புதன், 6 டிசம்பர், 2017

உறவெனும் நெருஞ்சி முட்கள் - 3

மாமாவின் வீட்டில் அவர்களுடைய பதினோரு பிள்ளைகளோடு ஒருவனாக நானும் அண்டியிருந்தேன். பெரிய பிள்ளைகள் அவரவர் வாழ்வு அவரவர் கையில் என வாழ்ந்தாலும் என் வயதைவிட ஓரிரு வயது மூத்தவர்களும் என் வயதையொத்த நளினியும் அங்கே எனக்கு விளையாட்டு தோழர்களாயினர். நாங்கள் விளையாடினோம், சண்டையிட்டோம், அடித்துக்கொண்டோம், பின்பு சமாதானமாவோம், இப்படியாக தொடர்ந்தது வாழ்வு.மாமா கரிசனம் நிறைந்தவர். சொந்தப் பெயர் மறந்து "மளிகைக்காரர்" என்றே அங்கே அவர் பெயர் விளங்கியது. நிறைய  பேர் இன, மத பேதமின்றி அவருக்கு வாடிக்கையாளர்களாய் இருந்தனர்.
 மளிகை வியாபாரம் செய்பவராதலால் இரவு நெடு நேரம் கழித்து வீடு திரும்புவார்.

மாமா  வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லோருடனும் மகிழ்ச்சியாய் அரட்டை அடித்து கலகலப்பாய் இருப்பார். சொந்தப் பெயரில் அழைக்காமல் சின்னையா என என்னை அன்புடன் விளிப்பார், நிறைய பேசுவார், அந்தக்கால நடிகர்கள் மாதிரி நடித்துக்காட்டுவார். எம்ஜியார் மாதிரி இரண்டு விரல்களை மூக்கின் கீழ் வைத்து திருப்பி  மூக்கை உறிஞ்சி நடிப்பார், நம்பியார் மாதிரி கையைப் பிசைந்து, அசோகன் மாதிரி கண்களை உருட்டி எல்லோரும் நகைக்கும் வண்ணம் அபிநயிப்பார். அந்நாளைய சினிமா பாட்டுக்களையும் ரசிக்கும்படி பாடுவார்.

அத்தை, ரொம்பவும் வித்தியாசமான கேரக்டர், ஆள் பார்ப்பதற்கு நடிகை அம்பிகாவை நினைவுபடுத்தும் முகவெட்டு. நல்ல நிறம், பருத்து தொங்கும் கீழுதடு, கூரான மூக்கு போதாதற்கு அந்த நடிகையைப் போலவே நடு வகிடெடுத்து இருபுறமும் முடியை வெட்டி சுருட்டிவிட்டிருப்பார். பெரிய கண்களும், வரிசைப் பற்களும் அவரை அழகாகவே காட்டியது, ஆனால் பதினொரு குழந்தைகளை பெற்ற அவர் தன் தோற்றத்தை சரிவர கவனிக்காது, மிகவும் குண்டாய் காட்சியளித்தார்.

அங்காடி கடை தீனிகளில் அவருக்கு ஈர்ப்பு அதிகம். ஒரு நாள் தப்பினாலும் வீதியோரம் விற்கப்படும் பொறித்த கோழியை உண்ணாமல் அவர் பொழுது கழியாது. "ரெண்டு கால் இல்லாட்டா என்னால முடியாதுப்பா" என கோழியைக் கொறிக்கும் தன் குணத்திற்கு அவரே சர்ட்டிபிகேட்டும் கொடுத்துக்கொள்வார், மாமா  வீட்டுச்செலவுக்கு கொடுக்கும் பணத்தில் அவருக்கும் பிள்ளைகளுக்குமாய் நிறைய துரித உணவுகளும், அலங்கார, ஆடம்பரப் பொருட்களுமாய் வீட்டை நிரப்பி வைத்திருப்பார். மாமா அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டவர், அத்தையை எதிர்த்து எதுவுமே சொல்லமாட்டார்.

தன் பிள்ளைகளையே சரிவர கவனிக்காத அத்தை என் மீதும் பெரிதாய் அக்கரைபடவில்லை. அவள் வீட்டில் இருக்கும் மேசை நாற்காலி  போல் நானும் அந்த வீட்டில் ஒரு ஜடப்பொருள் என்பதைப்போலத்தான் அவள் என்னை நடத்தும் விதம் அமைந்திருந்தது.

காலையில் எழுந்ததும் அத்தை வீட்டுக் கடமைகள் எதையும் தொடாமல், ஒரு கைலியை மட்டும் குறுக்கே கட்டிக்கொண்டு,  தோள்பட்டை வரை புரளும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு முகத்தைக்கூட கழுவாது முன்னறையில் அமர்ந்து கொண்டு பிள்ளைகளை எடுபிடி வேலைகள் செய்ய பணித்துக்கொண்டிருப்பார்.

இந்தக் கொடுமைகளை இரசிக்க முடியாமல் அதிகாலையிலேயே எழுந்து அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மூத்த மகனுடன் கடையை திறக்க ஓடிவிடுவார் மாமா !! அப்புறமென்ன வீட்டில் அத்தையின் அல்லி ராஜ்ஜியம்தான். ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு  பொழுதுபோக்குவார். அவரின் மூத்தப்பெண்ணை  தனக்கு மாற்றாய்  வீட்டு வேலைகளுக்கு அத்தை பழக்கி வைத்திருந்தார்.

வீட்டில் சமையல் முதல் சகல வீட்டு வேலைகளும் அந்த அக்காதான் செய்வார். பாவம் அவர், படிப்பும் சரியாய் ஏறவில்லை, இடை நிலைப்பள்ளி செல்லாமலேயே கல்வியை முடித்திருந்தாள்.அவளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. அந்த அக்காள் என் சொந்த அக்காளை அடிக்கடி ஞாபகப்படுத்தினாள்.அக்கா என்றவுடன் மனதுள் மழை பொழிந்ததைப்போல் என்னுள்  மகிழ்ச்சி பிரவாகமெடுக்கும். அவள் விரைந்து வரவேண்டும், என்னை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும், தலைசாய்த்து சிரிக்கும் அவள் அழகு, கையைப் பற்றிக்கொண்டு பேசும் அவள் நெருக்கம், யாவும் மாரிக்காலத்து மழை மேகம் போல் மனது முழுதும் மண்டிக்கிடந்தது, ஆயிரம் பேர் அன்பு மழை பொழிந்தாலும் பெற்ற தாயினும் சாலப் பரிந்து எனைக்காத்த என் அன்புச் சகோதரி போலாகுமா ? அதிலும் மாமாவைத் தவிர அதிக ஒட்டுதல் இல்லாத அந்த வீட்டில் அக்காவை நினைந்து ஏங்கி அவள் வருகைக்காக தவம் கிடந்தேன் நான்.

அக்கா எப்பொழுது வருவாள் ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக