நடிகர் விஜயகாந்த் நடித்த "ரமணா" திரைப்படத்தில் ஒரு மருத்துவமனைக்காட்சி, இறந்து போன ஏழை ஒருவரை தனியார் மருத்துவமனையில், உயிருக்குப் போராடுகிறார் எனக்கூறி மருத்துவமனையில் சேர்ப்பார் கேப்டன். அவரிடம் அந்த மனிதர் இறந்து போனதற்கான அரசாங்க அத்தாட்சி கைவசமிருக்கும். அதை அறியாத அந்த தனியார் மருத்துவமனையினர் நிகழ்த்தும் நாடகங்களைக் கண்டு இறந்தவரின் மனைவி மட்டுமல்ல நாமும் அதிர்ச்சியாகிவிடுவோம்.
இப்படியாக மக்களிடமிருந்து முடிந்த மட்டிலும் பணத்தைக் கறக்க தனியார் மருத்துமனைககள் நிகழ்த்தும் சாகசங்களை பக்கம் பக்கமாக எழுதலாம், பணத்திற்காக அவர்கள் பாமரர்களை படுத்தும்பாடு வார்த்தைகளில் வசப்படுவதில்லை. எப்படியிருந்தாலும் பல சமயங்களில் அஜாக்கிரதையின் உறைவிடமாய் திகழும் பொது மருத்துவமனைகளைவிட, உடனடி நிவாரணம் தேடி மக்கள் அடைக்கலமாவது தனியார் மருத்துவமனைகளே.
இந்த தனியார் மருத்துவமனைகளின் புண்ணியத்தாலேயே நாட்டில் காப்புறுதி நிறுவனங்கள் கொழுத்துப்பெருக்கின்றன. மக்கள் காப்புறுதி, மெடிக்கல் கார்ட் என சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்கின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவம் வெற்றியடையா பட்சத்தில் இதற்கு மேல் எங்களால் முடியாது நீங்கள் பொது மருத்துவமனைக்கு கொன்டு செல்லுங்கள் எனக் கூறிவிடுவர். தோற்றுப்போன தங்கள் சிகிச்சைக்கும் கொஞ்சமும் வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல் மொத்த மருத்துவ செலவையும் வசூலித்துவிடுவர்.
உயிர் மிச்சமிருக்கும் நோயாளி மீண்டும் வேறொரு தனியார் மருத்துவமனையையோ அல்லது கையில் பசை தீர்ந்துவிட்டால் பொது மருத்துவமனையையோ நாடுவதுதான் வாடிக்கை.
அந்த மனிதருக்கு பிராயம் 60க்கு மேலிருக்கும், ஒரு விபத்தில் சிக்கி மனைவி மக்களால் அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பருத்த அஜானுபாகுவான தோற்றம் கொன்ட அவருக்கு கழுத்தில் விபத்து (hairline crack ) ஏற்பட்டிருந்தது. படுத்த படுக்கையாய் கழுத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் அவர் உடலில் நீர்பிரியாத நிலை ஏற்படவே, மருத்துவர்கள் அவருடைய ஒரு காலில் மூன்று நீளமான காயங்களை ஏற்படுத்தி நீர்வடியச் செய்தனர். தொடர்ந்த சிகிச்சையில் கழுத்து குணமாகியது, ஆனால் காலில் செயற்கையாய் ஏற்படுத்திய அந்தக் காயங்கள் மிகவும் பெரிதாகின. முழங்காலுக்குக் கீழ் முக்கால்வாசியை அகன்ற செந்நிற காயங்கள் ஆக்ரமித்து அவதிப்படுத்தத் துவங்கின. தனியார் மருத்துவமனை ஆன செலவைக் கணக்குப்போட்டு கறந்துகொன்டு மேற்கொன்டு சிகிச்சை அளிக்க முடியாது என கைவிரித்துவிட்டது, கவலையுடன் குடும்பத்தினர் பொது மருத்துவமனையில் அந்த மனிதரை கொன்டு வந்து சேர்த்தனர்.
பொது மருத்துவமனையில் பகலில் அவருடைய மனைவி அவருக்கான உதவிகளையும் இரவில் அவரது புதல்வர் அவருடன் தங்கியும் அவரைக் கவனித்துக்கொன்டனர்.
நாட்கள் நகர்ந்தன, அவருடைய கால் புண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் சீனர். அவருக்கு அந்த மனிதரை அங்கிருந்து வெளியேற்றவும் அடிக்கடி தமது புண்களுக்காக அவர் மருத்துவமனை சிகிச்சையை நாடாமல் இருக்கவும் ஒரு வழி புலப்பட்டது. அந்த மனிதரின் காலை முழங்காலோடு வெட்டி எடுத்துவிடுவது என்பதுதான் அது..! அதை நிறைவேற்ற இன்னொரு இந்திய மருத்துவரை வைத்து கூட்டு ஆலோசனை நடத்தினார். ஒரு தமிழனின் கழுத்தை அறுக்க இன்னொரு தமிழனை உபயோகிக்கும் திறமை அந்த மருத்துவருக்கு தெரிந்திருக்கின்றது.
என்ன கொடுமை...! அந்த பெண் மருத்துவரும் அதற்குச் சம்மதித்தார். நோயாளிகளின் அங்கங்களை துண்டிப்பது மருத்துவத்தில் ஒன்றும் புதிதல்ல ஆனால் அது முற்றிய நீரிழிவு நோயாளிகளுக்கும் முற்றாக உறுப்புகள் சிதைந்தவர்களுக்குமே பொருந்தும். காயங்களுக்கெல்லாமா காலை வெட்டி எடுப்பது ?
அவர்களின் திட்டப்படி அந்த பெண் மருத்துவர், நோயாளியின் பிள்ளைகள் யாரும் அருகில் இல்லாத சமயத்தில், சர்வ சாதாரணமாய் கைலி அணிந்து வெற்றிலை போட்டுக்கொன்டு நோயாளிக்கு சிருஷைகள் செய்துகொன்டிருக்கும் அவர் மனைவியை அணுகி பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.
அந்த மருத்துவர் தன் முன் காட்சியளித்த அந்த 50 வயது பெண்மணியை படிக்கத்தெரியாத பாமரப் பெண்மணி, தமது ஏற்பாடுகளுக்கு எளிதில் இணங்கிவிடுவார் என முடிவு செய்து கொன்டார், அவர் அறியாதது என்னவென்றால் அந்தப் பெண்மணி ஒரளவு படிக்கத்தெரிந்தவர் கூடவே நிறைய உலக அனுபவமும் சாதுரியமும் மிக்கவர் என்பது.
டாக்டரம்மா அந்தப் பெண்மணியிடம் பேச ஆரம்பித்தார், தமிழில் "அம்மா என ஆரம்பித்து, உங்கள் கணவர் அளவுக்கு மீறி குடித்து உடலெல்லாம் விக்ஷமாகிப் போய்விட்டது, இவர் கால் புண்கள் என்றுமே ஆறப்போவதில்லை, அவர் உயிருக்கும் ஆபத்து வந்துவிட்டது எனவே அவர் முழங்காலை துண்டித்துவிட்டால் உயிர் காப்பாற்றப்பட்டு எல்லாச் சிரமங்களும் தீர்ந்துவிடும், அறுவைச்சிகிச்சைக்கு இந்தப் பாரத்தில் ஒப்புதல் கொடுங்கள் என லாவகமாக தமது வழிக்கு கொன்டுவரப்பார்த்தார். நீங்கள் சம்மதித்துவிட்டால் இன்று இரவே காலை துண்டித்துவிடலாம், அவசரப்பட்டார் டாக்டர், இதில் அவருக்கு என்ன ஆதாயமோ புரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது நோயாளியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல.
அவர் கூறியதை மிகவும் கவனமாகக் கேட்ட அந்தப் பெண்மணி ஒருகணம் திகைத்தார். காரணம் அவர் கணவர் மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ வேறெந்த தீயப் பழக்கங்களும் இல்லாதவர். முந்தைய சிகிச்சைகளின் வழி திடகாத்திரமான அவருக்கு நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற எந்த நோய் பிரச்சனைகளும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
உடனே அந்தப் பெண்மணி நான் என் குழந்தைகளுடன் பேசி முடிவு செய்கிறேன் எனக்கூறி முடிவாக ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சிலமுறை வற்புறுத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள் அந்த மருத்துவர்.
அதன் பின்னர் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அந்தப் பெண்மணிக்கு நெருப்பாய் தகிக்க ஆரம்பித்தது. உடனே கையிலிருந்த சில்லரைகளை கொன்டு பொதுத் தொலைபேசி வழி மகனுக்கு நடந்ததைத் தெரிவித்து உடனே புறப்பட்டு வரச் செய்தார். மகன் வழி மற்ற பிள்ளைகள் உறவினர்கள் என அனைவருக்கும் செய்தி தீயாய் பரவ, கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையின் ஆண்கள் பிரிவுக்கு முன் கூட்டம் கூடிவிட்டது.
அந்தக் குடும்பத்து ஆண் மக்கள் அந்த சீன டாக்டரை முற்றுகையிட்டு ஆரவாரமாக கேள்விக்கனைகள் தொடுக்க, நடுங்கிப்போன டாக்டர் நாக்குழறி தடுமாறியது அவன் செயலின் அநியாயத்தைச் சொல்லாமல் சொல்லியது. கடும் எச்சரிக்கையுடன் அந்த டாக்டரை விட்டுவிட்டு அவர்கள் நோயாளியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்த சொந்த சிகிச்சைகளிலேயே முற்றாகத் தேறி இன்று காயத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ஆரோக்கியமாக வலம் வருகிறார் அந்தப்பெரியவர்.
காலை வெட்டியிருந்தால் கடைசிக்காலம் வரை அந்த மனிதர் எத்துனை அவதிகள் பட்டிருப்பார் ? மனைவியின் துரித நடவடிக்கையால் அன்று அவர் தப்பித்தார். சும்மாவா சொன்னார் தெய்வப்புலவர்...
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
என்று....
அழகான வாசமலர்களிடையே கொடிய பூநாகங்கள் குடியிருப்பதைப் போல நல்ல மருத்துவர்களிடையே இதுபோன்ற பிறர் நலம் கருதா தீயகுணமிக்க மருத்துவர்களும் இருப்பது வேதனையே.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக