May 10, 2009, 2:44 pm
கமுண்டின் தடுப்புக்காவல் மையத்திலிருந்து எவ்வித நிபந்தனைக்களுக்கும் உட்படாமல் உண்மையான சுதந்திரப் பறவையாக வெளிவந்த இண்ட்ராப் தலைவர் உதயகுமார் அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, நேற்றிரவு ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
47 வயதான வழக்குரைஞர் உதயகுமார் நிபந்தனைகளுடனான விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். “எந்தக் குற்றமும் புரியாத நான் ஏன் நிபந்தனைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்?”, என்ற அவரின் கேள்விக்கு பதில் அளிக்க இயலாத தடுப்புக்காவல் மைய அதிகாரிகள் சனியன் போய்த் தொலைந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவரை குண்டுக்கட்டாக தூக்கி எறிந்து வெளியேற்றினர்.
உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாக காட்டும், தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்ட உதயகுமார் கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்தின் வரலாற்றில் கையொப்பமிட்டு விடுதலை பெற்ற இதர கைதிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். இது உதயகுமாருக்கு அவருடைய தன்மானத்தில், உரிமையில் இருக்கும் திண்மையை காட்டுகிறது.
அவருக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனைகளில் ஒன்று அவர் சிறம்பானில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதாகும்.கமுண்டிங்கிலிருந்து வருகிற வழியில் பல இடங்களில், அவற்றில் ரவாங், சுங்கை பூலோ மற்றும் லாபு டோல் சாவடியும் அடங்கும், அவருக்காக காத்திருந்த ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார்.இரவு மணி 9.15 க்கு அவர் லாபு டோல் சாவடி வந்து சேர்ந்தார். அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு நல்கினர்.பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு ராசாவில் அவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக