என்னைத் தன் தாய் எனக்கூறி அம்மாவென அழைத்த ஒரு சிறந்த மனிதரின் வேதனைக்
கதை....
அவர் ஒரு மாற்றுத்திறனாளி, கழுத்துப்பகுதியில் கடுமையான சேதாரம் ஏற்பட்டு பேசும்
சக்தியை இழந்திருந்தார். கால்கள் செயலிழந்து சக்கரநாற்காலியில் நிரந்தரமாய் வாசம்
செய்பவர்.
அவர் பெயர் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. அதை அவரால் சொல்லவும்
முடியவில்லை. அவர் வாயிலிருந்து வெளிப்படும் ஒலிகள் சொற்களாய் வடிவெடுக்க
சிரமப்பட்டு பெரும்பாலும் சப்தங்களாகவே காற்றிலே கரைந்துவிடும்...
.
அந்தக்குடியிருப்புப்பகுதியில் நான் புதிது, அவர் ரொம்பப் பழமையானவர்.
அங்குள்ள அனைவரும் அவருக்கு நண்பர்கள். உதயசூரியன் பூமிக்கு வணக்கம்
சொல்லும் காலையிலேயே துவங்கிவிடும் அவர் பொழுது, சக்கர வண்டியில் அமர்ந்துகொன்டு
மெல்ல மெல்ல குடியிருப்புச் சாலைகளில் பயணித்தபடி தாம் எதிர்கொள்ளும் அல்லது தம்மைக்
கடந்து செல்லும் தமது நண்பர்களை சிரித்த முகத்துடன் கையசைத்து, ஏதேதோ ஒலியெழுப்பி
புரியாத சப்தங்களில் அவர்களிடம் அவருடைய வணக்கம் சொல்தலும், நலம் விசாரிப்பும் தொடரும்.
அவருடைய நிலையும், அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாத அவருடைய சிரித்த முகமும் கடின சித்தம் கொன்டவரைக்கூட
கொஞ்சம் அசைத்துப் பார்க்கவே செய்யும்.
அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை, வீட்டு வாசல் வழி கடந்து செல்வதைக் அனுதினமும்
காண்பதுண்டு. காலையில் அந்தப் பகுதியை தூய்மை செய்யும் துப்புரவுத் தொழிலாளிகள்
அவருக்கு நண்பர்கள்.

அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்த மனிதரை மிகவும் உயர்வாக
மதித்து நடத்தினர். சீனர்கள் காலை உணவு வாங்கி அவர் கையில் வற்புறுத்திகொடுப்பர்,
சில நண்பர்கள் அவர்
மறுத்தாலும் விடாது சில ரிங்கிட் தாட்களை அவர் சட்டைப்பையில் திணித்துவிட்டுச்
செல்வர்.
அவருக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி ஆனார்? பதில் எனக்கு சரிவரத் தெரியவில்லை. ஒரு கடுமையான விபத்தில் சிக்கினார் என்பது மட்டுமே தெரியவந்தது.
அவருடன், நான் பேச ஆரம்பித்தது ஓர் அடைமழை நாளில், அந்த மாலை வெளீர் நீலவானம் சர்வ
சாதாரணமாய் அகலப் புன்னகைத்தபடி நேரங்களை கடத்திக்கொன்டிருந்தது. பாவம் அதை நம்பி
அந்தப் பெரியவர் தமது சக்கர வண்டியில் மாலை "வாக்கிங்" செல்வதைப்போல்
வீதியில் தமது சக்கர வண்டியை உந்தித்தள்ளியபடி சென்றுகொண்டிருந்தார். கடந்து
செல்லும் அவரைக் கவனித்தபடி எனது வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்துகொன்டிருந்தேன்.
சில நிமிடங்கள் கடந்தன, எங்கிருந்து வந்தது என்பது புரியுமுன் சடசடவென அடர் மழை
வானம் கிழிந்துகொன்டு ஊற்றுவதைப்போல் பொழிய ஆரம்பித்தது. "உள்ளே போ" என
பாட்சா கிளைமாக்ஸில் ரஜினி மிரட்டியதைப்போல் பெரிய பெரிய நீர்த்துளிகளால்
அறைந்து வீட்டிற்குள் விரட்டியது.
வேறு வழியின்றி வீட்டிற்குள் நுழைந்து, ஒரு பிரம்பு நாற்காலியை சன்னல்
ஓரத்தில் இழுத்துப்போட்டு மழையின் அழகையும், பொழியும் வேகத்தையும் கவனித்துக்கொன்டிருந்தேன்... என்ன
ஓர் அருமையான மழை !! அப்போதுதான்
கவனித்தேன்....
என் வீட்டிற்கு வெளிப்புற ஓரத்தில் சில அடிகள் தள்ளி சாலை ஓரத்தின் வளைவில் அந்தப் பெரியவர்.
நனைந்த புறா ஒன்று சிறுகுகளை ஒடுக்கிக்கொன்டு ஒண்டியிருப்பதைப்போல்
சக்கரவண்டிக்குள் குறுகிக்கொன்டு அமர்ந்திருந்தார். பார்க்க மிகவும்
பரிதாபமாய் மனதைப் பிசைந்தது. மழை இப்போதைக்கு நிற்பதாய் தெரியவில்லை.
சரிதான் !! மனசு கேட்கவில்லை, வீட்டில் இரண்டு பெரிய
குடைகள் இருந்தன, ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு , இன்னொரு குடையுடன் வாசல் கதவைத் திறந்து அவரை
நோக்கிச் சென்றேன், அந்த மழையில் தலை கவிழ்ந்திருந்த அவர் அவருக்கு பின்புறமாய் வந்த என்னை
எதிர்பார்க்கவில்லை போலும் !! மழை நீர் கோட்டிட்டு வழியும் முகத்தில் கொஞ்சம்
அதிர்ச்சியுடன் அவரிடம் நீட்டிய குடையைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து
நோக்கினார். "வானாம்மா" என்பதைப்போல் ஏதோ ஒரு உருவமற்ற ஒலிகள் அவர்
வாயிலிருந்து புறப்பட்டன.
"அய்யோ, பரவாயில்லை , வைத்துக்கொள்ளுங்கள்"
என்று குடையைப் பிரித்து அவர் கையில் கொடுத்தேன், அவர் கண்களில் நன்றி மின்னலாய்
ஒளிர்வதைக் கண்டேன். அப்படியென்ன பெரிய உபகாரம் நான் பண்ணிவிட்டேன்? மாற்றுத்திறனாளியாயினும் சாலையை
பிரதிபலனின்றி கூட்டிப் பெருக்கும் ஒரு சிறந்த மனிதருக்கு என்னால் இயன்ற சிறிய
உதவி. குடையைப் பிடித்துக்கொன்டு மெல்ல அவர் வீடு திரும்புவதை மகிழ்வுடன்
கவனித்தவாறு அண்ணநடைபோட்டு வீடு திரும்பினேன்.
அதன் பின்னர் நடந்ததுதான் விக்ஷேசம், அன்றிலிருந்து அவர் என்னைக் கண்டாலே அகலப்
புன்னகைத்தபடி கையசைப்பார், "ம்ம்ம்மமமா " என சிரமப்பட்டு அழைப்பார். நானும் சில
உபசரனை வார்த்தைகள் கூறி விடைபெற்றுக்கொள்வேன். பணம் கொடுத்தால் கடுமையாக
மறுப்பார். ஆனால் நான் அவர் முன் எதிர்படும் சமயங்களில் யாராவது அவர் பக்கத்தில் இருந்தால்,
அவர்களிடம்
என்னைக்காட்டி தனது நெஞ்சில் கைவைத்து "ய்ய்ய்யான்ன்ன்ன் ம்ம்ம்ம்மமா"
என மழலையைப்போல் சிரமப்பட்டு கூறுவார், அதாவது நான் அவருக்கு அம்மாவாம் !! கூட
இருப்பவர்களும் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள், இப்படியாக எனக்கு ஒரு மிகப்பெரிய
மகன் கிடைத்துவிட்டார்...!! :) சில சமயம் பூரிப்பாகவும் சில சமயம் வெட்கமாகவும்
இருக்கும் நமக்கு...!
அவர் என்னை "ம்மா" என்றே அழைப்பார், பார்க்கும் போதெல்லாம் கையசைப்பார், சைகை மொழியாலும், எழுப்பும் ஓசைகளாலும்
நம்மிடம் பேசுவார். கொஞ்சம் விளங்கும், நிறைய விளங்கிக்கொள்ள சிரமமாயிருக்கும், இருந்தாலும், சிரித்து
மழுப்பிவிடுவதுண்டு.
ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியிருக்கும், பக்கத்து வீட்டுத் தோழி
சத்தமிட்டு அழைத்தாள், என்னவென்று வெளியே சென்று கண்டால்.. அங்கே அவர் கண்கள் கலங்கியபடி சக்கர
வண்டியில் அமர்ந்திருந்தார். பசிக்குதாம் வீட்டில் சோறு மட்டும்தான் இருக்காம்,
கொஞ்சம் கறி
இருந்தால் கேட்கிறார், நான் ஒன்றும் சமைக்கவில்லை என்றாள், நான் ஓடிச்சென்று வீட்டிலிருந்த சாம்பாரை ஒரு
பாத்திரத்தில் இட்டு அவரிடத்தில் கொடுத்தேன், அதன் பின்னர் நான் நன்கு
சமைப்பேன் என்று தன் நண்பர்களிடம் சமைப்பதைப்போல் சைகை காட்டி பெருவிரலை
உயர்த்திக்காட்டுவார்.
அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நமக்குத் தெரியாதா? என்ன தாயி சமையல் செய்ற? முடிஞ்சா கொஞ்சம் விக்ஷத்தை உன்
கையால் கொடு, தின்றுவிட்டு செத்துப்போகிறேன், எதற்கு இப்படி சமைத்துக் கொல்கிறாய்? என வீட்டிலுள்ளவர்கள்
பாராட்டுப் பத்திரம் வாசிப்பது நமக்கு மட்டும்தானே வெளிச்சம் :P . பட் அவருடைய அந்தப்
பெருந்தன்மை எனக்கு பிடிச்சிருந்தது !! இப்படியாக என்னுடைய அந்த முதிர்ந்த மகன் வழி
நானும் அந்த ஏரியாவில் ஒரு சிறந்த "குக்காக" அறிமுமாகியிருந்தேன்னா
பார்த்துகோங்களேன் !!
சில வருடங்கள் கடந்துவிட்ட பின்னர் இந்த வருடம் புத்தாண்டு அன்று, புது வருடத்தை முன்னிட்டு
ஆங்காங்கே விருந்துகள், கொண்டாட்டங்கள், கும்மாளங்கள், நானும் அப்படி ஒரு உறவினர்
வீட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் காலையிலேயே சென்று கலந்துகொண்டு மாலையில் வீடு
திரும்பினேன்.
நான் வீடு திரும்பியதை அறிந்ததும் பக்கத்து வீட்டுத் தோழி ஓடி வந்து அழைத்தாள்,
என்னவென்று சென்று
பார்த்தால், "ஒரு விக்ஷயம் தெரியுமா டீச்சர் ? சக்கர வண்டி அங்கிள் "அவரு காலைல
உங்கள் வீட்டு வாசல் முன் சக்கர வண்டியில் ரொம்ப நேரம் காத்திருந்தார், நீங்கள் வர ரொம்ப
தாமதமாகிவிட்டது, உங்களிடம் சொல்லச் சொல்லி விட்டு எங்களிடமும் விடைபெற்று போய்விட்டார்
என்றாள்.
இப்படியும் மனிதாபிமானமற்ற
மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்கின்றார்களே?
பூமி ஏன் இன்னும்
இவர்களை விழுங்காமல் விட்டுவைத்திருக்கிறது?
அவர்களைப்பிடித்து பேயறைகொடுக்க வேண்டும் என மனசு கொந்தளித்தது.
அந்தப்பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொன்டு அவரின் சொத்துக்களை அந்த
விக்ஷமிகளிடமிருந்து பகிக்ஷ்காரம் செய்யப்போவதால், பொறுமையுடன் பதவி ஓய்வு பெற்ற
இராணுவ வீரரான அந்த எனது முதிர்ந்த மகனின் கதையை அடுத்தப்பதிவில் தொடர்கிறேன்...