வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஏவல் (நிறைவு)

யாழினியின் கணவன் மைக்கேலின் மறைவுக்கு அவள் தாய் தேவி வைத்த ஏவல்தான் காரணம் எனவும் அவர் செய்த வினை இன்று அவர் குடும்பத்தையே பலி வாங்குகிறது எனவும் விவரித்தாள் யாழினியின் மூத்த அண்ணி கோமதி.

யாழினி வீட்டைவிட்டு வெளியேறி மைக்கேலை மணந்தது அவள் தாய் தேவிக்கு அறவே பிடிக்கவில்லை, ஆனால் யாழினியின் தந்தை, அவள் அக்காள்மார்கள், அண்ணியர்கள் யாவரும் அவள் திருமணத்தை ஆதரித்தனர்.

யாழினி தன் குடும்பம் இல்லாமலேயே மேல் நாட்டு முறைப்படி திருமணம் செய்து தானும் மைக்கேலும் ஜோடியாக எடுத்துக்கொண்ட திருமண‌ப் புகைப்படங்களை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். அந்தப் படங்களில் அவள் அழகைக் கண்டு அவள் குடும்பத்தினர் வியந்து மகிழ்ந்தனர், அவள் தாய் ஒருவரைத் தவிர, " ஆயிப் பார்த்த கல்யாணம், போயிப் பார்த்தா தெரியுமாம், போயிப் பார்த்த கல்யாண‌ம் அங்க நாலு நாளு தங்கிப் பார்த்தா புரியுமாம் " என‌ எள்ளலுடன் முகத்தை தோள் பட்டையில் இடித்து தமது வெறுப்பை உமிழ்ந்தார்.

உண்மையில் பெரும்பாலான வெளிநாட்டு ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்பது உண்மையே. எனினும் மைக்கேலின் நல்ல‌ நடைமுறை இயல்புகளும், யாழினியிடம் அவன் காட்டிய ஆழமான அன்பும், அவனின் ஆதாயம் மிகுந்த நிரந்தர தொழிலும் அவனை நம்பிக்கைக்கு உரியவனாக காட்டிடவே, யாழினியின் குடுமபத்தில் பெரும்பாலோர் அவனை நம்பி ஏற்றுக்கொன்டனர் ஆனால் தேவிக்கு மட்டும் இறுதிவரை அவன்மேல் நம்பிக்கையோ, நல்லெண்ண‌மோ ஏற்படவேயில்லை. அது அவன் செத்தாலும் பரவாயில்லை தன் மகள் வீடு திரும்பினாள் போதுமென்ற மனநிலைக்கு அவரை இட்டுச்சென்றது.

நாட்கள் ஆக‌ ஆக, தேவியால் இருப்புக் கொள்ள முடியவில்லை, தன் மகள் யாழினியை அந்த வாலிபனிடமிருந்து பிரித்தே ஆக வேண்டுமென்று அவர் மனம் கங்கணம் கட்டி ஆர்ப்ப‌ரித்தது. வீட்டிலுள்ள அனைவரிடமும், "என் மகளை என்கிட்டேயிருந்து பிரிச்சவன கொல்லாம விடமாட்டேன்" என புலம்ப ஆரம்பித்தார்.

மூப்படைந்த அந்தக் கிழவியின் கூற்றை யாருமே சட்டை செய்யவில்லை ஒருத்தியைத் தவிர, அது அவர் அண்டை வீட்டுக்காரி கமலா, கமலாவின் குடும்பம் ஏழ்மையானது, ஒழுங்காய் வேலைக்குப் போகாத கணவன், வத வதவென குழந்தைகள், நாலைந்து பண‌க்கார சீனர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வ‌ரும் சொற்ப சம்பளமே வாழ்க்கைக்கு ஆதாரம், தன்னைப்போலவே ஏழையாயிருந்து இன்று நல்ல வசதியிலிருக்கும் தேவி, நன்கு மஞ்சள் நீருற்றி மாலை அணிவித்து பலிகொடுக்கக் காத்திருக்கும் கொழுத்த ஆடாகக் கமலாவின் கண்களுக்கு தென்பட்டார், இவரைக் கொன்டு நாம் ஆதாயமடையலாம் என்பதை அறிந்து கொன்டாள்.

ஏற்கனவே யாழினியின் செய்கையால் நொந்துபோன தேவி தம்மை யாருமே சட்டை செய்யாததால் வாடியிருந்ததை பயன்படுத்தி அவரைத் தம் வீட்டிற்கு வரவழைத்துப் பேசினாள். தேவி கண்ணைக்கசக்கி மூக்கைச் சிந்தி புலம்பியதையெல்லாம் வெகு அக்கரையுடன் கேட்டு பரிதாபமான முகபாவங்கள் காட்டி, அவ்வப்போது அழுவதைப்போலவும் வராத கண்ணீரை  புற‌ங்கையால் தேய்த்து,  ரொம்பவும் கரிசனத்துடன் வரக்கோப்பியை தேவியின் கையில் திணித்து அவருக்காகப் பரிந்து பேசினாள்.

தேவியின் வருத்ததிற்கெல்லாம் ஒரு முடிவு இருக்கிறது எனவும், தேவி சம்மதித்தால் நாலு நல்ல சாமியாடி, மந்திரவாதிகளிடம் அழைத்துச்சென்று யாழினிக்கு "மனமாற்று" செய்து அவள் கணவனிடமிருந்து அவளைப் பிரித்து கொன்டுவந்துவிடலாம், ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என கமலா தன் காவிப்பற்கள் தெரிய சிரித்து, தலையைச் சொறிந்தாள் .

தேவியின் எண்ணங்களுக்கு கமலா போட்ட தூபம் வேலை செய்ய ஆரம்பித்தது. அதனால் பணத்தை அவர் பெரிதாகவே நினைக்கவில்லை, தன் டிரங்குப் பெட்டியில் வீட்டுச் செலவுகள் போக ஒளித்து வைத்திருந்த பணத்தில் சில 50 ரிங்கிட் தாட்களை கமலாவின் கையில் திணித்து, "அவன் சாகனும் எம்பொண்ணு வீடு திரும்பனும் " என தாய்மையை மறந்து ஆத்திரம் கண்ணை மறைக்க சூளுரைத்தார். அவரைப் பொறுத்தவரை மகளின் பிரிவு தன் தன்மானத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாக அவரை வாட்டியது.

"நீ கவலப்படாதக்கா, எத்தனை வீடு ஏறி இறங்கி வேலை செய்யிறவ, நான் அறியாததா ? கரெக்டா முடிச்சுக்குடுக்கறேன்". தேவி தந்த நோட்டுக்களை  கமலா தம் சுருக்குப் பையில் பத்திரமாகத் திணித்துக்கொண்டாள்.

தொடர்ந்த நாட்களில் கமலாவின் வீட்டில் திருவிழாதான், தேவியின் பணத்தில் அவரறியாமல் ஆடு, கோழி என வாங்கி  பிள்ளைகளுக்கு சமைத்துப்போட்டு தானும் வயிறுமுட்ட உண்டு மகிழ்ந்தாள்.  
பின்னர் தேவியை அழைத்துக் கொண்டு அங்கே இங்கே என ஓரிரண்டு சாமியாடிகளிடம் கொன்டுபோய் நிறுத்தினாள்,

ஏதேதோ பூஜைகள் நடக்க தேவியின் மிஞ்சிய பணத்தை வைத்து சாமியாடும் நாடகத்தை நடத்தினாள் கமலா. பணம் போதவில்லை என்று மேலும் மேலும் கேட்க , பணமில்லாது தவித்த தேவிக்கு அவர் வீட்டில் யாருமே பண‌ம் தர முன்வரவில்லை, மாறாக அனைவரும் அவர் செயலை கண்டித்து தடுத்தனர்.

தேவி தன் விசிறி மூக்குத்தி, எட்டுக்கல் தோடு , மோதிரம் யாவற்றையும் கமலாவின் கையில் கொடுத்து விற்று பண‌மாக்கிடச் செய்தார், கமலாவுக்கு நல்ல வேட்டை, அவர் கழுத்தில் எஞ்சியிருந்த ஒரே ஒரு இரட்டை வடச்சங்கிலியின் மேல் அவள் கவனம் சென்றது. அதைப் பறிக்கவும் நாள் பார்த்துக் காத்திருந்தாள். வேண்டுமென்றே உருப்படாத பொய்ச்சாமியார்களிடம் அழைத்துப்போய் சாமியாடும் நாடகங்களை சொற்பத் தொகைகளில் நிகழ்த்தினாள். தன் பிள்ளைகளின் வயிற்றுப் பசி போக்க பணக்கார தேவியை பயன்படுத்திக்கொன்டது அவளுக்குப் பாவமாகத்தெரியவில்லை.

நாட்கள் நகர நகர எதுவுமே நடக்கவில்லை என மீண்டும் தேவி புலம்ப, ரொம்ப யோசிப்பதாய் நடித்து தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி இருப்பதாகவும். அனைவரும் "தாத்தா" என அழைக்கும் அவர் ஓர் ஒட்டுக் குடிசையில் இறந்துபோன தன் மனைவியின் ஆத்மாவின் துணை கொன்டு   ஏவல், பில்லி சூனியங்கள் செய்வதாகவும், அவர் சொன்னது சொன்னபடி நடக்கும் ஆனால் செலவு ஜாஸ்தி என்றவாறே, தேவியின் கழுத்தில் அவள் கவனம் சென்றது.சங்கிலி கைமாறியது.

இதற்குமேல் தேவியிடம் கறப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை உண‌ர்ந்து, மந்திரவாதி முதியவரின் அனுமதிபெற்று அவர் குடிசைக்கு தேவியை அழைத்துச் சென்றாள் கமலா. அவரிடம் அவள் வியாரத்தந்திரம் எதுவும் பலிக்கவில்லை, முன்கூட்டியே வியாபாரம் பேச முனைந்தவளை "ஆளை அழைத்துவா அப்புறம் பேசலாம்" என கறாறாய் பேசி அனுப்பிவிட்டார் "தாத்தா"  என்ற‌ழைக்கப்படும் அந்த முதியவர். வேறுவழியில்லாமல் ஒரு நாள் மாலை தேவியை அங்கே அழைத்துச்சென்றாள் கமலா. கமலா சொற்படி தேவி யாழினியின் திருமண புகைப்படங்களிலிருந்து ஒன்றை தன்னுடன் எடுத்துக்கொன்டார்.

அமைதியான சீனர் குடியிருப்பில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தகரக்கூரை வேய்ந்த சிறிய பலகைவீடு. துப்புறவாக ஒரு சில பொருட்களுடன் அமைதியாகக் காட்சியளித்தது. இரண்டே அறைகள், ஒன்று முன்னறை, மற்றது சன்னல், கதவெல்லாம் திற‌ந்து விடப்பட்ட ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஒற்றைக்கட்டில், ஒரு சில பழைய பொருட்கள், வெளியிலிருந்தே கண்களால் அந்த அறையை மேய்ந்த தேவியிடம், "இந்த அறையில்தான் செத்துப்போன தாத்தாவுடைய மனைவியின் ஆவி இருக்குதாம்" அதுதான் அவர் மந்திரங்களுக்கு உதவி பண்ணுதாம்" எனக்காதில் கிசுகிசுத்தாள் கமலா. சிலிர்ப்புடன் ஒன்றுமில்லாத அறையை மீண்டுமொருமுறை பார்த்துக்கொன்டாள் தேவி.

ஆழ்கடல் நீலமும், வெளீர் வான் நீலமுமாய் கட்டமிட்ட கைலியை அணிந்து, வெள்ளை முழுக்கை சட்டையில் சிவந்து, உயர்ந்த, மெலிந்த வயோதிகர் அந்த தாத்தா. மூனு நாள் சவரம் செய்யப்படாத வெண்தாடி, இங்கே அங்கே என கொஞ்சமாய் மிஞ்சிய தலைமுடி, தாத்தாவைப் பார்ப்பதற்கு பயங்கரமாகவோ, பெரிய மந்திரவாதி போலவோ தென்படவேயில்லை, ஒரு சராசரி வயோதிக மனிதராய்த்தான் இருந்தார், ஆனால் அவர் முன் அமர்ந்து வாயைத் திறக்கும் முன்பே தேவி எண்ணி வந்தது யாவையும் அப்படியே அவர் சொல்லி, இதற்குத் தானேம்மா வந்தாய் எனக்கேட்க, தேவியுடன், கமலாவும் பயந்துபோனாள். கமலா தாத்தாவிடத்தில் தேவியின் கதை எதையும் ஏற்கனவே சொல்லியிருக்கவில்லை. அப்புற‌ம் எப்படி?, மனுக்ஷன் நடந்தது நடந்தபடி பிட்டு பிட்டு வைக்கிறாரே என கமலாவுக்கு பேரதிர்ச்சி. பயத்துடன் வாய் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.       

ஒருவழியாய் தன்னைத் தேற்றிக்கொன்டு கண்ணீருடன் தன் மகளை மீட்டுத் தரவேண்டி கோரிக்கை வைத்தார் தேவி. அதற்கு அந்த முதியவர் "செய்யலாம் ஆனால் ஆபத்து அதிகம், உயிர்ச்சேதமும் நேரலாம்" என்றார். உடனே என் மகள் எனக்கு வேண்டும் என்று மறுபடியும் கூறினார் தேவி, அதாவது அவர் மகள் மட்டும் !! புத்திசாலி மந்திரவாதி புரிந்துகொண்டார்.

"நல்லது அம்மா,  அந்தப் புகைப்படத்தைக்கொடு" அந்த வாலிபனைப் பிரிக்கும் ஏற்பாட்டை நான் செய்கிறேன், எண்ணி ஏழு நாளில் அந்த வாலிபன் உயிரிழப்பான், உன் மகள் வீடு திரும்புவாள்,  இறந்தவன் ஆன்மா அமைதி கொள்ளாது, அது தன் வாழ்வை அழித்தவர்களை பழிவாங்கத் தேடி அலையும். அப்பொழுது அதற்கு மேலும் பூசைகள் செய்து அந்த ஆன்மாவை அழிக்க‌ வேண்டும், மிகவும் ஆபத்தான் செயல் அது, அதற்கு அதிகம் செலவாகும்.

"இப்பொழுது தட்சிணையாய் 300 ரிங்கிட்டை வைத்துவிட்டுப் போ, அவன் இற‌ந்த‌ செய்தி அறிந்த‌தும், 1000 ரிங்கிட் எடுத்துக்கொன்டு வா," இல்லையென்றால் அந்த ஆவியை உன் குடும்பத்தின் மேல் திசைதிருப்பி விடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, உன் பாதுகாப்புக்கு இதை வைத்துக்கொள்" என ஓர் எலுமிச்சையை தாளில் சுற்றி தேவியின் கையில் கொடுத்தார் தாத்தா. "இதைக் கீழே விழாமல் பார்த்துக்கொள், விழுந்தால் இது பலனிழந்துவிடும்" என்றார்.

வீடு திரும்பி கனியை சாமி மேடையில் முருகன் படத்தின் காலடியில் வைத்துவிட்டுத் திரும்பிய தேவி, யாரோ எட்டி உதைத்தைப்போல் அந்த எழுமிச்சை சாமிமேடையிலிருந்து உருண்டு கீழே தம் காலடியில் விழுந்ததைக் கண்டு திகைத்தார்.

தாத்தா குறிப்பிட்டது போலவே மைக்கேலின் மரணம் நிகழ்ந்தது, தேவி தான் ஜெயித்துவிட்டதை பெருமையுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அனைவரும் வெகுண்டனர். அமைதியான ஆறுமுகம் ஆத்திரத்தில் தன் மனைவி தேவியை வெளுவெளுவென்று வெளுத்தெடுத்தார். யாழினி கண்ணீரும் கம்பலையுமாய் வீடு திரும்பினாள், நிறைமாத கர்ப்பம் வேறு. கமலாவின் கண‌வனுக்கு தகவல் எட்டியதும், யாழினியின் குடும்ப வாழ்வை சிதைத்தவர்கள் என்பது தெரிய வந்தால் யாழினியின் முரட்டு அண்ணன்கள் தன்னை உரித்தெடுக்கப்போகின்ற‌னர் என்பதை உண‌ர்ந்து இரவோடு இரவாக வாடகை வீட்டைக் காலி செய்து குடும்பத்துடன் ஊரைவிட்டே ஓடிப்போனான்.    

நிகழ்ந்ததை கண்ணீருடன் கூறி நிறுத்தினாள் கோமதி, "அதற்குப் பிறகு உன் அம்மாவை யாரும் மதிக்கவில்லை, அவர் பேச்சையும் கேட்கவில்லை, மறுபடியும் அந்த முதியவரை பார்க்கவேண்டும் என்று சொன்னதையும் ஏற்கவில்லை, உன் மனம் நோகக்கூடாது என்பதால் உன்னிடமிருந்து யாவற்றையும் மறைத்தோம்.  இப்போதோ கமலாவும் ஓடிப்போய்விட அந்தக் கிழவரை எங்கே போய்த் தேடுவது" ?
   
இந்தக் கதையைக் கேட்டதும் கல்லாய் சமைந்துவிட்டாள்  யாழினி, தன் தாயின் மடமையினால் அவள் கணவனை இழந்து, தந்தையை இழந்து இன்று தந்தை போலிருந்த தமையனையும் இழந்துவிட்டாள், இது தொடர்ந்தால் அடுத்தப் பலி யாரோ ? தன் தாயோ சித்தப்பிரமை பிடித்தமாதிரியே ஆகிவிட்டார். எல்லா உற‌வுகளும் விலகி ஓடிவிட அழகான அந்த வீடு இருள‌டைந்து சூனியமாகிப்போய்விட்டது.

யாழினி மீண்டும் பிலிப்பைன்சு நாட்டிற்கு மைக்கேலின் குடும்பத்தை தேடிச்சென்று அவர்களிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினாள், தன் மகனை அவர்களிடமே ஒப்படைப்பதாகவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றித் தரும்படியும் கண்ணீருடன் கெஞ்சினாள். அவளுக்காக அவர்கள் மனம் இரங்கினர், ஆவியை அழைத்துப் பேசும் முறையில்  மைக்கேலின் ஆன்மாவைச்  சாந்தப்படுத்த அவர்கள் ஒப்புக்கொன்டனர். நோயுற்ற மைக்கேலின் தாய், மகனைப் பிரிந்த தன் வேதனை யாழினிக்கும் வேண்டாம் எனக்கூறி அவள் மகனுடன் அவளை ஊருக்குத் திருப்பியனுப்பினார். யாழினியின் குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்கள் அத்துடன் முடிவடைந்தன.


யாழினி வேறு துணை நாடாமல் மைக்கேலின் நினைவுகளுடன் வாழ ஆரம்பித்தாள். தாதியாய் பணிபுரிந்துகொன்டு, எல்லோரும் புற‌க்கணித்த, சித்தம் கலங்கிய தன் தாயை பராமரித்துக்கொன்டு, தன் மகனை நல்ல வாலிபனாய் வளர்த்து வருகிறாள்  அந்த தேவதை.....  

@ "தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக