கல்கி எனும் மாபெரும் எழுத்து ஆளுமையின் அற்புதப்படைப்பாக வெளிவந்த "சிவகாமியின் சபதம்" புதினத்தைத்தொடர்ந்து அமைவதாக வடிக்கப்பட்டிருக்கிறது பார்த்திபன் கனவு எனும் இப்புதினம்
இப்புதினம் ஒரு சோழமன்னனின் சுதந்திர வேட்கையும் அதற்காக அம்மன்னனின் இளவல் நிகழ்த்தும் போராட்டங்களாகவும் தாங்கி மலர்ந்து வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை, அரசியல், சாணக்கியம், சதித்திட்டங்கள், நரபலி என எண்ணற்ற பாதைகளில் பயணம் செய்கிறது.
1944-1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வீரமும், கலையும் சிங்கார நர்த்தனமிடும் சிந்தையைக்கவர்ந்த "சிவகாமியின் சபதம்" புதினம் வெளிவருவதற்கு முன்பாகவே 1941-1943 ஆண்டுகளில் கல்கி இதழில் தொடராக வெளிவந்த புதினம் "பார்த்திபன் கனவு". இப்புதினம் இதே தலைப்பில் நடிகர் ஜெமினிகணேசன் நடித்து 1960 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியீடு கண்டுள்ளது.
ஏற்கனவே பேரழகியும், அற்புத ஆடலரசியுமாகிய சிவகாமி தேவியின் சபதத்தைத் தமிழ்ப்பூங்காவில் நாம் கண்டோம். இங்கே . இனி அரசர் பார்த்திபனின் அந்தராத்மாவில் இடங்கொன்டு சுதந்திரப் சோழப் பேரரசுக்கு வித்தாக அமைந்திட்ட அந்த "பார்த்திபன் கனவு" தனைக் காண்போம் வாரீர்.
இப்புதினம் மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு முதல் பாகம் (10 அத்தியாயங்கள்), இரண்டாம் பாகம் (27 அத்தியாயங்கள்) மற்றும் மூன்றாம் பாகம் (40 அத்தியாயங்கள்) என படைக்கப்பட்டுள்ளது.
இக்கதையின் கதாநாயகன் சோழ இளவரசன் விக்கிரமன். மேலும் முக்கிய கதாமாந்தர்களாக பல்லவப் பேரரசர் நரசிம்மவர்மன், சோழ அரசர் பார்த்திபன், அரசி அருள்மொழித்தேவி, அரச விசுவாசியான படகோட்டி பொன்னன், பொன்னன் மனைவி வள்ளி, விக்கிரமனின் சிற்றப்பனாகிய மாரப்ப பூபதி, பல்லவ இளவரசி குந்தவி, மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் ஆகியோருடன் மேலும் பலர் வலம்வருகின்றனர்.
கதைச்சுருக்கம் : சோழ அரசு, பல்லவ அரசுக்கு கப்பம் கட்டி வரும் காலம். அப்போதைய சோழ மன்னர் பார்த்திபனுக்கு மாபெரும் சுதந்திரச் சோழப் பேரரசை நிறுவும் கனவு சிந்தையை ஆக்ரமிக்கிறது. தமது கனவை சித்திரக்குகையில் ஓவியங்களாக வரைந்து யாருமறியாமல் பத்திரப்படுத்தி வைக்கிறார்.
சுதந்திரம் கோரி பல்லவப் பேரரசுடன் போர் புரிய ஆயத்தமாகிறார் மன்னர் பார்த்திபன். தாம் போருக்குப் புறப்படும் முன் தமது இளவலாகிய விக்கிரமனை அழைத்து சித்திரக்குகையிள் தாமே வரைந்த சித்திரங்களைக் காண்பித்து சுதந்திர சோழப் பேரரசை நிறுவும் தமது உள்ளக்கிடக்கையை இளவரசனிடம் வெளிப்படுத்தி தமது ஆசையை நிறைவேற்றும்படி அறிவுறுத்துகிறார்.
தமது துணைவியாகிய அரசி அருள்மொழித்தேவியிடம் ஒரு பெட்டகத்தைக்கொடுத்து அதில் சுதந்திரச் சோழ நாட்டை ஆண்ட தமது முன்னோர்கள் உபயோகித்த வாளையும், திருவள்ளுவர் கைவண்ணத்தில் உருப்பெற்ற திருக்குறளையும் விக்கிரமன் சுதந்திர மன்னனான பின்னர் அவனிடத்தில் சேர்ப்பிக்கும்படி அறிவித்துவிட்டு போருக்குச் சித்தமாகிறார்.
இதன் தொடர்ச்சியாக பார்த்திப மன்னன் பல்லவப்பேரரசுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தி போருக்குத் தயாராகிறார். பார்த்திப மன்னர் போரில் தோல்வியைத்தழுவுகிறார். மாபெரும் வீரரான நரசிம்மவர்மனை எதிர்த்து போர் புரிந்து வீரமரணம் எய்துகிறார். உயிருக்குப் போராடும் கடைசி நொடிகளில் தன்னை நாடி வரும் ஒரு சிவனடியாரிடம் தமது இளவல் விக்கிரமனை சுதந்திர சோழ அரசின் மன்னனாக்க உதவும்படி சத்தியம் வாங்கிக்கொன்டு உயிரை விடுகிறார். அதன் தொடர்பில் சிவனடியார் அருள்மொழித்தேவிக்கும், இளவரசன் விக்கிரமனுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு அவர்களை வழி நடத்துகிறார். எனினும் கோழையும் துன்மார்க்கனுமாகிய மாரப்ப பூபதி சோழ அரசை கைப்பற்ற சதித்திட்டங்கள் இயற்றுகிறான்.
ஒரு கட்டத்தில் தமது சிற்றப்பன் மாரப்ப பூபதியின் துர்போதனையால், பல்லவ அரசுக்கு எதிராக சுதந்திர சோழ அரசை நிறுவும் அவசரமுயற்சியில் ஈடுபட்டு விக்கிரமன் கைது செய்யப்படுகிறான். பல்லவ வீதியில் கைதியாக அழைத்து வரப்படும் விக்கிரமனைக் கண்டு இளவரசி குந்தவி அவனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் தந்தை நரசிம்ம பல்லவர் விக்கிரமனை விசாரித்து சென்பகத்தீவிற்கு நாடு கடத்துகிறார். கப்பலில் கொன்டு செல்லப்படும் முன் விக்கிரமனை நாடி குந்தவி ஓடி வருகிறாள். அங்கே சிவனடியாரும் காட்சி தந்து கையை உயர்த்தி விக்கிரமனை ஆசிர்வதித்துவிட்டு, தம்மை கண்டறிய தேடி வந்த குந்தவியிடம் அகப்படாமல் மறைந்துவிடுகிறார்.
சிவனடியார் மகனைப் பிரிந்து துக்கத்தில் வாடும் அருள்மொழித்தேவியை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விக்கிரமன் , குந்தவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதில் ஈர்ப்பு கொன்டிருப்பதை அவர் அரசியிடம் தெரிவித்து தாயற்ற குந்தவியை ஏற்று அன்பு செலுத்தும்படி அறிவுறுத்துகிறார்.
பல்லவ மன்னரும், குந்தவியும், சிறுத்தொண்டர், அவர் துணைவியார் ஆகியோருடன் சோழ நாட்டிற்கு வருகின்றனர். குந்தவி அருள்மொழித் தேவியை சந்திக்கிறாள். இருப்பினும் இருவரும் மனம் விட்டுப் பழக இயலவில்லை. மகனை பிரிந்த வேதனையில் வாடும் அருள்மொழித்தேவி சிறுத்தொண்டர், அவர் துணைவியார் ஆகியோருடன் தல யாத்திரை மேற்கொள்ள புறப்படுகிறார். வழியில் அவர் கடலில் மூழ்கி, கபாலிக தலைவனால் கடத்தப்பட்டுவிடுகிறார்.
நாடு கடத்தப்பட்ட விக்கிரமனை சென்பகத்தீவு மக்கள் அன்புடன் ஏற்று அத்தீவின் மன்னாக பிரகடனப்படுத்துகின்றனர். அத்தீவு அச்சமயம் அரச வாரிசுகளற்றுப் போயிருந்தது. சுத்ந்திர மன்னனான பின்னும் தன் தாயையும், தான் பல்லவ வீதியில் மனதைப் பறிகொடுத்த பெண்ணையும் எண்ணி மனதுள் மருகுகிறான் மன்னன் விக்கிரமன்.
நவரத்தின வியாபாரியாக வேடமணிந்து மீண்டும் நாடு திரும்புகிறான்.
வழியில் ஒற்றர் தலைவர் ஒருவரால் தம்மைத் தாக்க வந்த கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டு, அவரிடமிருந்த குதிரை ஒன்றை பெற்றுக்கொன்டு தாய் நாடு நோக்கி புறப்படுகிறான். வழியில் காட்டாற்று வெள்ளம் ஒன்றில் சிக்கிக் கொள்ள படகோட்டி பொன்னனால் காப்பாற்றப்படுகிறான். எனினும் கடும் சுரத்தால் பாதிக்கப்பட்டு அவ்வழி வந்த இளவரசி குந்தவி கோக்ஷ்டியினரால் காப்பாற்றப்படுகிறான்.
சுரத்திலிருந்து மீண்ட விக்கிரமன் பொன்னன் வழி அவன் தாய் அருள்மொழி கபாலிகத் தலைவனால் கடத்தப்பட்டதையறிந்து அவரை மீட்க பொன்னனுடன் புறப்படுகிறான். அவனை அடையாளம் கண்டுகொன்ட மாரப்பபூபதி அவனை கைது செய்து காளி தேவிக்கு பலி கொடுக்க கபாலிகர்களிடம் ஒப்படைக்க முயல்கிறான். இருந்தாலும் பொன்னன் தன் சாதுரியத்தினால் விக்கிரமனை காப்பாற்றிவிடுகிறான்.
இவ்வாறாக தேடல்களும் , பூசல்களும் தொடர, பல்வேறு போராட்டங்களுக்குப்பின் இறுதியாக கபாலிகத் தலைவனிடமிருந்து தப்பித்த அரசி அருள்மொழி தமது மகன் விக்கிரமனைச் சந்திக்கின்றார். அங்கிருந்த குள்ளன் கூறிய செய்தியின் வழி மன்னர் நரசிம்மவர்மரை பலி கொடுக்க கபாலிகத் தலைவன் பிடித்து வைத்திருக்கிறான் என்பதையறிந்து விக்கிரமன் நரசிம்மவர்மரைக் காப்பாற்றுகிறான். சதிகாரர்கள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுகின்றனர். சிறுத்தொண்டர் அங்கே வந்து அனைவருக்கும் உண்மையை விளக்கி நிலைமையைச் சரிசெய்கிறார்.
கபாலிகத்தலைவனின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. மன்னன் புலிகேசியின் தமையனும் , சிவகாமியின் சபதம் புதினத்தில் புத்தபிட்சு நாகநந்தியாக வந்து வில்லத்தனங்கள் புரியும் நீலகேசியே கபாலிகத்தலைவன் என்று அனைவரும் உணர்ந்துகொள்கின்றனர். நாட்டின் நிம்மதியைச் சீர்குலைக்க. ஏற்படுத்தப்பட்ட நரபலிச் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.
மன்னரைக் காப்பாற்றியதால் இளவரசன் விக்கிரமன் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறான். சுதந்திர சோழ நாட்டின் மன்னனாக பிரகடனம் செய்யப்படும் விக்கிரமனுக்கு குந்தவி மாலையிடுகிறாள்.
தமது தந்தையின் கனவை நிறைவேற்றிய இளவரசன் விக்கிரமன் அவர் பாதுகாத்த சுதந்திர சோழ நாட்டு அரசனுக்குரிய பொக்கிக்ஷமாகிய வீரவாளையும், திருக்குறளையும் தமது உடமையாக்கிக் கொள்கிறார்.
இத்தனை செயல்களுக்கும் ஆதரவாகவும், தூண்டுகோலாகவும் விளங்கிய அந்த சிவனடியார் யாரென்பதை இறுதியில் உணர்த்துகிறார் கல்கி. மாயத்திரை அகல, மர்ம முடிச்சுகள் அவிழ அவர்...
அவர்......
.
.
.
.
.
.
.
..
...
....
யாரென்பதை அறிந்திராதவர்கள் இப்புதினத்தை வாசித்து அறிந்து கொள்ளவும்..... :) தேடல் என்ற ஒன்றுதான் வாழ்க்கை பயணத்திற்கு சுவை சேர்க்கும், தங்களின் வாசிப்புத் தேடல் தொடங்கட்டும், தொடரட்டும்...