக எழுதலாம், பண‌த்திற்காக அவர்கள் பாமரர்களை படுத்தும்பாடு வார்த்தைகளில் வசப்படுவதில்லை. எப்படியிருந்தாலும் பல சமயங்களில் அஜாக்கிரதையின் உறைவிடமாய் திகழும் பொது மருத்துவமனைகளைவிட, உடனடி நிவாரண‌ம் தேடி மக்கள் அடைக்கலமாவது தனியார் மருத்துவமனைகளே.

இந்த தனியார் மருத்துவமனைகளின் புண்ணியத்தாலேயே நாட்டில் காப்புறுதி நிறுவனங்கள் கொழுத்துப்பெருக்கின்றன. மக்கள் காப்புறுதி, மெடிக்கல் கார்ட் என சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்கின்றனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவம் வெற்றியடையா பட்சத்தில் இதற்கு மேல் எங்களால் முடியாது நீங்கள் பொது மருத்துவமனைக்கு கொன்டு செல்லுங்கள் எனக் கூறிவிடுவர். தோற்றுப்போன தங்கள் சிகிச்சைக்கும்  கொஞ்சமும் வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல் மொத்த மருத்துவ செலவையும் வசூலித்துவிடுவர்.

உயிர் மிச்சமிருக்கும் நோயாளி மீண்டும் வேறொரு தனியார் மருத்துவமனையையோ அல்லது கையில் பசை தீர்ந்துவிட்டால் பொது மருத்துவமனையையோ நாடுவதுதான் வாடிக்கை.

அந்த மனிதருக்கு பிராயம் 60க்கு மேலிருக்கும், ஒரு விபத்தில் சிக்கி மனைவி மக்களால் அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பருத்த அஜானுபாகுவான தோற்றம் கொன்ட அவருக்கு கழுத்தில் விபத்து (hairline crack ) ஏற்பட்டிருந்தது. படுத்த படுக்கையாய் கழுத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் அவர் உடலில் நீர்பிரியாத நிலை ஏற்படவே, மருத்துவர்கள் அவருடைய ஒரு காலில் மூன்று நீளமான காயங்களை ஏற்படுத்தி நீர்வடியச் செய்தனர். தொடர்ந்த சிகிச்சையில் கழுத்து குண‌மாகியது, ஆனால் காலில் செயற்கையாய் ஏற்படுத்திய அந்தக் காயங்கள் மிகவும் பெரிதாகின. முழங்காலுக்குக் கீழ் முக்கால்வாசியை அகன்ற செந்நிற காயங்கள் ஆக்ரமித்து அவதிப்படுத்தத் துவங்கின. தனியார் மருத்துவமனை ஆன செலவைக் கணக்குப்போட்டு கறந்துகொன்டு மேற்கொன்டு சிகிச்சை அளிக்க முடியாது என‌ கைவிரித்துவிட்டது, கவலையுடன் குடும்பத்தினர் பொது மருத்துவமனையில் அந்த மனிதரை கொன்டு வந்து சேர்த்தனர்.

பொது மருத்துவமனையில் பகலில் அவருடைய மனைவி அவருக்கான உதவிகளையும் இரவில் அவர‌து புதல்வர் அவருடன் தங்கியும் அவரைக் கவனித்துக்கொன்டனர்.

நாட்கள் நகர்ந்தன, அவருடைய கால் புண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் சீனர். அவருக்கு அந்த மனிதரை அங்கிருந்து வெளியேற்றவும் அடிக்கடி தமது புண்களுக்காக அவர் மருத்துவமனை சிகிச்சையை நாடாமல் இருக்கவும் ஒரு வழி புலப்பட்டது. அந்த மனிதரின் காலை முழங்காலோடு வெட்டி எடுத்துவிடுவது என்பதுதான் அது..! அதை நிறைவேற்ற இன்னொரு இந்திய மருத்துவரை வைத்து கூட்டு ஆலோசனை நடத்தினார். ஒரு தமிழனின் கழுத்தை அறுக்க இன்னொரு தமிழனை உபயோகிக்கும் திற‌மை அந்த மருத்துவருக்கு தெரிந்திருக்கின்றது.

என்ன கொடுமை...!  அந்த பெண் மருத்துவரும் அதற்குச் சம்மதித்தார். நோயாளிகளின் அங்கங்களை துண்டிப்பது மருத்துவத்தில் ஒன்றும் புதிதல்ல ஆனால் அது முற்றிய நீரிழிவு நோயாளிகளுக்கும் முற்றாக உறுப்புகள் சிதைந்தவர்களுக்குமே பொருந்தும்.  காயங்களுக்கெல்லாமா காலை வெட்டி எடுப்பது ?

அவர்களின் திட்டப்படி அந்த பெண் மருத்துவர்,  நோயாளியின் பிள்ளைகள் யாரும் அருகில் இல்லாத சமயத்தில், சர்வ‌ சாதாரண‌மாய் கைலி அணிந்து வெற்றிலை போட்டுக்கொன்டு நோயாளிக்கு சிருஷைகள் செய்துகொன்டிருக்கும் அவர் மனைவியை அணுகி பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.

அந்த மருத்துவர் தன் முன் காட்சியளித்த அந்த 50 வயது பெண்மணியை படிக்கத்தெரியாத பாமரப் பெண்மணி, தமது ஏற்பாடுகளுக்கு எளிதில் இண‌ங்கிவிடுவார் என முடிவு செய்து கொன்டார், அவர் அறியாதது என்னவென்றால் அந்தப் பெண்மணி ஒரளவு படிக்கத்தெரிந்தவர் கூடவே நிறைய உலக அனுபவமும் சாதுரியமும் மிக்கவர் என்பது.   

டாக்டரம்மா அந்தப் பெண்மணியிடம் பேச ஆரம்பித்தார், தமிழில் "அம்மா என ஆரம்பித்து, உங்கள் கணவர் அளவுக்கு மீறி குடித்து உடலெல்லாம் விக்ஷமாகிப் போய்விட்டது, இவர் கால் புண்கள் என்றுமே ஆறப்போவதில்லை, அவர் உயிருக்கும் ஆபத்து வந்துவிட்டது எனவே அவர் முழங்காலை துண்டித்துவிட்டால் உயிர் காப்பாற்ற‌ப்பட்டு எல்லாச் சிரமங்களும் தீர்ந்துவிடும், அறுவைச்சிகிச்சைக்கு இந்தப் பாரத்தில் ஒப்புதல் கொடுங்கள் என லாவகமாக தமது வழிக்கு கொன்டுவரப்பார்த்தார். நீங்கள் சம்மதித்துவிட்டால் இன்று இரவே காலை துண்டித்துவிடலாம், அவசரப்பட்டார் டாக்டர், இதில் அவருக்கு என்ன ஆதாயமோ புரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது நோயாளியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல.

அவர் கூறியதை மிகவும் கவனமாகக் கேட்ட அந்தப் பெண்மணி ஒருகண‌ம் திகைத்தார். காரணம் அவர் கணவர் மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ வேறெந்த தீயப் பழக்கங்களும் இல்லாதவர். முந்தைய சிகிச்சைகளின் வழி திட‌காத்திரமான அவருக்கு நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற எந்த நோய் பிரச்சனைகளும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

உடனே அந்தப் பெண்மணி நான் என் குழந்தைகளுடன் பேசி முடிவு செய்கிறேன் எனக்கூறி முடிவாக ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சிலமுறை வற்புறுத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள் அந்த மருத்துவர்.

அதன் பின்னர் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு கண‌மும் அந்தப் பெண்மணிக்கு நெருப்பாய் தகிக்க ஆரம்பித்தது. உடனே கையிலிருந்த சில்லரைகளை கொன்டு பொதுத் தொலைபேசி வழி மகனுக்கு நடந்ததைத் தெரிவித்து உடனே புறப்பட்டு வரச் செய்தார். மகன் வழி மற்ற பிள்ளைகள் உற‌வினர்கள் என அனைவருக்கும் செய்தி தீயாய் பரவ, கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையின் ஆண்கள் பிரிவுக்கு முன் கூட்டம் கூடிவிட்டது.

அந்தக் குடும்பத்து ஆண் மக்கள் அந்த சீன டாக்டரை முற்றுகையிட்டு ஆரவாரமாக கேள்விக்கனைகள் தொடுக்க, நடுங்கிப்போன டாக்டர் நாக்குழறி தடுமாறியது அவன் செயலின் அநியாயத்தைச் சொல்லாமல் சொல்லியது. கடும் எச்சரிக்கையுடன் அந்த டாக்டரை விட்டுவிட்டு அவர்கள் நோயாளியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச்சென்ற‌னர். தொடர்ந்த சொந்த சிகிச்சைகளிலேயே முற்றாகத் தேறி இன்று காயத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ஆரோக்கியமாக வலம் வருகிறார் அந்தப்பெரியவர்.

காலை வெட்டியிருந்தால் கடைசிக்காலம் வரை அந்த மனிதர் எத்துனை அவதிகள் பட்டிருப்பார் ? மனைவியின் துரித நடவடிக்கையால் அன்று அவர் தப்பித்தார். சும்மாவா சொன்னார் தெய்வப்புலவர்...

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

என்று....

அழகான வாசமலர்களிடையே கொடிய பூநாகங்கள் குடியிருப்பதைப் போல நல்ல மருத்துவர்களிடையே இதுபோன்ற பிற‌ர் நலம் கருதா தீயகுணமிக்க மருத்துவர்களும் இருப்பது வேதனையே.....  


 

  


   

ஞாயிறு, 14 ஜூன், 2015

சொல்வேந்தர் சுகி.சிவம் கொடுத்த பதிலடி
"மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு" ‍என்று தன்னைப் பற்றி விவரிக்கும் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் உரைகளை செவிமடுத்தவர்கள் அவரின் கூற்றிலுள்ள உண்மையை நிச்சயம் மறுதலிக்கமுடியாது.


கலைமாமணி விருது பெற்ற சுகி.சிவம் அவர்கள்  நாவன்மை மிக்கவர். சுவாரசியமாக உரையாற்றக்கூடியவர், சிற‌ந்த எழுத்தாளர். ஆழமான விக்ஷயங்களையும் மிகவும் எளிதாக மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துச்சொல்லக்கூடிய திற‌மைசாலி.

புராதணம், புராணம், வேதம், ஆகமம், மதம், இறை, மனித வாழ்வு நெறிகள் குறித்த இவரது விரிவான  விள‌க்கங்கள் மனிதம் விலகி கணிணி வாழ்வுக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் இன்றைய மாந்தர்களுக்கு மிகமிக அவசியமானவையாகும். இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிப்பீடியாவில் உள்ள இந்தப் பதிவு உதவும் http://ta.wikipedia.org/wiki/சுகி._சிவம்

இவரின் உரைகளையும், நூல்களையும் ஓரளவு படித்ததுண்டு, இவரின் நேர்த்தியான கருத்துகளைக் கேட்டும், படித்தும் வியந்ததுண்டு. அவை யாவற்றையும் மீறி ஒரு சிரிப்பும் தோன்றுவதைத் தடுக்க முடிவதில்லை, அதற்குக்காரண‌ம் ஒன்று உண்டு....

சிங்கையில் வாழ்ந்த காலம், அப்போது சிங்கையின் பிரபலமான ஒரு அரங்கில் ஒரு நடிகரின் நூல் வெளியீட்டு விழாவும், சில பிரமுகர்களின் இலக்கியப் பேருரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொன்ட சிங்கையைச் சேர்ந்த‌ தோழி ஜைனாப் பேகமும் அந்த நிகழ்வில் கலந்து கொன்டோம்.


ப‌ட்டிமன்ற ஆசான் திரு.சாலமன் பாப்பையா அவர்களும், ஒரு பிரபல கவிஞரும், திரு.சுகி.சிவம் அவர்களுமே அந்த நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்த பேருரையாளர்கள், சாலமன் பாப்பையா ஐயா வந்து அருமையாக பேசிவிட்டு சென்றார்.

அவருக்குப்பின் புகழ்பெற்ற அந்தக் கவிஞர் மிடுக்காக எழுந்தார், ராஜ நடை நடந்து ஒலிப்பெருக்கியை நெருங்கினார். தனக்கேயுரிய பாணியில் பேசினார், பேசினார், பேசிக்கொன்டே இருந்தார். :)

நேரம் கடந்து கொன்டிருந்தது, கூட்டம் பரிதாபமாக விழித்துக்கொன்டிருந்தது. நாமும்தான் ! சுகி.சிவம் அவர்கள் அமைதியாக யாவற்றையும் பார்த்துக்கொன்டிருந்தார். கவிஞர் பேச வேண்டிய தலைப்பில் காதல் என்ற‌ வார்த்தை இருந்தாலும் இருந்தது, அது அவர் வாயில் சிக்கி படாதபாடு
ப‌ட்டுக்கொன்டு தவித்தது.  :) ஆனால் கவிஞரோ நகைச்சுவையாகப் பேசுகிறோம் என நினைத்துக்கொன்டு காமத்தை வாரி வாரி வார்த்தைகளில் வழியவிட்டுக்கொன்டிருந்தார்.

காதல் குறித்து புதிய கண்ணோட்டத்தில் பலப்பல‌ பொன்மொழிகளை உதிர்த்தார்...!? அதில் ஒரு வரி " நாற்பதிலும் ஒருமுறை காதல் வரும், சேலை தேடச் சொல்லும் ,ரசித்துப்பார்" எனும் தொனியில்....!  

கூட்டத்தினரை அவர் உரையால் படாத பாடு படுத்திவிட்டு அவர் பேருரையை! முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார், அதற்குள் நேரம் வெகுவாக கடந்துவிட்டிருந்தது. அடுத்துப் பேச சுகி சிவம் அவர்கள் ஒலிப்பெருக்கியை நெருங்கினார். அதற்குள் ஏற்கனவே கேட்ட பேருரையால் மெர்சலாகிப் போயிருந்த மக்களில் பலர் நாளைக்கு வேலை எனும் சாக்கோடு எழுந்து புறப்பட ஆரம்பித்தனர்.

சிகி.சிவம் சுற்று முற்றும் தமது பார்வையை ஓடவிட்டார். தமது ஆழமான கணீரென்ற குரலில் "ஒரு மனிதனுக்கு 20 வயதில் காதல் வரவில்லையென்றால் அவனுக்கு உடலில் பிரச்சனை, ஒரு மனிதனுக்கு நாற்பது வயதிலும் ஒரு காதல் வருகிறதென்றால் அவனுக்கு மனதில் பிரச்சனை" என்று போட்டார் பாருங்கள் ஒரு போடு !(நிச்சயமாக இது திருமணமானவர்களுக்குத்தான்)

அவ்வளவுதான் !  அதுவரை தூங்கி வழிந்த அரங்கமே சடாரென விழித்துக்கொன்டதுபோல் அப்படி ஒரு ஆரவாரமும்  கரவொலியும் அப்பொழுது அங்கே எழுந்தது, அவருக்கு முன் பேசிய கவிஞர் முகத்தில் ஈயாடவில்லை. வீடு திரும்ப எத்தனித்து எழுந்தவர்களும் அப்படியே அமர்ந்து மிகவும் சிறப்பாக அமைந்த அவர் உரையை முழுதாகச் செவிமடுத்த பின்னரே கலைந்து சென்றனர்.

இன்றும் அவரின் சாதுரியமும், சாமர்த்தியமும் மிளிரும் பேச்சுக்களை மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு எனினும். அன்று அவர் அந்தக் கவிஞ‌ருக்குக் கொடுத்த பதிலடி இருக்கிறதே, அது இன்றும் நினைவில் நின்று சிரிக்க வைக்கின்றது...! சொல்வேந்தர் சொல்வேந்தர்தான்....!

சுகி.சிவம் க்கான பட முடிவு
 


  பி.கு : கவிஞரின் பெயரை இங்கே குறிப்பிடாவிட்டாலும் பலர் அவர் யாரென்பதை யூகித்திருக்கக்கூடும். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பதால் எனக்கும் அவரைப்பிடிக்கும். அன்றைய அவரது உரையைத்தவிர :)


   
செவ்வாய், 2 ஜூன், 2015

டாக்டர் ஜேபி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி2/6/2015 செவ்வாய், ஜேபி என அனைவராலும் நட்புடன் அழைக்கப்பட்ட கடாரப் பேரறிஞர் டாக்டர்.எஸ்.ஜெயபாரதி அவர்கள் இன்று காலை தமது 74ம் அகவையில் இறைவனடி எய்தினார். இச்செய்தியை ஜேபி அவர்களின் புதல்வி பைரவி ஜேபியின் தமிழ், ஆங்கில முகநூல்கள் வ‌ழி தெரியப்படுத்தியிருந்தார்.

டாக்டர் ஜேபி சின்னமுத்து பிள்ளை அவர்களுக்கும் அழகுரெத்தினம் அம்மாளுக்கும் 1941 ஆம் ஆண்டு பிற‌ந்தார். இவர் தந்தையார் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும் அறிமுகமானவர் என அறியப்படுகிறது.

திருமதி சந்திராவை வாழ்க்கைத் துணைவியாகக் கொன்ட ஜேபி அவர்களுக்கு சுகானந்த பாரதி எனும் புதல்வரும் அழகுரெத்தினம் பைரவி எனும் புதல்வியும் உள்ளனர்.

மருத்துவத்துறையில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜேபி சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் இயக்குனராக பணியாற்றிவர். தமிழ் இலக்கியங்கள், தமிழினத்தின் பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொன்ட சிறந்த வரலாற்று ஆசிரியரும், தேர்ந்த பேச்சாளருமாவார்.

சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி என பெருமையுடன் அழைக்கப்பட்டவர் ஜேபி. தமிழ் இலக்கியங்கள், தமிழர்களின் தொன்மையான இனம், மதம், கலாச்சாரம், பாரம்பரியம் வானவியல் சாஸ்திரம் சார்ந்த அவரின் ஆய்வுகளும் அதன் முடிவுகளும்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் இவை குறித்த பல்வேறு கட்டுரைகளை மலேசியப் பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார். (ஆதாரம் : ஜேபி அவர்களின் பதிவுகள்)


பன்முகத்திறனாளர் எனவும் நடமாடும் பல்கலைக்கழகம் எனவும் வர்ணிக்கப்படும் கல்விமானாகிய ஜேபி அவர்கள் ஆழ்ந்த வாசிப்பாளருமாவார். இவரின் சேமிப்பில் பல்துறை சார்ந்த 5000 புத்தகங்கள் வரை வைத்திருந்தவர். அவற்றுள் மிகவும் அரிய புத்தகங்களும் அடங்கும்

DrJaya Barathiஇணையத்தளங்களில் ஜேபி அவர்களின் ஆளுமை மிகப்பெரிது. கீழ்க்காணும் வலைத்தளங்கள், மடலாடல் குழுக்கள் வழி 9000 வரை கலை, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், மதம், வேதம், ஆகமம் குறித்த தமது ஆய்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறார். கலை, இசை ஆகிய துறைகளிலும் அபார ஆர்வம் வாய்ந்தவர் ஜேபி.


இவர் பண்டைய மலாய் நாகரீகத்தின் ஆய்வுக்கும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் என அறியப்படுகிற‌து.  இதன்வழி உலகோர் அறிந்திரா மிக மிக நுட்பமான, பயன்வாய்ந்த தகவல்களையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார். மக்கள் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் மிகப்பெரிய கல்விக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஜேபி.

கீழ்க்காணும் அவருடைய பதிவுகள் அவர் உலகுக்கு விட்டுச்சென்ற கல்விப் பெட்டகங்களாகும்.

http://groups.yahoo.com/group/agathiyar/
http://www.treasurehouseofagathiyar.net/
http://www.visvacomplex.com/
http://www.skandaweb.com/
http://jaybeestrishul11.blogspot.com/
http://jaybeesmuseumtamil.blogspot.com/
http://jaybeetrident.blogspot.com/
http://jaybeemuseum-e.blogspot.com/
http://jaybeesnotebook.blogspot.com/
http://jaybeeskadaram.blogspot.com/
http://kadaaramweb.blogspot.com/
http://www.chandraweb.net

இவரைப்பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறையவே உள்ளன. சமயம் வாய்த்தால் இன்னும் நிறைய எழுதும் எண்ணம் உண்டு, ஒரு நல்ல நண்பராகவும் ஆசானாகவும் எனது முதல் மரியாதைக்கு உரியவர் டாக்டர் ஜேபி அவர்கள். ஒரு ஆசானின் நிலையிலிருந்து ஜேபி போதித்தது அதிகம். இவரிடம் ஒருங்கே பாராட்டும் திட்டும் பெற்றது எனது பாக்கியமே.

Jay Beeவாழும் காலத்தில் இந்த மாமேதை தாம் அடையவேண்டிய அங்கீகாரங்களை அடையவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விடயமே, அஞ்ஞான மாயையகற்றி, ஞானஒளி பரப்பிய அறிவொளி ஆசானாகிய இவர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. அன்னாரை இழந்து துயரும் குடும்பத்தினர்க்கும், அவரின் ஆயிரமாயிரம் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


ஆக்கம்
சிவனேசு,
2/6/2015

திங்கள், 1 ஜூன், 2015

மலைக்காட்டு மர்மம்

இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல நூறு வருடங்களைத் தாண்டிய பல பெரிய பெரிய இராட்சத மரங்கள். இருகைகளால் இணைத்துப் பிடிக்க முடியாத  அகன்ற தண்டுகளுடன், அதன் கிளைகளோ பாசிபடிந்து ஒட்டுன்னிக‌ளின் உறைவிடமாய் பூமியை தொட்டுக் கொன்டிருந்தன. அந்த மலைக்காட்டில் அமைந்திருந்தது இயற்கையின் எழில் நடனமாய் காணும் போதே குளிர்ச்சியூட்டும் ஓர் அழகான நீர்வீழ்ச்சி..!

உயர்ந்த மலையிலிருந்து பொங்கிப் பெருகி நுரைகள் பளீரிட பாலைப்போல மலையிலிருந்து குதிதோடி வந்து குளிரூட்டியது அந்த நீர்வீழ்ச்சி. பளிங்கு போன்று மிக மிக சுத்தமான நீர். அந்த நீர்வீழ்ச்சி அருகாமையிலிருந்த குடியிருப்பாளர்களுக்கு ஒரு குட்டி சொர்க்கத்தையே சிருக்ஷ்டி செய்து வைத்திருந்தது.

வாரக்கடைசி நாட்களில் மக்கள் கும்பல் கும்பலாகவும், ஜோடி ஜோடியாகவும் அங்குள்ள நீரோடும் நீர்நிலைகளில் குளித்து மகிழ்வர். அக்கம் பக்கத்திலும் பிரபலமாகி நாளடைவில் வளர்ந்து வரும் ஒரு சுற்றுலா தள‌மாகவும் புகழ்பெற்றது அந்த நீர்வீழ்ச்சி. அதன்பின்னர்...!

அந்த இடத்தைக் குறித்து பயங்கரமான வதந்திகள் கால் முளைத்து உலா வரத் தொடங்கின. மர்மமான முறையில் சில இற‌ப்புகள் அங்கே நிகழ்ந்தன‌. அந்த இடம் கறுப்புப் பிரதேசம் என அங்குள்ளவர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. பலருக்கு அங்கே ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள் கதை கதையாகச் சொல்லப்பட்டன.

மக்களின் உல்லாசத்தளமாக புகழ் பெற்ற அவ்விடம் அதற்குப் பின் ஆள் அரவமற்ற பகுதியானது. விவரம் அறியா மக்கள் மட்டுமே அங்கே சென்று பொழுது போக்குவதும், பளிங்கு போன்ற‌ நீர்நிலைகளில் குளித்து மகிழ்வதும் நிகழ்ந்த‌து. உள்ளூர்வாசிகளுக்கு அவ்விடம் என்றாலே பதற்றமும் பீதியும் பற்றிக்கொன்டது. பெரியவர்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளிடம் அந்த நீர்வீழ்ச்சிப் பக்கம் போகவே கூடாது என தடை உத்தரவு பிற‌ப்பித்து வைத்திருந்தனர்.

அன்று காலை இரு பள்ளி மாண‌வர்கள் அந்த மலைக்காட்டு  நீர்வீழ்ச்சிக்கு பெற்றோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வந்துகொன்டிருந்தனர் பள்ளிக்குப் போவதாய் பாவனை செய்துவிட்டு அந்த மலைக்காட்டுக்குள்  புகுந்திருந்தனர்.  அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் அபாயம் அறியாமல்..!

அவ்விருவரும் காட்டுக்குள் அலைந்து திரிந்துவிட்டு நன்பகலில் நீர்வீழ்ச்சியை அடைந்தனர். நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் கிடந்த பெரிய கற்பாறைகளில் கால் வைத்து நடந்து கொன்டே பிரவாகமெடுத்துப் பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியில் பார்வையை பதித்தனர்.

அங்கே அவர்களுக்கு முன்னே யாரோ ஒரு பெண் எதிர்ப்பக்கம் பார்த்துக்கொன்டு குளித்துக்கொன்டிருக்கும் காட்சியைக் கண்டனர்  ஒருவன் பயத்துடன் மற்றவனிடம் "டேய் அங்கே யாரோ குளிச்சிக்கிட்டு இருக்காங்கடா, அங்கே போக வேணாம், தெரிஞ்சவங்களா இருந்தா மாட்டிவிட்டிடுவாங்க என்றான் . தைரியசாலியான இன்னொருவனோ, பயப்படாதடா, இது தெரிஞ்சவங்கள்ளா இருக்காது, இங்கேதான் யாரும் வரமாட்டாங்களேடா, இது வெளியிடத்திலிருந்து வந்த யாரோவாக இருக்கும் வா கிட்டப்போயி பார்க்கலாம் என்று மற்றவனை தூண்டி அவனுடன் அழைத்துக்கொன்டு நீர்வீழ்ச்சியை நெருங்கினான்.

கதகதப்பான காலைச்சூரியனின் ஒளிக்கிரணங்களால் இள‌ஞ்சூடான நீரில் காடுகள் சூழ்ந்த மங்கிய ஒளியில் அந்த மங்கை தோள்பட்டை வரை நீரில் மூழ்கி குளித்துக் கொன்டிருந்தாள், நீரில் படர்ந்த கேசம் அவளின் சந்தண நிற முதுகுப்பகுதியை மறைத்திருந்தது.

அந்த மாண‌வர்கள் இருவருக்கும் 17 வயதிருக்கும். மீசையும் துளிர்த்திருந்தது. குளித்துக்கொன்டிருந்த பெண்ணிடம் வம்பு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அவர்கள் வந்ததை அறவே கவனியாதது போல் இவர்கள் பக்கம் திரும்பாமலேயே எதிர்பக்கம் பார்த்து  குளித்துக்கொன்டிருந்தாள்.

இருவரும் மெல்ல நடந்து போய் அந்தப் பெண்ணுக்கு பின்புற‌ம் இருந்த பெரிய கற்பாறையில் அமர்ந்து கொன்டனர். ஒருவன் சீட்டியடித்தான், மற்றொருவன் அப்பெண்ணிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். இவன் பேச்சுக்கு பதிலாக அவள் கலகலவென சிரிக்க அது காடு முழுதும் எதிரொலித்தது. இன்னும் கொஞ்சம் தைரியம் அடைந்து "கொஞ்சம் திரும்புங்கள் உங்களைப் பார்க்கனும்" என்றான் அவர்களில் ஒருவன்.

மறுகணம் அதுவரை பெண் என நினைத்திருந்த அந்த உருவம் சரேலென்று அவர்களை நோக்கி திரும்பியது. அந்தக் காடே சிலகண‌ங்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போனது!

உயிரையே உறைய வைக்கும் கோரக் காட்சியாய் எதிரே நின்ற அந்த உருவத்தின் உச்சந்தலையிலிருந்து உடல்முழுதும் கண்கள் ! இடைவெளியில்லாத ஆயிரமாயிரம் அடர்த்தியான கண்கள் ! கோபக்கனல் தெரிக்கும் ஆவேசம் நிறைந்த செக்கச் சிவந்த கண்கள் !  வன்மம் சுமந்து நெருப்பை உமிழும் மரண‌க்கால்வாய்களாய் அந்தக் கண்கள் அவர்களின் உயிரை ஊடுருவி நின்ற‌ன‌.அகலத் திற‌ந்து அவர்களை கொலை வெறியுடன் உறுத்துப் பார்த்தன. பார்த்துக்கொன்டேயிருந்தன‌  அந்த பேய்க்கண்கள் .

அந்தக் காட்சியைக்கண்ட இருவரும் அதிர்ச்சியில் மயக்கமடையும் நிலையை அடைந்தனர்  எனினும் தாக்குப்பிடித்துக்கொன்டு அவர்களில் ஒருவன் தப்பித்து ஓட எத்தனித்து அந்த நீருக்குள்ளேயே விழுந்தான். மற்றொருவனோ நண்பன் நீருக்குள் வீழ்ந்த‌தும் அறியாது தன்னை மறந்து காட்டுக்குள் ஓடத்துவங்கினான்.

எதிரிலிருந்த மரங்கள் செடி கொடிகளில் மோதி, விழுந்து எழுந்து கண்மண் தெரியாமல், திக்குத் திசை மறந்து அவன் ஓடினான், தன்னை கொடூரக்கண்கள் கொன்ட அந்த உருவம் இன்னும் தொடர்ந்து விரட்டுவதாய் மிரண்டு வெறிபிடித்தவன்போல் ஓடிக்கொன்டேயிருந்தான் .

அன்று மாலை அந்தப் பகுதியே கலவரத்திலாழ்ந்தது, காணாமல் போன மாண‌வர்களைப் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அவர்கள் அந்தக் காட்டுக்குள் போனதைக் கண்டதாக யாரோ ஒரு நபர் தெரிவித்துப் போனதையடுத்து அந்த இரு மாண‌வர்களின் குடும்பமும் பதறித்துடித்து கண்ணீரும் கம்பலையுமாக அந்தக் காட்டில் அவர்களைத்தேடி அலைந்தது.  ஊரும் உற‌வுகளும் அவர்களுடன் ஒன்றுகூடி அவர்களைத் தேடி அலைந்தன‌, மீட்புப்படையும் வந்தது.

அந்த மலைக்காடும் நீர்வீழ்ச்சியும் அங்குலம் அங்குலமாய் அலசப்பட்டது, இறுதியில் நீரில் மூழ்கி ஒருவனும், காட்டில் மூக்கிலும் வாயிலும் இரத்தம் ஒழுக இன்னொருவனும் பிண‌மாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இன்னுமொரு கறுப்புக்கறை சுமந்து அடுத்த பலிக்கு மெளனமாய் காத்திருந்தது அந்த மலைக்காடும் ஆயிரமாயிரம் கண்கள் கொன்ட அந்த நரக‌ நீர்வீழ்ச்சியும்....!


             


@ மன்னன் (செப்டம்பர் 2015) மாத இதழில் வெளியிடப்பட்ட படைப்பு