மந்திரம் மாயம் எல்லாம் போலி, ஏமாற்று வித்தைகள், பணம் சுரண்டும் வழி என்று பலர் கூறுவதைக் கேட்டிருப்போம், சில ஏமாற்றுக்காரர்கள் இல்லாத பொய்களைக் கூறி பணம் பறிப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் உண்மையிலேயே மாய மந்திரங்கள், ஏவல், பில்லி சூனியங்கள் போன்றவை சக்தி உள்ளவையா. அவற்றால் மனித வாழ்வை மாற்ற இயலுமா , இயலாதா என்பதை கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்து தாங்களே முடிவு செய்யுங்கள்.
ஆறுமுகம், தேவி தம்பதியருக்கு எட்டு பிள்ளைகள், மூன்று ஆண், ஐந்து பெண்கள். இவர்கள் இருவரும் தோட்டத்தில் இரப்பர் மரம் சீவுபவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம். அன்றாட உணவுக்கே சிரமம், இதில் ஆறுமுகம் கொஞ்சம் குடிப்பழக்கமும், சூதாடும் குணமும் கொண்டவர்.
அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உனவு அளிக்கவும் வழியின்றி வாடினர். அருகாமையிலுள்ள காலைச் சந்தைக்கு நேரம் தாழ்த்தி செல்வார் ஆறுமுகம். சந்தை முடிந்த பின்னர் அங்கே சிதறிக்கிடக்கும் அழுகிய, தூக்கி எறியப்பட்ட காய்கறிகளை தேடிப் பொறுக்கி வீட்டிற்கு கொன்டுவருவார். தேவி விறகு அடுப்பில் பெரிய பானை வைத்து பருப்பைக் கொட்டி, பொறுக்கி வந்த காய்கறிகளில் நல்ல பகுதிகளை வெட்டி சுத்தம் செய்து சாம்பார் தயார் செய்து தனலில் கொதிக்கவிடுவார், ஒற்றை அடுப்பில் அது கொதித்துக் கொன்டேயிருக்க சோறு மட்டும் சமைத்து, அந்தக் கறியையே இரண்டு மூன்று வாரங்களுக்கு சூடுகாட்டி, சூடுகாட்டி உபயோகித்து வந்தனர்.
இத்தகைய வறுமையின் கொடுமை தாங்காமல் மூத்த குழந்தைகளை அரைகுறை படிப்புடன் தாமாகவே படிப்பை நிறுத்தி வேலைக்கு கிளம்பினர். பிள்ளைகள் நன்கு உழைத்து குடும்பத்தை மேம்படுத்தினர். அவர்கள் குடும்பம் வளமை நிலைக்குத் திரும்பியது.
வாலிப வயதை அடைந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரை வேலையை விட்டு நிறுத்தி வீட்டோடு வைத்து அவர்களின் சகலத் தேவைகளையும் கவனித்துக்கொன்டனர்.
மூத்த மகன் பொறுப்புடன் பெற்றோருக்கு பக்கத்துத் தாமானில் பெரிய வீடொன்றை வாங்கி அனைவரையும் அதில் குடியேற்றினான். தன் தங்கைகள் இருவருக்கு அவர்கள் விரும்பிய வாலிபர்களை மணமுடித்து வைத்தான். தான் அழகான பெண்ணொருத்தியை மணமுடித்துக்கொண்டான். தன் மனைவியுடன் ஜோகூர் சென்று அங்கேயே வேலை செய்து வாழ ஆரம்பித்தான்.
அண்ணனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவன் தம்பியரும் நன்கு உழைத்துச் சம்பாதித்து, தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணைவியரையும் தேடிக் கொண்டனர். அவர்களின் திருமணத்தை ஆறுமுகம் தேவி தம்பதியர் விமரிசையாக நடத்தி மகிழ்ந்தனர். பெற்றோரை மறக்காமல் அவர்கள் செலவுக்கு அனைவரும் பணம் தந்தனர்.
ஆறுமுகம் தேவி தம்பதியருக்கு பெருமை பிடிபடவில்லை. பணக்காரர்களுக்கு மத்தியில் நல்வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்கள் வீடு மிகவும் அழகாக அமைந்திருந்தது. இளஞ்சிவப்பு வர்ணம் தீட்டி, வீடு நிறைய ஆடம்பர பொருட்களை நிரப்பி அழகாய் வைத்திருந்தனர். நாளும் நல்ல உணவு வகைகள், புதிய துணிமணிகள், தங்க ஆபரணங்கள் என மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.
அவர்களின் எட்டுப் பிள்ளைகளில் கடைசிப்பெண் யாழினி மட்டும் படித்துக்கொண்டிருந்தாள். அவள் குடும்பத்தில் உள்ள யாவருக்கும் செல்லப்பெண். குள்ளமாய், ஒல்லியாய், அழகிய சிறிய உருவத்துடன், மாநிறமாய், அழகான கண்களுடன் வளைய வந்தாள் யாழினி. அவளை நன்கு படிக்க வைத்து ஆசிரியையாக்கிவிட வேன்டும் என கங்கணம் கட்டிக்கொன்டு ஒட்டு மொத்த குடும்பமே அதற்காக பாடுபட்டது.
யாழினி நன்றாகவே படித்தாள். ஆனால் அவளுக்கு எஸ்.பி.எம் தேர்வில் எதிர்பார்த்த விதத்தில் நல்ல தேர்ச்சி அமையவில்லை. மிகவும் சோர்ந்துபோனாள் யாழினி, இதற்கு மேல் படிக்கப்போவதில்லை என முடிவுகட்டினாள், ஆனால் அவள் பெற்றோரும், உடன் பிறந்தோரும் வற்புறுத்தி அவளைத் தனியார் பள்ளியில் சேர்த்தனர். படிவம் ஆறு முடித்தாள். அதிலும் நல்ல தேர்ச்சி அடைய முடியவில்லை. வேறு வழியில்லாமல் படிப்பைவிட்டு வீட்டில் இருந்தாள்.
கொஞ்ச நாளில் வீட்டிலிருப்பது போரடிப்பதாகக் கூறி வீட்டிலுள்ளோர் தடுத்தும் கேளாமல் வேலை தேட ஆரம்பித்தாள். அவள் விரும்பியபடி ஒரு சின்ன நிறுவனத்தில் அவளுக்கு குமாஸ்தா வேலை கிடைத்தது. யாழினி மிகவும் மகிழ்வுடன் வேலை செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்பட்டது.
அவள் பணிபுரிந்த நிறுவனம் பிலிப்பைன் நாட்டுக்கார சகோதரர்கள் இருவருக்குச் சொந்தமானது. இந்நாட்டு உயர்ரக கோழிகளை உற்பத்தி செய்து தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து நன்கு சம்பாதித்தனர். அண்ணன் வயது முதிர்ந்தவர், தம்பி இளவயதினன். ஆள் ஒல்லியாய், உயரமாய் கொஞ்சம் கருப்பாய், கரைத்து வெட்டிய முடியுடன் மலாய் வாலிபனைப் போல் காட்சியளித்தான். அவன் கவனம் யாழினி மேல் விழுந்தது.
தொடரும்.....
@"தென்றல்" வார இதழில் வெளிவந்த படைப்பு
arumai அருமை தொடருங்கள்
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே. :)
பதிலளிநீக்கு