காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்....
அவந்திகா, தன் மனங்கவர்ந்த வசந்த் எப்படியெல்லாம் இருக்கக்கூடுமென கற்பனை செய்து வைத்திருந்தாளோ, அதற்கெல்லாம் நேர்மாறாய் மிகவும் ஏமாற்றமளிப்பதாய் இருந்தது வசந்தின் தோற்றம்,
கரிய நிறத்தில், எழும்பும் தோலுமாய், ஒட்டிய கன்னங்கள், உள்ளடங்கிய கண்கள், சொட்டைத் தலை என வயோதிகரைப்போல் காட்சியளித்தான் வசந்த். உண்மையில் அதுதான் வசந்த் என்பதை அவந்திகாவின் வீட்டார் யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரும் பெருத்த ஏமாற்றமடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி திகைப்பில் ஆழ்ந்தனர்.
சூழ்நிலையைச் சமாளிக்க அவள் தந்தை மட்டும் தன்னைச் சுதாரித்துக்கொன்டு, வந்தவர்களிடமும் வசந்திடமும் சாதாரணமாக பேசி நேரத்தைக் கடத்திக்கொன்டிருந்தார். அவந்திகா ஏமாற்றமும், வேதனையும் வாட்டி எடுக்க விரைந்து அறைக்குள் திரும்பி மனம் புழுங்கி அழ ஆரம்பித்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் ஆடையை நனைத்தது.
மாப்பிள்ளை வீட்டார், வசந்தின் நிலையை பெண்வீட்டார் ஏற்கனவே அறிந்துள்ளனர் என நினைத்து வந்திருந்தனர், ஆனால் வசந்த் தன் உண்மை நிலையை மறைத்து வைத்திருந்தது அறிய வந்ததும் அவர்களின் நிலையும் தர்ம சங்கடமாகிப்போனது. அதிகம் பேசாமல் அனைவரும் அமைதியாகிவிட்டனர். மரபுக்காய் சில விடயங்களைப்பேசி , தேனீரை அருந்திவிட்டு ஒருவழியாய் விடைபெற்றுச் சென்றனர்.
வசந்த் முகம் தொங்கிப்போய் சொல்லமுடியாத வேதனையை சுமந்தபடி தலையசைத்து விடைபெற்றுச்சென்றான். அவன் கண்கள் மீண்டும் ஒருமுறை அவந்திகாவைத் தேடியது. அவள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதையறிந்து மிகவும் ஏமாற்றத்துடன் புறப்பட்டுச்சென்றான். தன் காதல் மேல் அவனுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவந்திகா தன் தோற்றத்தை பெரிதுபடுத்தி தன்னை புறக்கணிக்கமாட்டாள் எனும் மிகப் பெரிய நம்பிக்கையை அவனுள் விதைத்திருந்தது.
அவந்திகா புகைப்படத்தைவிட நேரில் பார்ப்பதற்கு பனியில் மலர்ந்த ரோஜாவைப்போல் மிகவும் இளமையாகவும், அழகாகவும் காட்சியளித்தது அவள்பால் வசந்திற்கு மேலும் ஆசையையும், காதலையும் ஏற்படுத்தியது. அவளின் பாராமுகம், தேனீரை தன்னிடம் நீட்டிய அந்த அழகிய சந்தண விரல்கள், முத்துக்களாய் ஜொலித்த விரல் நகங்கள், தன்னை ஒருமுறை பார்த்து சுருங்கிச் சிவந்த அவள் முகம் யாவும் அவனது மனத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி அவனுக்கு மிகுந்த விசனத்தை உண்டுபண்ணியது.
வீடு திரும்பிய வசந்த் முதல் வேளையாய் அவந்திகாவை தொலைபேசியில் தொடர்புகொன்டு பேச முயற்சி செய்தான், ஆனால் அவந்திகா அவனிடம் பேச விருப்பப்படவில்லை. மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான வசந்த், யாரிடமும் பேசாது தனியறையில் அண்ண ஆகாரமின்றி தன்னைச் சிறைப்படுத்திக்கொன்டான். தொடர்ந்த சில நாட்களில் உடல்நிலை வெகுவாய் பாதிக்கப்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொன்டு வந்தது. அந்த நிலையிலும் அவனது எண்ணம் முழுதையும் அவந்திகா நீக்கமற ஆக்ரமித்திருந்தாள்.
அவ்ந்திகாவின் வீட்டிலோ கோபமும், கொந்தளிப்புமாய் அனைவர் மனமும் அவதிப்பட்டுக்கொன்டிருந்தது. அவந்திகாவின் மேல் அளவற்ற அன்பு பூண்ட அவளின் சகோதரர்கள் ஆத்திரத்தில் ஆர்ப்பரித்தனர். அழகிய அவந்திகா எங்கே, வயதான கிழவரைப்போல் காட்சியளிக்கும் வசந்த் எங்கே ? கிளியை வளர்த்து யாராவது பூனையின் கையில் கொடுப்பார்களா ? இந்தத் திருமணம் நடக்கவே கூடாது என அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவந்திகாவின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பானது, வசந்தின் அழகிய எழுத்திலும், மனங்கவர்ந்த அவன் நட்பும் அவள் மனம் முழுதும் நிறைந்து
அளவிடமுடியாத காதலை அவன்பால் ஏற்படுத்திவிட்டிருந்தது. அந்த எண்ணங்களில் மூழ்கித் திளைத்த அவளால் அவற்றை மறக்கமுடியாது தவியாய் தவித்தாள், ஆனால் அழகற்ற வசந்தின் தோற்றம் அவள் மனதில் மிகுந்த அச்சத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
எப்படி இவருடன் கைகோர்த்து கணவன் மனைவியாய் வாழமுடியும் ? ஊர் உலகம் என்ன சொல்லும் ? தன் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இவரை எப்படி தன் கணவரென்று அறிமுகப்படுத்துவது ? நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் அவள் நாளும் பொழுதும் மிகவும் வேதனையடைந்தாள். அவந்திகா நடைப்பிணம்போல் மாறிவிட்டாள். இளகிய அவள் அன்பு மனம், உயிராய் மதித்திருந்த வசந்தின் காதலை தூக்கியெறிந்து வேறோரு வாழ்வுக்கு அவள் மனதை மாற்றியமைக்கும் வலிமையை அவளுக்குத் தரவில்லை.
அவந்திகாவின் மேல் குறைசொல்லிப் பயனில்லை, வசந்த் உணமை நிலையை மறைத்ததால் வந்த வினை இது என்பதனை உணர்ந்து அவள் குடும்பம் அவளுக்கு ஆறுதல் கூறியது. அவள் பெற்றோர் சூழ்நிலை சரியான பிறகு வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் எனக் காத்திருந்தனர், ஆனால் அவளின் அண்ணன்களும், தம்பிகளும் விரைவில் தங்களின் சகோதரிக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்து திருமணம் செய்து விட வேண்டும் என அவர்களின் பெற்றோரை வற்புறுத்த ஆரம்பித்தனர். அவர்கள் பயந்ததைப்போலவே வசந்த் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் எனும் செய்தி அவர்களுக்கு இடியைப்போல் வந்து சேர்ந்தது.
அவந்திகாவின் மேல் எந்தத் தப்பும் இல்லையே, உண்மையைச் சொல்லாமல் மறைத்தது வசந்தின் தவறு, அதற்கு அவந்திகா எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தகவல் கூறி அழுத வசந்தின் தாய் வசந்தின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார். இளம் வயதில் ஏற்பட்ட கடும் நோயின் தொடர் விளைவுதான் இப்போதைய அவன் அழகற்ற தோற்றம் என்பதை அவளிடம் தெளிவாக எடுத்துரைத்தார். அவந்திகாவை ஒருமுறையேனும் தன் மகன் வசந்தை வந்து கண்டுசெல்லுமாறு கெஞ்சினார்.
தாயின் கண்ணீர் மிகவும் வலிமையானது அல்லவா ? அவந்திகாவின் பெற்றோர் மனமும் இரங்கியது, தங்கள் மகள்மேல் அன்பு பூண்டதால் ஓர் உயிர் பிரியக்கூடாது, அப்படி நிகழ்ந்தால் அது தீராத பழியாய் தன் மகளை வருத்தும் என நினைத்து வசந்தை சந்திக்க அவளுக்கு அனுமதி வழங்கினர்.
வசந்த் செய்தது தவறு என்றால் அவனது உண்மையான நிலையறியாது அவனைக் காதலித்தது அவந்திகாவின் தவறுதானே ? அவளையும் குற்ற உணர்ச்சி தாக்கியது. தன்னிடம் உண்மையை மறைத்த வசந்தின் மேல் ஆத்திரம் உண்டானாலும் , வெறுப்பு உண்டாகவில்லை அவந்திகாவிற்கு.
தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்று வசந்தைச் சந்தித்து
உபசரனையான வார்த்தைகளால் ஆறுதல் கூறினாள். தொடர்ந்து நட்பில் இருப்பதாய் வாக்களித்து விடைபெற்றாள். வசந்த மிகவும் மகிழ்ச்சியடைந்து
அவளிடம் உண்மையை மறைத்த தன் செயலுக்கு மன்னிப்புக் கோரினான். புன்னகையுடன் அவன் மன்னிப்பை ஏற்றுக்கொன்டு, கூடிய விரைவில் நலமடைந்து தனக்கு கடிதம் எழுதுமாறு விண்ணப்பித்து வசந்திடமிருந்து விடைபெற்றாள் அவந்திகா.
அவந்திகாவைச் சந்தித்த பின்னர் வசந்த் விரைந்து தேறினான், மருத்துவமனையிலிருதே அவளுக்கு கடிதம் எழுதினான். வசந்தின் கடிதம் அவந்திகாவின் மனதில் மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோற்றம் குறித்த சிந்தனை மறந்து பழையபடி வசந்தின் மேல் அவளுக்கு ஈர்ப்பு ஆரம்பித்தது, காதலுக்கு கண்ணில்லை என்பது உணமைதான் போலும்.
அவந்திகா வசந்தை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாள். முதலில் மறுத்த அவளின் பெற்றோர் பின்னர் அவள் முடிவுக்கு கட்டுப்பட்டனர், ஆனால் அவள் சகோதரர்கள் தாண்டிக் குதித்து தாண்டவம் ஆடினர், திருமணம் நடக்கவே கூடாது என ஆர்ப்பரித்தனர். அவந்திகா யார் பேச்சையும் கேட்காது தன் முடிவில் தீர்மானமாய் இருந்தாள். ஆத்திரமடைந்த அவள் சகோதரர்கள் அவளிடம் பேசுவதை நிறுத்திக்கொன்டனர்.
அவந்திகாவின் பெற்றோர் அவள் விருப்பப்படியே திருமணம் செய்துவைத்தனர். அவளின் சகோதரர்கள் அவளின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் விலகினர். அவர்கள் பயந்தபடி ஏதுமின்றி, அவந்திகாவுடன் இனிதே தன் இல்லற வாழ்வைத் துவங்கினான் வசந்த். தொழிலிலும் மேல் நிலையை எட்டி செல்வந்தனாக விளங்கினான். அவர்கள் நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஆரம்பித்தனர்.
வசந்த் அவந்திகாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் , அவளது தேவைகளை நிறைவேற்றி அவள் மனதை முழுதாய் தன் வசமாக்கிக் கொன்டான். அவன் அன்பு மனம் அவனது அழகற்ற தோற்றத்தை வெனறது. அவள் அவன்மேல் ஆழ்ந்த அன்பைச் செலுத்த ஆரம்பித்தாள், அவர்கள் வாழ்வு தேனாய் இனிக்க ஆரம்பித்தது, முதலில் அவர்களைப் பழித்தவர்கள் அவர்களின் அன்னியோன்னியம் கண்டு வாய்மூடினர்.
அவர்கள் இருவருக்கும் நான்கு குழந்தைகள். மிகவும் அழகான பங்களாவில் வாழ்கிறார் அவந்திகா. விலையுயர்ந்த காரில் அழகான உடைகளுடுத்தி, நகைகளும், ஒப்பனையுமாய் அன்பான கணவர் குழந்தைகளுடன் செல்வச் செழிப்பாக பவனி வருகிறார். முன்பு பழித்த உறவுகளும், சொந்தங்களும் இப்பொழுது அன்பொழுக வரவேற்று தங்கள் தேவைகளில் அவர்களை முன்னிறுத்தி கொன்டாடுகின்றனர்.
காலங்கள் கடந்து இப்பொழுது அவர்கள் இருவரும் முதிர்ந்துவிட்ட தம்பதியர். எனினும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஆரம்பத்தில் அவளுக்கு அன்புடன் கடிதம் எழுதியதைப்போல் இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறார் வசந்த், அதே மகிழ்ச்சியும், காதலும் சூழ இன்றும் அவற்றைப் படித்து பரவசமடைந்து பத்திரப்படுத்தி வருகிறார் அவந்திகா...!!
பி.கு : அன்பு நட்புக்களே, பெண்ணின் வாழ்வை மாற்றிய பேனா நட்பு என்றவுடன் சீரழிந்த பெண்ணின் வாழ்வு என நினைத்து சோக முடிவை எதிர்பார்த்தீர்களாக்கும் :P இது ஒரு சுப முடிவைக் கொன்ட மகிழ்ச்சியான படைப்பாக்கும் :)))
அருமையான நடை நன்றாக இருந்து
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே :)
பதிலளிநீக்கு