வாழ்க்கை என்பது
இயற்கையுடன் மனிதர்கள் ஆடும் சதுரங்கம். சமயங்களில் இயற்கை
மனிதருக்கு பாரபட்சமின்றி செக்மேட்
(தமிழ்ல எப்டி சொல்றதுன்னு
தெரியலிங்ணா !! ) வைத்துவிடும்.
ஏன்? எதற்கு?
எதனால்? எனும் கேள்விகளுக்கு தலைவிதி, கர்மா, முன்வினை,
செய்த பாவங்கள், பெற்றோர் செய்த பாவம், முன்னோர் செய்த பாவம், வாழ்வில் எடுத்த தவறான முடிவுகள், தவறான சேர்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலை இன்னும் என்னென்ன விடை சொல்ல
முடியுமோ அத்தனையும் நமக்கு நாமே சொல்லிக்கொன்டு ஆசுவாசப்படுத்தி ஆறுதலாக்கிக்கொன்டு அமைதியாகிவிட வேண்டியதுதான், வேறே
வழி :(
நான் குறிப்பிட்ட
பெரியவரின் வாழ்க்கையும் அப்படித்தான். அவரின் வேதனை தோய்ந்த வாழ்க்கை வரலாற்றை அறிந்து மனம் மிகவும் கனத்துப் போனது, இவ்வளவு இரக்கமற்றதா இந்த இயற்கை என வேதனையில் ஆழ்ந்தது. தொடர்ந்து எழுத
நினைக்கும் போதெல்லாம் வார்த்தைகளற்ற வெளியில் மனம் மெளனமாகிவிட இந்தப்
பதிவைத்தொடர நமக்கு இத்தனைக் காலம் ஆகிவிட்டது.
இந்நேரத்தில் இந்தப்
பதிவை வெளியிட நமக்கு பெரியவரின் மூன்று தலைமுறை விடயங்களை தோண்டிதுருவித்தந்து
உதவிய, மனிதருள் மாணிக்கம், மாசில்லா மங்கை நமது
சிறப்பு நிருபர், நெருங்கிய தோழி, பக்கத்து
வீட்டுக்காரியுமான கோகிலா அம்மணிக்கு நமது அன்பும் நன்றியும் :) (அவிங்களும் பதிவை
படிக்கிறாங்கோ, அதான் இந்த பில்டப்பு :)
இனி பெரியவர் வாழ்வைப் பின்தொடர்வோம் வாருங்கள்.
பருவத்தே பயிர் செய் !! என்பது பழமொழி, இதை என் பெற்றோர் அறிந்திருக்கவில்லை போலும். அவர்களை நொந்தும் பயனொன்றில்லை, ஏனென்றால் பெண்குழந்தை பிறந்த பின் ஆண்பிள்ளை வேண்டி
தவமாய் தவமிருந்து பல வருடங்கள் கழித்து பிறந்த ஆண் குழந்தை நான். அவர்கள் நடுத்தர வயது தாண்டி முதுமைப் பருவத்தைத் தொடும்
சமயத்தில் பிறந்த பிள்ளை. எனக்கு பதின்ம வயதில் ஒரு மூத்த
சகோதரி. என்
வாழ்வில் நான் கண்ட முதல் தேவதை அவள்...
என் தாய் கர்ப்பமுற்றிருக்கும் சமயத்திலேயே தந்தை
நோய்வாய்ப்பட்டு இறந்தார். பிரசவத்தில் தாயும் இறைவனடி சேர்ந்தார். பிறந்தவுடனே
அப்பனையும், ஆத்தாளையும்
முழுங்கிடுச்சே பீடை என என்னைத் திட்ட யாருமில்லை, ஏனென்றால் எங்களுக்கு சொந்தங்கள் மிகவும் குறைவு.
எல்லாம் எனது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்ததால் வந்த விளைவு.
ஒரேயொரு தாய்மாமன்
அனைத்தையும் முன் நின்று செய்தார். ஒரே ஊரில் வசித்ததால் அவரின் ஆதரவு கிடைத்தது.
ஆனால் பாவம் அவர் ஓர் இராட்சசிக்கு வாழ்க்கைப்பட்டு வதைப்பட்டுக்கொண்டிருந்தார்.
எங்களை மாமா அவர் வீட்டில் வைத்துக்கொள்ள பிரியப்பட்டாலும் அத்தை குறுக்கே
விழுந்து தடுத்தாள். பாவம் அவளும் என்ன செய்வாள்? அவர்களுக்கே ஆணும் பெண்ணுமாய்
பதினோரு பிள்ளைகள், மாமா ஒரு
மளிக்கைக்கடை வைத்திருந்தார். அதில் வரும் வருமானத்தை வைத்தே அந்தப் பெரிய
பட்டாளத்தை அவர் பரிபாலித்து வந்தார். எனினும் அறிந்தும் அறியாமலும் தனது அக்காள்
பிள்ளைகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்து வந்தார் அந்த நல்லவர்.
அக்கா, மாமாவை
சிரமப்படுத்த விரும்பவில்லை. தானே குடும்பத்தை நிர்வகிக்கத்
துவங்கினாள். தாயின் இடத்தை எடுத்துக்கொன்டாள். பெற்ற தாயினும் சாலப் பரிந்து
எனைச் சீராட்டி பாராட்டி வளர்க்கத் தலைப்பட்டாள்.
இருள் சூழ்ந்த
வெளியில் எங்கோ ஒரு மூலையில் தலைகாட்டும் பிறைபோல அன்பும் ஆதரவும் இழந்து
சூனியமாகிப்போன என் இளம் பிராய துயர வாழ்வில் ஒளிவீச ஆரம்பித்தாள் அக்கா. பல சமயங்களில் இளம் குழந்தையான எனக்குப் பாலும் உணவும் தந்துவிட்டு அவள்
பட்டினியாயிருக்கப் பழகியிருந்தாள்.
பரிமளா என்பது
அக்காவின் பெயர். அன்பும் அடக்கமும் நிறைந்தவள், ரொம்ப ரொம்ப அமைதியானவள்,
யாரேனும் பத்து வார்த்தை பேசினால்
அதற்கு பதிலாய் ஒற்றை வார்த்தையே அவள் பதிலாய் அமையும், பல சமயங்களில் பார்வையாலோ,
புன்னகையாலோ பதிலுரைத்துவிடுவாள்.
ஆனால் அவள் பேசினாலோ இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொன்டிருக்கலாம் போல அத்தனை இனிமை, மென்மை. அவள் யாரையுமே தனது சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்த
மாட்டாள்.
ஆள் உயரமாய், வெடவெடவென மாநிறமாய் சுமாரான தோற்றம் கொன்டவள்தான் அக்கா, எனக்கு அவளிடம் பேசுவது மிக மிக பிடிக்கும், அதிலும் ஒரு பக்கம்
தலைசாய்த்து, கண்களை சுருக்கி, சிரித்தபடி என் கைகளை
பிடித்துக் கொன்டு அவள் பேசுவது அதிகம் பிடிக்கும். அவள் ஸ்பரிசமும் வாசமும்
எனக்குப் பிடித்த சீனி மிட்டாயை ஞாபகப்படுத்தும்.
அக்கா நல்ல படிப்பாளி, SPM தேர்வில் சிறப்பாய்
தேறியிருந்தாள். மேற்படிப்பை தொடர வழியின்றி ஒரு தனியார் மருத்துவமனையில் தாதியாய்
பணியாற்றிக்கொன்டு தன்னையும் என்னையும் காப்பாற்றினாள். அவள்
ஆசையெல்லாம் ஓர் அரசாங்க மருத்துவமனையில் தாதி ஆக வேண்டும் என்பதுதான்.
எந்நேரமும்
நூலகத்திலோ அல்லது தெரிந்தவரிடத்திலோ பெற்ற ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில்
வைத்துப் புரட்டிக்கொண்டிருப்பாள். மனிதர்களை விட புத்தகங்கள் அவளுக்கு மிகவும்
அன்னியோன்யமாய் இருந்தன.
மாமா அக்காவுக்கு உதவ
பெரு முயற்சி எடுத்துக்கொன்டார் அதற்குப் பிண்ணனியில் ஒரு மிக முக்கிய
சமாச்சாரமும் அடங்கியிருந்தது. மாமாவின் மூத்தப் பையனுக்கு அக்காளை மணமுடிக்க
வேண்டுமென்பது மாமாவின் ஆசை. அதிர்க்ஷ்டவசமாய் அதை அத்தையும் ஆதரித்தாள், பின்னே ஒழுங்காய் படிக்காமல் பாதியிலேயே
படிப்பை நிறுத்திவிட்டு தன் தந்தையின் மளிகைக் கடையில் வேலை பார்க்கும் மகனுக்கு,
அரசாங்க மருத்துவமனையில் தாதியான பெண் மனைவியாக வந்தாள் கசக்கவா
செய்யும் ? அக்கா வெளியூரில்
தங்கித் தாதிமைப் பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் என்னை மாமாவின் வீட்டில்
வைத்துக்கொள்ளவும் அத்தை சம்மதித்தாள். எல்லாம் அக்காவை மகிழ்வித்து அவர்கள்
குடும்பத்தில் இழுத்துக்கொள்ளத்தான்.
அக்கா இருதலைக்கொல்லி
எறும்பாய்த் தவித்தாள், அவள்
இலட்சியமும், என் மீது அவள் கொன்ட
அன்பும் போட்டியிட்டதில் என்னை கவனிப்பதற்காகத் தன் ஆசையைத் தூக்கி எறியத்
துணிந்தாள் என் அன்பு அக்காள். ஆனால் மாமாவும் அத்தையும் விடாது வற்புறுத்தி அவளை
பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அக்கா அரைமனதுடன்
என்னை அவர்களின் வீட்டில் விட்டு
விட்டு தன் இலட்சியத்தைக் கண்டடைய விரைந்தாள். மனம் முழுதும் அக்காவின் பிரிவில்
இரணமாகிப் போனது. என் வேதனைக்கு கண்ணீரில் நனைந்த தலையணை மட்டுமே சாட்சியானது.
என் வாழ்வின்
இரண்டாம் அத்தியாயம் மாமாவின் வீட்டில் துவங்கியது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக