சனி, 9 ஏப்ரல், 2016

ஏவல் (2)


யாழினியின் அழகும், குணமும் கண்டு அந்தக் கம்பெனியின் இளைய முதலாளி மைக்கேல் அவளிடம் மனதைப் பறிகொடுத்தான். அந்த பிலிபைன்சு நாட்டு வாலிபன் அவ்வள‌வாய் எடுப்பான தோற்றம் வாய்க்காவிடினும், மனதாலும், குணத்தாலும் மிகவும் சிறந்தவனாயிருந்தான் . இள‌ம் வயதிலேயே மிகவும் திறமையாக செயல்பட்டு பெரிய பணக்கார தொழிலதிபராய் திகழ்ந்தான்.

ஆரம்பத்தில் அவனிடம் பாராமுகம் காட்டிய யாழினி அவன் நல்லவன் என்பதை உண‌ர்ந்து அவனைக் காதலிக்கத் தொடங்கினாள். அவளை ஓர் இள‌வரசியைப் போன்று அன்புடன் கவனித்துக்கொண்டான் மைக்கேல்.

மைக்கேலுடன், யாழினி வாழ்க்கையின் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்தாள். சினேகிதிகளுடன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மைக்கலுடன் வெளியிடங்களுக்குச் சென்றாள். ஏழைகளை ஏங்க வைக்கும்  வசதியானவர்களின் வாழ்க்கை முறைகளையும், உணவு, கேளிக்கை, உல்லாசங்கள் யாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்தாள். மைக்கேல் தமது சினேகித வட்டத்தில்  யாழினியை தன் வருங்கால மனைவி என்றே யாவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

இனிமையாக காலம் நகர்ந்துகொண்டிருக்க யாழினியும், மைக்கலும் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். மைக்கேல் தரப்பிலிருந்து யாழினியை மணப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. அடுத்து யாழினியின் பெற்றோரை சந்தித்து அவர்களின் சம்மதத்தைப்பெற அவர்களின் வீட்டிற்கு வந்தான் மைக்கேல்.

ஓரளவு விவரம் புரிந்த யாழினியின் தந்தை, அவனை வரவேறு உபசரித்தார், ஆனால் இந்த விவரம் யாழினியின் தாய் தேவியின் கவனத்திற்கு வந்ததும் அவர் எரிமலையாய் கொதிதெழுந்தார். "அதெல்லாம் முடியாது", "என் பெண்னை நீ ஏமாற்றப்பார்க்கிறாய்", "உனக்கு என் பெண்ணை தரமுடியாது, என் உறவினர் குடும்பத்தில் தான் அவளைக் கட்டி வைப்பேன்" என தனக்குத் தெரிந்த அரைகுறை மலாயில் திட்டித்தீர்த்து, விரட்டி அடித்தார்.

"அங்கிள்", "ஆண்ட்டி" என அன்புடன் விளித்து, பரிசுபொருட்களுடன் பெண்கேட்டு வந்தவன் தலை குனிந்து வெளியே சென்றான். யாழினி அழுது புலம்பி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாள். அப்பொழுதும் அவள் தாய் மனமிரங்கவில்லை.

ஒருவழியாய் அவரை அடக்கிவிட்டு அவள் தந்தை தன் மகளிடத்தில் கனிவாய் பேசி , இறுதியில் ஓர் உடன்படிக்கை செய்தார், அதன்படி மைக்கேல் குடும்பத்தை யாழினியுடன் தாமும் பிலிப்பைன்சுக்கு சென்று காணவேண்டும், தமக்கு திருப்தியளித்த பின்னரே திருமணத்திற்கு தாம் ஒப்புதல் தர இயலும் என்பதையும் தெளிவுபடுத்தினார். யாழினியும், மைக்கேலும் சம்மதித்தனர்.

யாழினியின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் யாழினியின் தந்தை கூறிய யாவற்றுக்கும் தலையாட்டினான் மைக்கேல். தன் சொந்த செலவில் யாழினியையும், அவர் தந்தையையும்  தம் குடும்பத்தைச் சந்திக்க பிலிப்பைன்சுக்கு அழைத்துச் சென்றான். தேவி ஆனமட்டும் அவர்களைத் தடுத்துப் பார்த்து தோற்றுப்போனார்.

பிலிப்பைன்சில் ஆறுமுகத்திற்கு ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருந்தன. மைக்கேலின் குடும்பம் அங்கே ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான மேல்தட்டு குடும்பம். அவர்களின் பண்ணை வீடு பழைய காலத்து அரண்மனையென மரத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது, அருகருகே மிகப்பெரிய ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன, வீடு நிறைய வேலையாட்கள்.

இவ்வளவும் வாய்த்த மைக்கேலின் குடும்பம் ஆறுமுகத்தையும், யாழினியையும் இராஜ மரியாதையுடன் வரவேற்று உபசரித்தது. மைக்கேலின் தாய் புன்னகையுடன் தம் வருங்கால மருமகளை வரவேற்று ஒரு வைர மோதிரத்தை பரிசளித்து உபசரித்தார்.

மைக்கேல் அந்தப் பெரிய குடும்பத்தின் கடைசி வாரிசு, அந்தக் குடும்பம் மொத்தமும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது. அவனுக்காகவே யாழினிக்கும் அவள் தந்தைக்கும் இராஜ உபசாரங்கள் நடந்தன. ஆறுமுகம் அகமகிழ்ந்து போனார். கனவிலும் கிட்டாத ராஜபோக வாழ்க்கை தம் மகளுக்குக் கிட்டியிருக்கிற‌து என்பதை உண‌ர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார். மொழிப்பிரச்சனையையும் தாண்டி , வெற்றியுடன் திருமணப் பேச்சை முடித்து  மூவரும் ஊர் திரும்பினர்.

யாழினியின் தாய் வெறுப்புடன் அவர்களை எதிர்கொண்டார், தமக்கென அவர்கள் கொன்டுவந்த பரிசை வீசி எறிந்தார். இந்தத் திருமண‌ம் நடந்தால் உயிரை விட்டுவிடுவேன் என குறுக்கே விழுந்து தடுத்தார். ஆறுமுகம் எவ்வளவு சொல்லியும் கேளாமல் தேவியின் மனம் பாறையாய் இறுகிப்போனது.

ஆரம்ப காலத்தில் ஏழ்மை நிலையிலிருந்த தம்மை உதாசீனம் செய்த தம்முடைய பணக்கார உற‌வினர் குடும்பத்தில் சம்பந்தம் வைத்து அவர்களுக்கீடாய் தாம் சம நிலை பெறவேண்டும் எனும் வைராக்கியம் அவர் மனதில்  நெடு நாட்களாய் வீற்றிருந்தது. தம் எண்ணம் ஈடேற எந்த எல்லைக்கும் போக அவர் மனம் தயாராய் இருந்தது. அதனாலேயே இத்தனை பிரச்சனைகளையும் அவர் ஏற்படுத்தினார்.

தாயின் உறுதியான மனநிலை உண‌ர்ந்த யாழினி ஒருநாள்  யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி மைக்கேலை கரம்பற்றினாள். நன்கு செலவு செய்து மிகவும் அழகான கவுன் அணிவித்து, தேவதை போல அலங்காரம் செய்யப்பட்ட யாழினியை தம் உற்றார், நண்பர்கள் மத்தியில் மைக்கேல் மணமுடித்தான்.

ஓரிரு மாதங்கள் சென்றன. யாழினி மைக்கேலின் குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றுகொன்டிருந்த்து. யாழினி கருவுற்றாள்.

அந்த சமயத்தில்தான் யாருமே எதிர்பாராத அந்தத் திருப்பம் ஏற்பட்டது.

பரிபூரண ஆரோக்கியமாயிருந்த மைக்கேல் உருவம் இளைத்து, வெளிறிப்போன தோற்றத்துடன் நோயாளியாய் காட்சியளித்தான். அவனுக்கு என்ன நோய் என்பதை எந்த மருத்துவராலும் கண்டுபிடித்து குண‌ப்படுத்த இயலவில்லை. அவர்களின் இனிமையான இல்லற  வாழ்க்கை மாறியது. அடிக்கடி தனிமையில் அமர்ந்து தனியே பேசினான். கலங்கி கண்ணீர் வடித்தான். ஏனென்று விசாரித்த யாழினியிடம், " நான் இற‌ந்து போகப் போகிறேன்" எனப் புலம்பினான். உண்மை நிலை உண‌ர முடியாமல் தவித்தாள் யாழினி.

இப்படியே சில நாட்கள் நகர்ந்த நிலையில், ஒரு நாள் இரவில் நல்லபடி படுத்தவன், மறு நாள் காலை வாயிலும், மூக்கிலும் இரத்தம் வழிய‌ படுக்கையில் பிண‌மாய் கிடந்தான்......

தொடரும்

@"தென்றல்" வார இதழில் வெளிவந்த‌ படைப்பு





     







   


 







2 கருத்துகள்: